நரசிம்மேஸ்வரர் சமேத மரகதவல்லி, கோயில், தியாமுகச்சேரி

அருள்மிகு நரசிம்மேஸ்வரர் சமேத மரகதவல்லி, கோயில், தியாமுகச்சேரி @ ஐயம்பேட்டைசேரி, வேலூர் மாவட்டம்.

சைவமும் வைணவமும் இணைந்த ஓர் அற்புதக் கலாசாரம் ஒரே திருக்கோயிலில் காணக் கிடைப்பது அபூர்வம். அப்படிப்பட்ட ஒரு திருக் கோயில் காவேரிப்பாக்கத்துக்கு அருகே அமைந்துள்ளது. சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்துக்கு அடுத்து வருவது காவேரிப்பாக்கம். சென்னையில் இருந்து காவேரிப்பாக்கத்துக்கு சுமார் 100 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கத்துக்கு வலப் பக்கம் காவல்நிலையத்தை ஒட்டிச் செல்லும் சாலை சோளிங்கர் வரை நீளும். இடப் பக்கம் பிரமாண்ட ஏரியுடன் துவங்கும் இந்தச் சாலையில் வாழைத்தோப்புகள், நெல் வயல்கள் என சுமார் 7 கி.மீ. தொலைவு பயணித்தால் வருகிறது ஐயம்பேட்டைசேரி எனும் கிராமம். இதை தியாமுகச்சேரி என்றும் அழைக்கிறார்கள். திசைமுகன்சேரி என்பது தியாமுகச்சேரி என ஆகி இருக்கிறது.

திசைமுகன் என்பது பிரம்மாவைக் குறிக்கும். பிரம்மனின் விருப்பப்படி அவருக்கு திருமால், பரம பதநாதராக இத் திருத்தலத்தில் காட்சி

கொடுத்தாராம்.

காவேரிப்பாக்கம் அல்லது சோளிங்கரில் இருந்து பேருந்தில் வந்தால் ஐயம்பேட்டை சேரியில் இறங்க வேண்டும். இங்கிருந்து பிரிந்து செல்லும்

சாலையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவு நடந்தால், இந்த கோயிலை அடையலாம். இது ஒரு சிவ ஸ்தலம். ஆனால், இந்த ஈஸ்வரரின் பெயர் நரசிம்மேஸ்வரர். திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்ததைக் குறிக்கும் திருநாமம்தான் ஈஸ்வரரின்

பெயர். இந்த நரசிம்மேஸ்வரரின் கருவறை விமானத்தில் கோவர்த்தன மலையைத் தூக்கி நிற்கும் கிருஷ்ணர், காளிங்க நர்த்தன கண்ணன், பக்தர்களுக்கு அருளும் பரமபதநாதர், ஆக்ரோஷ நரசிம்மர், சிவலிங்கத்தை வணங்கும் நரசிம்மர் என்று வைணவம் தொடர்பான சுதைச் சிற்பங்கள் பல காணப்படுகின்றன. இதன் ஒரு பகுதியில் ஆஞ்சநேயரும் காட்சி தருகிறார். பழைமைக்கு சாட்சியான இந்தச் சிற்பங்கள் சிதைந்தும், சீர் குலைந்தும் காட்சி தருகின்றன.

கயிலைவாசன் குடி கொண்டிருக்கும் இந்த ஆலய விமானத்தில், வைணவ சம்பிரதாயங்களைச் சொல்லும் சுதைச் சிற்பங்கள் வந்தது எப்படி என்ற கேள்விக்கு விடை தெரிந்து கொள்ள பிரகலாதனின் அவதாரக் கதையைத் தோண்ட வேண்டும். ‘காஞ்சி புராணம்இதை விரிவாகச் சொல்கிறது.

 

கடும் தவம் இருந்து ஈசனிடம் பல வரங்களைப் பெற்ற இரண்யன் எனும் அசுரன், தேவர்களையும் முனிவர்களையும் பெரும் தொல்லைக்கு ஆளாக்கி வந்தான். தானே இந்த உலகுக்கு அரசன் என்கிற இறுமாப்பு இரண்யனிடம் சேர, அவனது அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் தேவர்கள் அனைவரும் திரண்டு மகா விஷ்ணுவிடம் சென்று, தாங்கள் படும் துயரம் குறித்து முறையிட்டனர். ஈசனிடம் இரண்யன் பெற்றுள்ள வரங்களையும் அவற்றின் தன்மையையும் தேவர்களுக்கு எடுத்துச் சொல்லி, ‘இரண்யனை அழிப்பது சாதாரண விஷயம் அல்ல. அரிய வரங்கள்

பெற்றவன் அவன். எனினும் கவலை வேண்டாம். விரைவிலேயே உங்களது துயரம் தீரும்என்று ஆறுதல் சொல்லித் திருப்பி அனுப்பி வைத்தார் மகாவிஷ்ணு. திருமாலின் திருவுளப்படி இரண்யனுக்கு மகனாக பிரகலாதன் அவதரித்தான். ஆனால், அவனோ, நாராயணனின் பரம பக்தனாக இருந்தான். நாட்டில் உள்ள அனைவரும் இரண்யாய நம:’ என்று பயத்துடன் சொல்லும்போது, பிரகலாதன் மட்டும் துணிவுடன் நாராயணாய நம:’ என்று சொல்லி வந்தான். இரண்யன் எவ்வளவு மிரட்டியும் பிரகலாதன், தான் கொண்ட விஷ்ணு பக்தியில் இருந்து மாற வில்லை. மகன் என்றும் பாராமல் பல சந்தர்ப்பங்களில் பிரகலாதனைக் கொல்லத் துணிந்தான் இரண்யன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விஷ்ணு, பிரகலாதனைக் காத்து

அருளினார். கோபத்தின் உச்சிக்கே போனான் இரண்யன். ‘எங்கே இருக்கிறார் உன் விஷ்ணு?

காட்டு அவரை; கபளீகரம் செய்கிறேன்என்ற இரண்யனுக்கு, ‘தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார் என் ஹரிஎனப் பதில் சொன்னான் பிரகலாதன். ‘இதோ, இந்தத் தூணில் இருக்கிறானா உன் விஷ்ணு?’ என்று ஒரு தூணைக் குறிப்பிட்டுக் காட்டிய இரண்யனுக்கு, ‘ஆம்என்று தலை அசைத்தான் பிரகலாதன். தன் கையில் இருந்த ஆயுதத்தால், அந்தத் தூணை இரண்யன் பிளக்க,

உள்ளிருந்து நரசிம்மம் கிளம்பி வந்தது. அதன் பின், ஈசனிடம் இரண்யன் வாங்கிய வரத்துக்கிணங்க அவனை அழித்தார் நரசிம்ம மூர்த்தி. தன் கை நகங்களாலேயே இரண்யனின் மார்பைப் பிளந்து ஒரு துளி ரத்தம் கூடக் கீழே சிந்தாமல் அதைக் குடித்தார். மடிந்தான் இரண்யன். அவனுடன் நிகழ்த்திய உக்கிரமான போரின் விளைவாக, நரசிம்மத்தின் வெறி அதிகமானது. இரண்யனின் உயிரற்ற உடலைக் கழுத்தில் மாலையாகப் போட்டபடி சுழன்று ஆடினார். தேவர்களால் அவரைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. பிரகலாதன் முயன்றான்; முடியவில்லை. தேவியான மகாலட்சுமி தன் மணாளனை சாந்தப்படுத்த முயன்றாள்; சமாதானம் கிட்டவில்லை. இந்நிலையில், பிரம்ம தேவனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு கயிலாயம் சென்றனர் தேவர்கள். ‘மாலவனை சமாதானப்படுத்த மகாதேவன் வர வேண்டும்எனக் கோரிக்கை வைத்தனர். செவி சாய்த்தார் மகேசன்.

நரசிம்மத்தின் முன் சரபராக வடிவெடுத்து வந்த மகேசன், அவரை அமைதிப்படுத்தி, வெறியைத் தணித்தார். பரந்தாமன் சாந்த சொரூபி ஆனார். தன்னை சாந்தப்படுத்திய ஈஸ்வரனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அங்கேயே ஒரு இலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் நரசிம்ம மூர்த்தி. ஈசனும் இன்முகத்துடன் அங்கிருந்து மறைந்தார்.

இந்த நிகழ்வு நடந்த திருத்தலம் இதுதான். அந்த நரசிம்ம மூர்த்தி பிரதிஷ்டை செய்து வழிபட்ட இலிங்கத் திருமேனியே இன்று நரசிம்மேஸ்வரராக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அதை உறுதிப் படுத்தும் வகையில்தான் நரசிம்மேஸ்வரரின் கருவறை விமானத்தில், இலிங்கத்தை வழிபடும் நரசிம்மரின் சுதைச் சிற்பம் காணப்படுகிறதுஎன்கிறார் உள்ளூர்ப் பெரியவர் ஒருவர். ‘இது நிகழ்ந்தது இங்கல்ல. காஞ்சிபுரத்தில்தான் நடந்தது. அங்கே நரசிங்கீஸ்வரர் என்ற பெயரில் ஒரு சிவஸ்தலம் இருக்கிறதுஎன்கிறார் ஆராய்ச்சியாளர் ஒருவர். ஆனால், இதற்கான தலம் எங்கே இருக்கிறது என்று அவரால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. பல ஆலயங்கள் சம்பந்தப்பட்ட புராணக் கதைகள், தலைமுறை தலைமுறையாக செவிவழியாகவே இருந்து வருகின்றன.

திருமால் வழிபட்ட சிவ ஸ்தலங்கள் காஞ்சிபுரம் பகுதியில் நிறைய இருக்கின்றன. இதில் தசாவதாரங் களைச் சொல்லும் தலங்களும் அடங்கும்.

காஞ்சியில் கச்சபேஸ்வரர் (கூர்மவதாரம்: கச்சபம் என்றால் ஆமை), தாமலில் வராஹீஸ்வரர் (வராஹ அவதாரம்: வராஹம் என்றால் பன்றி),

மாமண்டூர் அருகே வேகாமங்கலத்தில் பரசு ராமேஸ்வரர் (பரசுராம அவதாரம்),

வாலாஜாபாத் அருகே திம்மராஜ பேட்டையில் ராமேஸ்வரர் (ராம அவதாரம்).

இப்படிப் பத்து அவதாரங்களுக்கும் திருத்தலங்கள் அமைந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

சற்றே பிரமாண்டமான ஆலயம். தெற்குப் பக்க நுழைவாயில் வழியாக உள்ளே சென்றால் விஸ்தாரமான மகா மண்டபம். முதலில் தரிசனம் தருவது அம்பாள். சிறிய அர்த்த மண்டபம். அதைத் தாண்டி கருவறைக்குள் மரகத வல்லி அம்மன். தமிழில் பச்சை அம்மன். வெளியே சிம்ம வாகனம். நரசிம்மரின் உக்கிரத்தைத் தணிக்க, இந்தப் பச்சை அம்மனும் குளிர்ச்சியான தன் கதிர்களை அவர் மேல் செலுத்தினாளாம். பாசம், அங்குசம், அபயம், வரதம் தாங்கிய நான்கு திருக்கரங்கள். சுமார் மூன்றரை அடி உயரத்தில் அருள் வழங்கும் இந்த நாயகியை முதலில் தரிசிக்கிலாம். ஆலயத்தில் இந்த விஸ்தாரமான மகா மண்டபம், நரசிம்மேஸ்வரரின் விமானம், அம்பாளின் விமானம்இவை எல்லாம் செங்கல் கட்டுமானம். மற்றதெல்லாம் கருங்கல் திருப்பணி. மகா மண்டபம், பழுதுபட்டுக் காணப்படுகிறது. ஈஸ்வரனுக்கும் அம்பாளுக்கும் வழிபாடுகள் நடக்கின்றன. பரிவார மூர்த்தங்களான வீரபத்திரர், கால பைரவர், சூரியன், சண்டிகேஸ்வரர், வள்ளி தெய்வானை உடனுறை ஆறுமுகர், விநாயகர்கள் ஆகிய தெய்வங்கள் நரசிம்மேஸ்வரரின் கருவறை அருகே காட்சி தருகின்றனர்.

இறைவனின் சந்நிதி கிழக்கு நோக்கியது. இந்த நரசிம்மேஸ்வரரை ஒரு யானையே அழகாக வலம் வர முடியும். அந்த அளவுக்கு விசாலமாக இருக்கிறது கருவறை.

பளபளக்கும் அழகான லிங்கத் திருமேனி. நாகாபரணம் அணிந்து அருள் பாலித்து வருகிறார். திருமாலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருவடிவம். இவரை வணங்கினால், கோபம் தணியும் என்கிறார்கள். அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வணங்கினால், டென்ஷன் குறைந்து மனம் லேசாகுமாம். பெரிய பிரகாரம். ஆலயத்தைச் சுற்றி இருக்கிற ஏராளமான நிலங்கள், கோயிலைச் சேர்ந்ததாம். கோஷ்டப் பகுதியில் பீடங்கள் மட்டுமே இருக்கின்றன (பிரம்மாவுக்கு பீடமே இல்லை). விக்கிரகங்களை சமூக விரோதிகள் களவாடிச் சென்று விட்டனராம்.

பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி விக்கிரகங்கள் ஆலயத்தில் இல்லை. ஆனால், இந்தக் கோஷ்டங்களுக்கு மேலே விமானத்தில் சுதைச் சிற்பங்களாக இவை காணப்படுகின்றன. பிராகாரத்தில் சண்டிகேஸ்வரருக்கும் நவக்கிரகங்களுக்கும் தனி சந்நிதிகள் இருக்கின்றன.

பாதுகாப்பு சற்று குறைவாக இருந்ததால் திருட்டுகள் முன்பு நடந்துள்ளனவாம். ஆலயத்துக்கென்று சுமார் 50 கிலோ எடை கொண்ட பிரமாண்ட மணி இருந்ததாம். இந்த மணியை ஒலிக்க விட்டால், அதன் ஓசை காவேரிப்பாக்கம் வரை கேட்குமாம். சுமார் நான்கு வருடத்துக்கு முன் இந்த ஆலயத்துக்குள் புகுந்த கொள்ளையர், பிரமாண்ட மணியைத் திருடிச் சென்றுள்ளனராம். அதோடு விமான கலசம், பூஜா பாத்திரங்கள் போன்றவற்றையும் களவாடிச் சென்று விட்டார்களாம். பிராகார முடிவில் நந்திதேவர் மண்டபம். அழகான வடிவம். கருங்கல் ஜன்னல் வழியே நரசிம்மேஸ்வரரைப் பார்த்தபடி இந்த நந்தி தேவர் அமைந்துள்ளார். இவருக்கு எதிரில் ஆலய விதானத்தில் உள்ள சிறு கோபுரத்தில், ரிஷபாரூடராக தரிசனம் தருகிறார் சிவபெருமான். சுதைச் சிற்பமாக. தலையில்கங்கை, இடது மடியில் உமையை அமர்த்திக் காட்சி தருகிறார் இந்த பெருமான். ஒரு காலத்தில், இங்கு (கிழக்கு நோக்கி) நந்திதேவருக்கு சற்றுத் தள்ளி பெரிய ராஜ கோபுரம் இருந்தது என்கிறார்கள். அருகிலேயே, திருக்குளம். பாழ்பட்டுக் கிடக்கிறது. ஆலயத்துக்கென விநாயகர், வள்ளி தேவசேனா சுப்ரமணியர், பார்வதி, பரமேஸ்வரர் போன்ற உற்சவர் விக்கிரகங்கள் பாதுகாப்பில் உள்ளன.

ஒரு காலத்தில் குருக்களின் பூஜையோடு மடப்பள்ளியும் இங்கு பிரமாதமாக இருந்து வந்திருக்கிறது. அக்ரஹாரமும் இருந்திருக்கிறது. முன்னர், கார்த்திகை சோமவாரம், மகா சிவராத்திரி, பிரதோஷம், ஆருத்ரா தரிசனம், அன்னாபிஷேகம் போன்ற வைபவங்களைக் காண பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வருவார்கள். இப்போதும் இந்தத் திருவிழாக்கள் சுமாரான அளவில் நடை பெறுகின்றன என்றாலும் உள்ளூர்க்காரர்களைத் தவிர கூட்டம் அதிகம் இல்லைஎன்கிறார் உள்ளூர்வாசி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *