மங்களநாதர் உடனுறை மங்களேஸ்வரி திருக்கோயில், உத்தரகோசமங்கை

அருள்மிகு மங்களநாதர் உடனுறை மங்களேஸ்வரி திருக்கோயில், உத்தரகோசமங்கை, இராமநாதபுரம் மாவட்டம்.

+91- 4567 – 256 333, 256 214

காலை 6 மணி முதல்11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மங்களநாதர்
அம்மன் மங்களேஸ்வரி
தல விருட்சம் இலந்தை
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் உத்தரகோசமங்கை
மாவட்டம் இராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் கோயில் பழம்பெருமை மிக்கது. இராவணனின் மனைவியான மண்டோதரிக்கு நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாமல் இருந்தது. உலகிலேயே சிறந்த சிவபக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என அவள் அடம் பிடித்தாள். ஈசனைத் தியானித்தாள். சிவபெருமான் தான் பாதுகாத்து வந்த வேத ஆகம நூல் ஒன்றை முனிவர்களிடம் ஒப்படைத்து,”நான் மண்டோதரிக்கு காட்சிதரச் செல்கிறேன். திரும்பி வரும்வரை இதைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்எனக் கூறிச்சென்றார்.

சிவன் மண்டோதரியின் முன்பு குழந்தை வடிவில் காட்சி தந்தார். அப்போது இராவணன் அந்த குழந்தை சிவன் என்பதைப் புரிந்து கொண்டான். சிவனைத் தொட்டான். அந்த நேரத்தில் இறைவன் அக்னியாக மாறி இராவணனை சோதித்தார். உலகில் அனைத்தும் தீப்பற்றி எரிந்தன.

சிவன் முனிவர்களிடம் விட்டுச் சென்ற வேத ஆகம நூலுக்கும் ஆபத்து வந்தது. முனிவர்கள் அதைக்காப்பாற்ற வழியின்றி, சிவன் வந்தால் என்ன பதில் சொல்வது என்ற பயத்தில், தீர்த்தத்தில் குதித்து இறந்தனர். அது அக்னி தீர்த்தம்எனப் பெயர்பெற்றது. அங்கிருந்த மாணிக்கவாசகர் மட்டுமே தைரியமாக இருந்து அந்த நூலைக் காப்பாற்றினார். பிறகு இராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடக்க சிவன் அருள்பாலித்தார்.

மாணிக்கவாசகருக்கு தன்னைப்போலவே இலிங்கவடிவம் தந்து கவுரவித்தார். இப்போதும் இத்தலத்தில் மாணிக்கவாசகர் இலிங்கவடிவில் காட்சி தருகிறார்.

பொதுவாக, ஒரு கோயிலுக்கு சென்றால் ஒருமுறை வணங்கி விட்டு, உடனேயே திரும்பி விடுகிறோம். ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையத்தக்க வகையிலான கோயில் இது. வேறு எந்த தலத்திலும் காண முடியாத அற்புதமான மரகத நடராஜர் சிலை இங்கு உள்ளது. மார்கழி திருவாதிரை அன்று மட்டும் இதற்கு பூஜை உண்டு. மற்ற நாட்களில் சந்தனக்காப்பு சார்த்தப்பட்டிருக்கும்.

ஈஸ்வரத் தலங்களிலேயே இங்கு மட்டும் தான் இறைவனுக்கு தாழம்பூ சார்த்தலாம் என்பது சிறப்பான செய்தி. ஏனெனில் இறைவனின் முடியைக் கண்டதாக தாழம்பூவின் சாட்சியுடன் பொய் சொன்ன பிரம்மா, இத்தலத்தில் வணங்கி சாப விமோசனம் பெற்றார். இறைவன் சுயம்புவாக ஒரு இலந்தை மரத்தடியில் தோன்றினார். அந்த மரம் இன்னும் உள்ளது.

திருவிழா:

சித்திரை மாதம் திருக்கல்யாண விழா 12 நாட்கள், மார்கழி திருவாதிரை திருவிழா 10 நாட்கள் நடக்கின்றன.

கோரிக்கைகள்:

அம்பாள் மங்களேஸ்வரியை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும். சுவாமியையும், அம்பாளையும் காலையில் வணங்கினால் முன்வினை பாவங்கள் நீங்கும். மதியம் வணங்கினால் இப்பிறவி பாவங்கள் தீரும். மாலையில் தரிசித்தால் ஆயுள் அதிகரிப்பதுடன் தொழில் மேன்மையும், பொருள் பெருக்கமும் ஏற்படும்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *