மூவர் திருக்கோயில், அழகப்பன் நகர், மதுரை

அருள்மிகு மூவர் திருக்கோயில், அழகப்பன் நகர், மதுரை.

+91 94431 06262

காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சிவன்
அம்மன் பார்வதி, சரஸ்வதி, லட்சுமி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் அழகப்பன் நகர், மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களை இறைவன் செய்கிறார். இதைக் குறிக்கும் வகையில் இந்தக் கோயிலில் படைப்புக்கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களது தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதிக்கும் இங்கு சன்னதிகள் உள்ளன. எனவே, இது மூவர் ஆலயம் எனப்படுகிறது. இங்குள்ள விநாயகர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு செல்வவளமும், வேண்டிய காரியசித்தியையும் அருளும் விதத்தில் உள்ளதால் செல்வ சித்தி விநாயகர்எனப் பெயர் பெற்றுள்ளார்.

இங்குள்ள அனைத்து சன்னதிகளிலும் விநாயகர் முதல் அனுமன் வரை அனைத்து கடவுளரின் முகங்களிலும் புன்னகை ததும்பும் காட்சியைக் காண முடிகிறது. கடவுள் நமது வேண்டுதலை இன்முகத்துடன் கேட்பது போல உள்ளது. விஜயவாடாவை நினைவூட்டும் வகையில் இங்கு கனகதுர்க்கை சன்னதி அமைந்துள்ளது. ராகுகாலத்தில் கனகதுர்க்கையை வழிபாடு செய்பவர்களின் விருப்பங்கள் விரைவில் நிறைவேறும். பரத நாட்டியம் கற்கத் தொடங்கிய ராஜசேகர பாண்டிய மன்னனுக்கு இடைவிடாது நடனமாடும் சிவன் மீது இரக்கம் உண்டானது. வெள்ளியம்பல நடராஜர் சன்னதிக்குச் சென்று,”ஈசனே! ஓயாது எப்போதும் ஆடிக் கொண்டிருக்கிறாயே! உன் கால்கள் நொந்து போகுமே! எனக்காக கால்மாறி ஆடி சற்று ஓய்வெடுத்துக் கொள்வாயாக. இல்லாவிட்டால் இப்படியே உன் முன் உயிர் துறப்பேன்என்று வேண்டினான். பாண்டியனின் பக்திக்கு இணங்கிய இறைவனும் மதுரையில் இடக்காலை ஊன்றி கால்மாறி ஆடினார். இதைப் போற்றும் வகையில் இக்கோயில் வெள்ளியம்பல நடராஜருக்குச் சன்னதி அமைந்துள்ளது. திருவாதிரை நாளில் சிறப்பு ஆராதனை இவருக்கு நடக்கிறது.

ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வருடன், சன்மார்க்கத்தை போதித்த வள்ளலாரையும் இணைத்து சன்னதி அமைத்துள்ளனர்.

உழவாரப்படை என்னும் கருவியைத் தாங்கி, தாசமார்க்கத்தைப் பின்பற்றி ஈசனை அடைந்தவர் நாவுக்கரசர். ஒவ்வொரு ஆங்கில மாதம் கடைசி ஞாயிறன்றும் இக்கோயிலில் உழவாரப்பணி நடக்கிறது. ஆர்வத்தோடு கலந்து கொள்ளும் அடியவர்களைப் பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடக்கும் விழாவில் பரிசு கொடுக்கிறார்கள்.

இங்கு உண்டியல் கிடையாது. சன்னதிகளில் விளக்கேற்றுவதை கோயில் நிர்வாகமே செய்கிறது. நாள்தோறும் காலையில் ஆலயத்தின் அனைத்து மூர்த்திகளுக்கும் அபிஷேகம் செய்து, ஆடை மாற்றப்படுகிறது. ஆலயத் தூய்மை கருதி யாரும் கோயிலுக்குள் விளக்கேற்ற அனுமதிப்பது இல்லை. கிரகணகாலம், தீட்டுக்காலம் என்று எதற்காகவும் நடைசாத்தும் வழக்கமும் இல்லை.

மதுரையில் நடக்கும் மீனாட்சி திருக்கல்யாணம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதை நினைவூட்டும் வகையில் இங்குள்ள மூலவர் சன்னதியில் சிவலிங்கத்திற்கு பின்புறம் விஷ்ணு, மீனாட்சி, சிவன் மூவரும் வரிசையாக வீற்றிருக்கின்றனர். மீனாட்சியம்மனின் கல்யாணக்கோலத்தை குறிப்பிடும் வகையில் இச்சன்னதி அமைந்துள்ளது. இங்குள்ள சிவலிங்கத்தை சனிபிரதோஷம் மற்றும் மகாசிவராத்திரி நாட்களில் தங்க நாகாபரணத்தில் அலங்கரிக்கின்றனர்.

பக்தியுள்ள ஆண்,பெண் யாராக இருந்தாலும் இக்கோயில் கருவறைக்குச் சென்று பூஜை செய்ய அனுமதிப்பது தனிச்சிறப்பாகும்.

இக்கோயிலில் பாலமுருகன், ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, நந்தீஸ்வரர், வெங்கடாசலபதி, சக்கரத்தாழ்வார், கால பைரவர், நாகலிங்கம், கருப்பணசாமி ஆகியோர் பரிவார தேவதைகளாக அமைந்துள்ளனர். செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் பெண்களும், மற்ற நாட்களில் ஆண்களும் பூஜை செய்யும் பணியைச் செய்கின்றனர். பூக்களால் அலங்கரிப்பது, மணியடிப்பது, கோலமிடுவது, மடைப்பள்ளியில் சமைப்பது, கோயிலைத் தூய்மைப்படுத்துவது என்று அனைத்துக் கோயில் பணிகளையும் பக்தர்களே மேற்கொள்கிறார்கள்.

திருவிழா:

ஆண்டுதோறும் வைகாசி மாதம் விழா நடக்கும், திருவாதிரை நாளில் சிறப்பு ஆராதனையும் நடக்கிறது.

கோரிக்கைகள்:

பக்தர்களுக்கு செல்வவளமும், வேண்டிய காரியசித்தியையும் பெற இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *