நடராஜர் கோயில், நெய்வேலி

அருள்மிகு நடராஜர் கோயில், நெய்வேலி, கடலூர் மாவட்டம்.

+91-4144-223 500, 94438 43912, 94423 88832

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நடராஜர் (அழகிய திருச்சிற்றம்பலமுடையான்)
அம்மன் சிவகாமி(ஓசை கொடுத்த நாயகி)
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் நெய்வேலி டவுன்ஷிப்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தை சிதம்பரம் கோயிலில் சிவபெருமான் எழுதி,”மாணிக்கவாசகன் சொல்லச்சொல்ல திருவாசகம் எழுதியது திருச்சிற்றம் பலமுடையான்எனக் கையெழுத்திட்டு நடராஜர் சன்னதியில் வைத்தார். இதன் அடிப்படையில் இத்தலத்து நடராஜருக்கு, “அழகிய திருச்சிற்றம்பலமுடையான்என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடராஜர் இடதுகாலை தூக்கி ஆட, அருகே அவரது நடனத்திற்கேற்ப கையில் தாளத்துடன் அன்னை சிவகாமி ஓசை கொடுத்த நாயகிஎன்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதேஎன அவ்வைப்பாட்டி கூறியது போல, சிவபெருமான் தன்னை வணங்குவதை விட, தன் அடியார்களை வழிபடுவதையே பெரிதும் விரும்புவார். அதன் அடிப்படையில் 63 நாயன் மார்களுக்கான தனிக் கோயில் இது. சிவாலயங்களில் இவர்கள் பிரகாரத்தில் வீற்றிருப்பர். ஆனால், இங்கு 9 கலசங்களுடன் திருத் தொண்டர் திருக்கோயில்என்ற பெயரில் உள்ள தனிக்கோயிலில் அருள்பாலிக் கின்றனர். பக்தர்கள் தாங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய நாயன்மார்களை பூஜை செய்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு விநாயகர், சந்திரசேகரர், பார்வதி, மாணிக்கவாசகர், சேக்கிழார் மற்றும் தொகையடியார்களுக்கும் சிலைகள் உள்ளன.

நடராஜருக்கு சிதம்பரத்தில் பொற்சபை, மதுரையில் வெள்ளிசபை, திருவாலங்காட்டில் இரத்தினசபை, குற்றாலத்தில் சித்திரசபை, திருநெல்வேலியில் தாமிரசபை என பஞ்சசபைகள் உண்டு. இங்குள்ள நடராஜர் ஆடும் சபை பளிங்கு கற்களால் ஆனது. எனவே, இத்தலம், “பளிங்கு சபைஎன அழைக்கப்படுகிறது.

நடராஜர் சன்னதியின் மேற்கே செம்பொற்சோதி நாதர் சன்னதி உள்ளது. இதன் நெற்றியில் மூன்று கோடுகள் விபூதிப் பட்டை போல் அமைந்திருப்பதை, அபிஷேகத்தின் போது காணலாம். சுற்றுப்பகுதியில் விநாயகர், அறம்வளர்த்த நாயகி, அஷ்டபுஜ துர்க்கை, தென்முகக்கடவுள், அண்ணாமலையார், துர்க்கை, வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் அருளுகின்றனர்.

இங்குள்ள நவக்கிரக மண்டபம் வித்தியாசமாக அமைந்துள்ளது. ஒரே கல்லால் ஆன வட்டவடிவத் தேரில் சூரியன் நடுவில் தாமரை வடிவிலும், மற்ற கிரகங்கள் எட்டுத்திசையை பார்த்தபடி, அமர்ந்த தவக்கோலத்திலும் உள்ளனர். இந்த தேரை தேர்ப்பாகன் ஓட்ட, ஏழு குதிரைகள் இழுத்த நிலையில் உள்ளது. தேரைச்சுற்றி அஷ்டதிக் பாலகர்கள் உள்ளனர்.

கோயில் நுழைவு வாயிலின் கிழக்கே ஆராய்ச்சி மணியும், மனுநீதி முறைப்பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் தேவைகளை எழுதி, பூஜை நேரத்தின் போது பெட்டியில் போட்டு பின் மூன்று முறை மணியை ஒலிக்கச்செய்கிறார்கள். இந்த மனுக்கள், தினமும் காலை பூஜையின் போது, தீட்சிதரால் நடராஜர் முன் ரகசியமாக படிக்கப்பட்டு பின் எரிக்கப்படுகிறது. கோரிக்கை நிறைவேறியதும், மீண்டும் நன்றிக்கடிதம் எழுதி பெட்டியில் போட்டு செல்கின்றனர்.

மனிதர்களுக்கு பணக்கஷ்டம், மனக்கஷ்டம், நோய், வறுமை என பலவகையான கஷ்டங்கள் ஏற்படும். எல்லாம் விதிப்படி நடக்கிறது என நொந்து கொள்வார்கள். ஒவ்வொரு வரும் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுபட, அவற்றிற்குரிய பதிகங்களை பாடினால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதற்கு வசதியாக சம்பந்தப்பட்ட பதிகங்கள், அவரவர் ராசிக்கேற்ப கோயில் பிரகாரச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன.

கோயிலுக்கு கிழக்கே அமைந்துள்ள திருமுறை அரங்கத்தில், மாதத்தின் முதல் ஞாயிற்றுகிழமைகளில் திருவாவடுதுறை ஆதினத்தின் சார்பில் சைவ சித்தாந்த நேர்முகப்பயிற்சி, இலவச தேவார வகுப்புகள், திருமுறை விளக்க வகுப்புகள் நடத்தப் படுகிறது. தமிழை ஆராய்ச்சி செய்பவர்களும் இங்கு வருகின்றனர். போகர் நான்காயிரத்தில் கூறப்பட்ட விதிகளின்படி பல்வேறு மூலிகைகளைப் பயன்படுத்தி, ஐம்பொன்னால் இந்த நடராஜர் சிலையை வடித்ததாகச் சொல்கின்றனர். சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழில் புரியும் திரிமூர்த்தி வடிவம், கோயில் முகப்பில் உள்ளது. நடராஜர் கோயில் அமைக்கப்பட்ட பின் இப்பகுதி சிவபுரம்என அழைக்கப்படுகிறது. மற்ற தலங்களில் நடராஜரது பாதத்தின் கீழ் மாணிக்கவாசகர் இருப்பார். இங்கு திருமூலர் உள்ளார். வியாக்ரபாதரும், பதஞ்சலியும் நடராஜரின் இருபுறமும் வீற்றிருக்கின்றனர். சிவாலயங்களில் சிவனின் எதிர்ப்புறம் சூரியனும், சந்திரனும் அருள்பாலிப்பார்கள். இங்கு சூரியனும் பைரவரும் உள்ளனர். பத்து கரங்களுடன் அருளும் தசபுஜ பைரவர்இத்தலத்தின் சிறப்பம்சம்.

சனிபகவான் தனி சன்னதியில் அருளுகிறார்.

திங்கள்கிழமைகளில், மாலை 5.30 மணிக்கு நடராஜர் முன்பு கூட்டு பிரார்த்தனை செய்து, நோயால் பாதிக்கப்பட் டவர்களுக்கு பிரசாதம் தரப்படுகிறது. நாயன்மார்களின் குருபூஜை தினத்தன்று அபிஷேகமும், அன்றிரவு நாயன்மார் புறப்பாடும், அவர்களது வாழ்க்கை வரலாறு குறித்த சொற்பொழிவும் நடக்கிறது.

இங்குள்ள நடராஜரின் உயரம் 10 அடி 1 அங்குலம். அகலம் 8 அடி 4 அங்குலம். எடை 2 ஆயிரத்து 420 கிலோ. இதுவே உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை. இதை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற வைக்க முயற்சி நடக்கிறது. இச்சிலை ஐம்பொன்னால் ஆனது. நடராஜரின் அருகிலுள்ள சிவகாமி அம்பிகையின் சிலை 7 அடி உயரமும், 750 கிலோ எடையும் கொண்டது.

சித்திரை முதல் தேதி சிவனும் பார்வதியும், 63 நாயன்மார்கள் மற்றும் 12 திருமுறைகளுடன், குறுந்தேரில் வீதி உலா வருவார். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், திருமூலர் ஆகியோரது குருபூஜையன்று சிவனும், பார்வதியும் குறுந்தேரில் கோயில் பிரகாரத்தில் எழுந்தருளுவர்.

மன அமைதி வேண்டுபவர்கள் இங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து நிம்மதி பெறுகிறார்கள். பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக 63 நாயன்மார்களின் குருபூஜையன்று சிறப்பு பூஜை செய்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *