மத்தியஸ்த நாதர் கோயில், தாருகாபுரம்

அருள்மிகு மத்தியஸ்த நாதர் கோயில், தாருகாபுரம், திருநெல்வேலி மாவட்டம்.

இவ்வுலகம் பஞ்ச பூதங்களாலானது. இதில் எண்ணற்ற உயிர்களையும் படைத்த சிவபெருமான், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைப் புரிந்து இயக்கி வருகிறார். உயிர்களின் வினைகளை வேரொடு அழிக்க இலிங்க வடிவில் பல தலங்களிலும் கோவில் கொண்டுள்ளார். அத்தகைய தலங்களில் ஒன்று தாருகாபுரம் மத்தியஸ்த நாதர் ஆலயம். மக்கள் தங்களுக்குள் எவ்விதப் பிணக்கும் இன்றி ஒன்றுபட்டு வாழவேண்டும் என்னும் உண்மையை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது இவ்வாலயம்.


முற்காலத்தில் மாஞ்சோலைகளும் பூஞ்சோலைகளும் நிறைந்து, மனதைக் குளிர வைக்கும் இந்தப் பகுதி தாருகாவனம் எனப்பட்டது. மன்னர்களும் தவயோகிகளும் மக்களும் இளைப்பாறிச் செல்லும் பகுதியாக இது விளங்கியது. சேர, சோழ, பாண்டிய நாடுகளின் எல்லையில் இருந்தது. அதனால் இதைக் கைப்பற்ற மூவேந்தர்களுக்கிடையே அடிக்கடி சண்டை மூண்டு வந்தது. தங்கள் வசம் இருக்கும் பகுதியை மற்றவர்கள் பறித்துக் கொள்வார்களோ என்ற அச்சம் இருந்ததால், எந்த நேரமும் போருக்குத் தயாராக இருக்க வேண்டியதாயிற்று. மனதுக்குள் பிணக்கிருந்தாலும் மேலுக்கு நட்பு பாராட்டிக் காலத்தைக் கடத்தி வந்தார்கள்.


மூவேந்தர்களுக்கிடையே இருந்த இப்பிரச்சினை நாளாக நாளாக விஸ்வரூபமெடுத்தது. எனவே இந்தப் பிரச்சினையை யார் முன்னிலையிலாவது பேசித் தீர்த்துக்கொள்வது என்னும் முடிவுக்கு வந்தனர். யார் முன் பேசித் தீர்த்துக்கொள்வது என்று குழம்பினார்கள். இறுதியாக தங்கள் பிரச்சினையைத் தீர்க்க வல்லவர் அகத்தியர் ஒருவரே என்னும் முடிவுக்கு வந்த அவர்கள், அகத்தியரைக் காண தென்திசை நோக்கிப் பயணமானார்கள். அவ்வாறு வரும்போது தாருகாவனத்தில் இளைப்பாறினார்கள்.


அப்போது முனிவர் ஒருவர் அங்கு வந்தார். அவரை மூவேந்தர்களும் வரவேற்க, அவர்களை உற்று நோக்கிய முனிவர், “உங்கள் மூவருக்குள்ளும் ஒரு பிரச்சனை இருக்கிறதல்லவா?” என்று கேட்டார்.
அவர்கள் அவரைப் பார்த்து ஆம்என்றனர்.


உங்கள் மனதுக்குள் ஒருவர் பகுதியை மற்றவர் பிடித்து விடுவார்களோ என்ற எண்ணம் நெடுநாட்களாகப் புகைந்து கொண்டிருக்கிறதுஎன்று முனிவர் கூறினார். அவர்கள் மேலும் ஆச்சரியத்துடன்,”முனிவரே! எங்கள் மனதுக்குள் இருப்பதை அப்படியே கூறும் நீங்கள் யார்?” என்று கேட்டனர்.
நான் யார் என்பது அப்புறம். நீங்கள் சம்மதித்தால் நான் மத்தியஸ்தராக இருந்து உங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறேன்என்றார் முனிவர். மூவரும் தங்களுக்குள் ஆலோசித்து, முனிவரின் தீர்ப்பை ஏற்பதாகக் கூறினர்.


சோழ மன்னா, நீ வாய்க்கால் பகுதிகளை வைத்துக்கொள். சேர மன்னா, நீ ஏரிப் பகுதிகளை வைத்துக்கொள். பாண்டிய மன்னா, நீ குளங்கள் உள்ள பகுதிகளை வைத்துக்கொள்என்று கூறினார் முனிவர்.


அவரின் தீர்ப்பு மூவருக்கும் ஏற்றதாயிருந்ததால் ஒத்துக்கொண்டனர். “எங்களின் பகையைத் தீர்த்து வைத்த நீங்கள் யார் என்று இப்போதாவது சொல்லுங்கள்என்று மூவரும் கேட்க, புன்னகைத்த முனிவர் மறுகணம் மறைந்து போனார். அவர் நின்றிருந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது. இதைக் கண்டு மெய்சிலிர்த்து நின்றனர் மூவேந்தரும்.
ஆதியந்தமில்லாத அந்தப் பரம்பொருளே மனித வடிவில் வந்து நம் மனக்குறையைப் போக்கியது யாருக்கும் கிட்டாத மிகப்பெரும் பேறுஎன்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். சுயம்பு இலிங்கத்துக்கு அங்கேயே கோவிலும் எழுப்பினர்.


மன்னர்களின் மனப் பிணக்கைத் தீர்த்து வைத்ததால் இத்தல ஈசன் பிணக்கறுத்த மகாதேவர், மத்தியஸ்த நாதர் என்னும் பெயர்களில் கோயில்கொண்டுள்ளார்.


பெரும்பாலான ஆலயங்களில் ஈசனின் இடப்புறம் எழுந்தருளியிருக்கும் அன்னை இவ்வாலயத்தில் வலப்புறம் அங்காள பரமேஸ்வரி என்னும் பெயருடன் சந்நிதி கொண்டுள்ளாள். மூவேந்தர்கள் ஆலயம் அமைத்தபின் சில நூற்றாண்டுகள் கழித்து, கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியன் என்னும் மன்னன் ஆலயத்தை விரிவுபடுத்தி மகாமண்டபம் போன்றவை அமைத்து திருப்பணிகள் செய்தான் என்று கல்வெட்டு கூறுகிறது.

முற்காலத்தில் தாருகாவனம் என்றழைக்கப்பட்ட இப்பகுதி பின்னர் தாருகாபுரம் என்று வழங்கப்பட்டு வருகிறது. “இந்தக் கோவிலையொட்டி நாதகிரி என்னும் மலை உள்ளது. இதில் சித்தர்கள் பலரும் அடங்கியுள்ளனர். அவர்களுக்கு வைகாசிப் பௌர்ணமியன்று சிவபெருமான் தோன்றி காட்சியளித்தார். எனவே பௌர்ணமி நாட்களில் இங்கு கிரிவலம் வருவது மிகவும் சிறப்பானது. நினைத்தவை கைகூடும் என்பதோடு பாவ விமோசன கிரிவலமாகவும் இது அமைகிறதுஎன்கிறார் அர்ச்சகர்.
பஞ்ச பூதங்களில் ஒன்று நீர். இவ்வாலயத்தின் கருவறையிலுள்ள இலிங்கத்தைச் சுற்றி எப்போதும் நீர் சூழ்ந்திருக்கும். எனவே இது நீர்த்தலம் எனப்படுகிறது. இத்தலத்தின் மற்றுமொரு சிறப்பு இங்குள்ள தட்சிணாமூர்த்தியாகும். சிவபெருமானின் அம்சமான இவர் நவகிரகங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குவதால், இங்கே தனியாக நவகிரக சந்நிதி இல்லை. தட்சிணாமூர்த்தியை வழிபட்டாலே நவகிரகங்களின் அருளையும் சேர்த்துப் பெறலாம்.
மன்னர்களால் வழங்கப்பட்ட 105 ஏக்கர் நிலப்பரப்பு இந்த ஆலயத்திற்குச் சொந்தமாக உள்ளது. அதிலிருந்து வரும் வருவாய் ஆலய பராமரிப்புக்குப் பயன்படுகிறது. மன்னர்கள் ஆட்சிக்குப் பிறகு ஜமீன்களின் ஆட்சி நிலவியதால், அவர்களின் வழிவந்த தலைவன் கோட்டை ஜமீன்தார் ராஜாராம் சேவுக பாண்டியன் பராமரிப்பில் இருக்கிறது இவ்வாலயம்.


கோரிக்கைகள்:
நாட்பட்ட பிரச்சினைகள், நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்து வரும் வழக்கு, குடும்ப விவகாரங்கள் போன்றவை சுமுகமாக முடிய இங்கு வந்து வழிபட்டு பயனடைகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *