நாகமல்லீஸ்வரர் திருக்கோயில், நாலூர்

அருள்மிகு நாகமல்லீஸ்வரர் திருக்கோயில், நாலூர் (மீஞ்சூர் வழி), திருவள்ளூர் மாவட்டம்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள நாலூரில் இருக்கிறது மிகப்புராதனமான சிவாலயம் ஒன்று. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் இது.

ஆனால் கோயிலை நெருங்கின போது கண்டது முட் செடிகள், செடி, கொடி, புதர்கள் மதிலில் முளைத்த அரசமரம் என்று பெரிய புதர் ஒன்றுதான். சிறப்பும் செழிப்புமாக ஒரு காலத்தில் திகழ்ந்த கோயில். சிதைந்தும், சீரழிந்தும் கிடக்கிறது. செருப்புக்காலோடு போகக் கூடாது என்பார்கள். ஆனால் நெருஞ்சி முள் குத்துவதால் , செருப்புடன் தான் செல்லமுடியும். புதரை விலக்கி எட்டி பார்த்தால் புழுதிபடிந்த நிலையில் நாகமல்லீஸ்வரரின் இலிங்கம் உள்ளது. ஆண்டுகள் பல கடந்து விட்டன. மேனியெலாம் திருநீறுக்கு பதில் புழுதி படர்ந்திருக்கிறது.

அசுரனாக இருந்து அமுதத்தை ஏமாற்றிப் பெற்றதால், இராகுவுக்கும் கேதுவுக்கும் தோஷம் பற்றிக்கொண்டது. அதோடு காட்டிக்கொடுத்த சூரிய சந்திரனோடு பகையும் எழுந்தது. பகை விலகவும், தோஷம் தொலையவும் பல்வேறு தலங்களில் சிவனின் இலிங்க திருமேனியை அமைத்து வழிப்பட்டனர். அப்படி இத்தலம் வந்த போது இங்குள்ள தாமரைத் தடாகத்தில் நீராடிவிட்டு சிவனுக்கு ஆராதனை புரிய நினைத்தனர். அப்போது பூத்திருந்த தாமரைகளுள் ஒன்று பொன் வண்ணமாக மாறியது. வியப்புடன் அவர்கள் அதை நோக்கினர். காரணம் புரிந்தது. இறைவனையும் இறைவியையும் ஒரு சேர வழிபடுவதையும் மறந்து ஈசனை மட்டுமே பூஜிப்பதால் தான் தங்களின் தோஷம் தொலையாமல் இருப்பதாக உணர்ந்தார்கள். இராகுவும், கேதுவும், அதனால், அம்மைக்கும், அப்பனுக்கும் வடிவங்கள் அமைத்து, மல்லிகையாலும் தமரையாலும் அர்ச்சனை செய்து வணங்கினார்கள். இறைவனும், இறைவியும், பாம்பு கிரகங்களின் தோஷம் நீங்க அனுகிரகம் புரிந்தார்கள். அதோடு, “இத்தலம் வந்து எம்மை வழிபடுவோரை நீங்கள் வாட்டாமல் இருக்க வேண்டும்என்று ஆணையிட்டார்கள். பாம்பு கிரகங்கள் வழிபட்ட அப்பகுதியில் பரமனுக்கும் பார்வதிக்கும் ஓர் ஆலயம் அமைந்தது. நாகங்கள் மல்லிகையால் அர்ச்சித்து வழிபட்டதால், நாகமல்லீஸ்வரர் ஆனார் ஈசன். தங்க நிறத் தாமரையில் தன் வடிவம் காட்டியதால், சொர்ணாம்பிகை ஆனாள் அம்மன்.

கிழக்கு நோக்கி சன்னதியில் சதுர ஆவுடைமீது நெடிய பாணமாக இலிங்க திருமேனியராக நாகமல்லீஸ்வரர் தெற்கு நோக்கிய சன்னதியில் உள்ளார். பொற்றாமரை என மின்னிடும் எழிலுடன் சொர்ணாம்பிகையும் உடனுள்ளாள். உள்ளே இருப்பதாகச் சொல்லப்படும் கணபதி, கந்தன், தட்சிணாமூர்த்தி போன்றவர்களைக் காணமுடியாதபடி புதர் சூழ்ந்து இருளாக இருக்கிறது கோயில்.

சங்கரனும் சங்கரியும், பல காலம் கம்பீரமாகக் கோயில் கொண்டு, தரிசிப்போர் வாழ்வில் தடைகளை நீக்கி, சர்ப்பதோஷம் விலக்கி சந்தோஷம் அளித்தனர். காலமாற்றத்தில் எப்படியோ மறைந்து மரம், செடி, கொடிகள் மண்டிப்போய் மறைந்து போயிற்று கோயில்.

நந்தி மட்டுமே கோயிலின் வாசலில் தனித்துள்ளார்.

ஒன்றிரண்டு குழந்தைகளை பெற்றவர்கள் அநாதையாக விடப்படுவதே பாவம் என்றால், உலக மக்கள் அனைவருக்கும் அம்மை அப்பனாக வளங்கும் ஈசனும் ஈசுவரியும் இங்கே ஆதாரிப்பார்இன்றிப் பாழ்பட்ட ஆலயத்தில் எவரேனும் வருவாரா என எதிர் பார்த்துக் காத்திருப்பது பரிதாபம்.

வழிகாட்டி:

சென்னை கும்மிடிபூண்டி புறநகர் ரயில் மார்க்கத்தில் மீஞ்சூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ, தொலைவிலும், மீஞ்சூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீட்டர் தொலைவிலும் உள்ள நாலூர் எனும் தலத்தில் உள்ளது இந்த சிவாலயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *