நடராஜர் திருக்கோயில், லிங்கிச் செட்டித் தெரு, சென்னை
அருள்மிகு நடராஜர் திருக்கோயில், லிங்கிச் செட்டித் தெரு, சென்னை.
காலை 7 மணியிலிருந்து 10 மணி வரையிலும்; மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரையிலும் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும்.
சென்னை லிங்கிச் செட்டித் தெருவிலுள்ள நடராஜர் திருக்கோயில், தில்லை நடராஜப் பெருமானின் ஆலய அமைப்பில் அமைந்துள்ளது. வடசிதம்பரம் என அழைக்கப்படும் இக்கோயில், கிழக்கிந்திய கம்பெனியில் தங்கக்காசுகள் சரிபார்ப்பு அதிகாரியாகப் பணியாற்றிய பக்தர் ஒருவரால், 1776 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சென்னையில், வடக்குக் கடற்கரையில், மேற்கு நோக்கி எழுப்பப்பட்ட முதல் திருக்கோயில் என்ற பெருமையும் இதற்குண்டு.
சாரகாள விமான அமைப்பில், மேற்கு நோக்கிய முகப்பு கோபுரம் நம்மை வரவேற்கிறது. நடுவில் நடராஜப்பெருமானும், இடப்பக்கம் சிவகாம சுந்தரியும், வலப்பக்கம் விநாயகரும் அழகிய சுதை உருவங்களாக முகப்பு கோபுரத்தை அலங்கரிக்கின்றனர்.
உள்ளே நுழைந்ததும், இடப்பக்கம் நடராஜர் சபை. ஆடல்வல்லான், அம்பாள் சிவகாம சுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோர் உற்சவத் திருமேனியராய் அருள்கின்றனர். அடுத்து தில்லை விநாயகரை தனிச்சன்னதியில் தரிசிக்கலாம். ஆனைமுகன் தரிசனம் முடிந்ததும் கோயிலுக்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ள கொடிமரம், பலிபீடம், நந்தியை வணங்கிவிட்டு, அரன் சன்னதிக்கு வருகிறோம். நடராஜர் கோயில் என அழைக்கப்பட்டாலும் கருவறையில் ஈசன் இலிங்கவடிவில்தான் அருள்கிறார். மூலவர், சிதம்பரேஸ்வரர் என்ற திருப்பெயரில் அழைக்கப்படுகிறார். மூலஸ்தானத்திற்கு மேல் இரண்டு நிலை உருத்ரகோடி விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சிவலிங்கம் காசியிலிருந்து கொண்டு வரப்பட்டதாகும். இவரை வழிபட்டால் அனைத்து செல்வங்களும் கிட்டும் என்கிறார்கள். கோஷ்டத்தில் துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, விநாயகர் ஆகியோரை தரிசிக்கலாம்.
மூலவர் சன்னதிக்கு அருகே, தெற்கு நோக்கிய சன்னதியில் அம்பாள் சிவகாமசுந்தரி அருள்கிறாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஜொலிப்பவளாம் இவள். மூலவர் சன்னதிக்குப் பின்புறம், சமயக்குரவர்கள் நால்வர், சேக்கிழார், சிறிய காசிலிங்கம் ஆகிய மூர்த்தங்களும் வழிபாட்டிற்கு அமைக்கப்பட்டுள்ளன. அருகே நவகிரக சன்னதி உள்ளது. மேற்கு நோக்கிய சிவனை வழிபட்டு நவகிரகங்களை வலம் வந்தால், அனைத்து வித கிரக தோஷங்களும் விலகுகிறதாம்.
சிவாலயங்களில் அரிய காட்சியாக பாண்டுரங்கனுக்கு இங்கு சன்னதி உள்ளது. நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார் விட்டலன். ஏகாதசி விரதமிருந்து இவரை வழிபட்டால் திருமணப் பேறு, புத்திர பாக்கியம் விரைவில் கிட்டும் என்கிறார்கள். அவருக்கு அருகே சயனக் கோலத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கோவிந்த ராஜப்பெருமாள் தனிச்சன்னதியில் எழுந்தருளியுள்ளார். அடுத்து, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கிய சன்னதியில் தரிசனம் தருகிறார்.
இத்தலத்தின் விருட்சமாக சிவனுக்கு வாழையும், பெருமாளுக்கு துளசியும் அமையப் பெற்றுள்ளன. சிறிய மடைப் பள்ளியும் உண்டு. இங்கு மூலவரையும், நவகிரக சன்னதியையும் மட்டுமே வலம் வர முடியும், மற்ற சன்னதிகளை பிரதட்சணம் செய்ய இயலாது. பிரதோஷ வழிபாடு, சோமவார வழிபாடு, ஏகாதசியன்று பெருமாளுக்கு ஆராதனை ஆகியவை நடைபெறுகின்றன. மேற்கு நோக்கிய சிவலிங்கத்திற்குச் செய்யப்படும் வில்வார்ச்சனை, உருத்ராபிஷேகம் ஆகியவை மிகச் சிறப்புடையதாகும். திருவாதிரை உற்சவம் இங்கே சிறப்பாக நடத்தப் பெறுகிறது.
சிறிய கோயிலாக இருந்தாலும் சைவத்திற்கு சிவனும், சாக்தத்திற்கு அம்பிகையும், வைணவத்திற்கு ரங்கநாதப் பெருமாள் மற்றும் பாண்டுரங்கப் பெருமாளும், காணாபத்தியத்திற்கு தில்லை மகாகணபதியும், கௌமாரத்திற்கு முருகர் வழிபாடும், சௌரத்திற்கு சூரிய வழிபாடும் இவற்றோடு நவகிரக வழிபாடும் இங்கே ஒருங்கே நடைபெறுகின்றன. மொத்தத்தில் ஷண்மத வழிபாடுகளையும் ஒருங்கே செய்து இறையருள் பெறக்கூடிய சிறப்புத்தலமாக இவ்வாலயம் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை, தம்புச்செட்டித் தெரு பஸ் நிறுத்தத்திற்கு அருகிலும், சென்னை கடற்கரை சந்திப்பு ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தத்திற்கு 1 கி.மீ. தொலைவிலும், லிங்கிச் செட்டித் தெருவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. அருகிலேயே மண்ணடி மல்லிகேஸ்வரர் மற்றும் கிருஷ்ணர் கோயில்கள் உள்ளன.
Leave a Reply