மல்லிகார்ஜுனசுவாமி திருக்கோயில், பர்வதமலை

அருள்மிகு மல்லிகார்ஜுனசுவாமி திருக்கோயில், பர்வதமலை, கடலாடி, திருவண்ணாமலை மாவட்டம்.

+91-94426 72283

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மல்லிகார்ஜுனசுவாமி
அம்மன் பிரமராம்பாள்
தீர்த்தம் பாதாளச் சுனைத் தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் பர்வதமலை
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

வாசலில் பச்சையம்மாள் காவல் தெய்வமாக இருக்கிறாள். அவளது கோவிலின் வாசலில் ஏழு முனிகள் அமர்ந்துள்ளனர். சிலைகள் அப்படியே முனீஸ்வரனை ஒத்திருந்தன. மலையடிவாரத்தில் இருக்கும் வீரபத்திரரையும் வழிபட்டு மலையேறத்துவங்கவேண்டும். பாதி தூரத்திற்கு அழகாக படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனாலும் அந்த படிக்கட்டுகளைக் கடப்பதற்குள் மூச்சு வாங்கும். நெட்டுக்குத்தாக மலை அமைந்திருக்கிறது. பாதிதூரம் கடந்ததும், கரடுமுரடான மலைக்காட்டுப்பாதை துவங்குகிறது. அதில் பாதிதூரம் சென்றால், வெறும் மொட்டைமலை நெடுநெடுவென செங்குத்தாக உயர்ந்து நிற்கிறது. மாபெரும் திரிசூலங்களும், ஆணிகளும், தண்டுக்கால் கம்பிகளுமே உள்ளன.


ஒவ்வொரு வளைவிலும் மலையடிவாரம் விதவிதமான கோணத்தில் கண்கொள்ளாக் காட்சியாக தெரிகிறது. ஒருமுறை சிவபெருமானின் கண்களை பார்வதி விளையாட்டாகப் பொத்தினாள். அப்படி பொத்தியது சில நொடிகள்தான். அதற்குள் பூமியில் பலகோடி வருடங்கள் ஓடிவிட்டன. விஷயமறிந்த சிவபெருமான் உடனே தனது நெற்றிக்கண்ணைத் திறந்துவைத்து பூமிக்கும், பிரபஞ்சத்துக்கும் ஒளி கொடுத்து காப்பாற்றிவிட்டார். அதனால், சிவபெருமான் பார்வதியை நோக்கி,”நீ பூமிக்குப்போய் என்னை நினைத்து கடும்தவம் செய்; அதுதான் உனக்குத் தண்டனைஎன அனுப்பியிருக்கிறார்.

அதற்கு பார்வதி,”உங்களை விட்டுப்பிரிந்து என்னால் ஒரு கணம் கூட இருக்க முடியாது. நான் எப்படி இருப்பேன்?” எனக்கேட்க, சிவன் பார்வதியின் துணைக்கு ஏழு சித்தர்களைஅனுப்பி வைத்திருக்கிறார். அகத்தியர், பராசாசர் உள்ளிட்ட சித்தர்கள்தான் பச்சையம்மனின் வாசலில் முனியாக அமர்ந்திருக்கின்றனர்.


இளவயதுடையோருக்கே மலையுச்சியை அடைய 3 மணிநேரம் ஆகுமாம். இறங்கும்போதும் அப்படியே.
கடல் மட்டத்திலிருந்து 4560 அடிகள் உயரத்தில் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக்கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது என விளம்பரப்படுத்துகிறார்கள். எனக்கென்னவோ, 20,000 ஆண்டுகள் பழமையானது எனவும் பார்வதி இங்கே தவம் செய்ய வந்து 2,00,000 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்றே தோன்றுகிறது.

கி.பி. 3ம் நூற்றாண்டில் நன்னன் என்னும் அரசன் இங்கு வந்து இறைவனை வணங்கியதாக மலைபடுகடாம் என்னும் நூலில் வரலாற்றுச் சான்று உள்ளது.

ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தழிழகத்திற்கு வந்தபோது, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பர்வதமலை என்னும் இந்த மலையில் தான், முதன் முதலாகக் காலடி வைத்த மலை என்கிறார்கள்.

அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய பாக்கியம். இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது தல புராணம்.

பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும். ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு. இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி, தீராத நோயையும் தீர்க்கும். நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள்.

இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாகக் காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும்.

சிவ பெருமானுக்கு கற்பூரம் ஏற்றி வெளியே நின்று கற்பூர ஜோதியை நோக்கினால் ஜோதியில் நாகம், சூலம், உடுக்கை போன்ற பிம்பங்கள் தோன்றுவதைக் காணலாம். மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம்.

சித்தர்கள் கழுகாகத் திகழும் திருக்கழுக்குன்றம் போல் இங்கும் மூன்று கழுகுகள் இந்தமலையை சுற்றிய வண்ணம் உள்ளதைக் காணலாம். பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக நடக்கும். இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது. அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம். 48 பவுர்ணமி, அமாவாசை தொடர்ந்து இந்த மலையில் உள்ள சிவ பார்வதியை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறது தல புராணம். சகல நோயையும் தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் உண்டு.

மலைக்கு வருபவர்கள் உணவு, தண்ணீர், போர்வை, டார்ச் லைட், தீபம் ஏற்றுவதற்கு விளக்கு எண்ணெய், பூஜைப் பொருட்கள் வாங்கி வருவது முக்கியம். வாழ்வில் ஒரு முறையேனும் மலைக்கு வந்து செல்வது பூர்வ ஜென்ம புண்ணியம். மலையிலுள்ள சாதுக்களின் தரிசனம் பாப விமோசனம்.

26 கி.மீ., சுற்றளவுள்ள இந்த மலையை பவுர்ணமி தினத்தில் ஒரு முறை கிரிவலம் வந்தால் கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கன்னியாகுமரி போன்று இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

திருவிழா:

சித்ரா பவுர்ணமி, ஆடி 18, ஆடிப்பூரம் பாலாபிஷேகம், புரட்டாசி முதல் நாள், ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மார்கழி முதல் நாள், மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம் முதலிய நாட்களில் விழாக்கள் உண்டு.

கோரிக்கைகள்:

தொழில் மந்தம், திருமணத்தடை போன்ற தடைகள் உள்ளவர்கள் இம்மலைக்கு 5 அல்லது 7 அல்லது 9 முறை என வந்து, தீபம் போட்டு வணங்கினால் தீரும்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி:

திருவண்ணாமலையிலிருந்து வேலூர் செல்லும் வழியில் போளூர் அருகில் தேன்மதிமங்கலம் (தென்பாதிமங்கலம்) என்றகிராமத்தின் எல்லைக்குள் அமைந்திருக்கிறது. மலையின் அமைப்பு கிட்டத்தட்ட சதுரகிரியின் அமைப்புப்போலவே அமைந்திருக்கிறது. சதுரகிரிக்கு வேகமாக மலையேறமுடியும். இங்கு அப்படி முடியாது.

2 Responses to மல்லிகார்ஜுனசுவாமி திருக்கோயில், பர்வதமலை

  1. M SATHISH says:

    THENPAMANGALAM is not correct name.

    YES !.,

    THENMATHIMANGALAM IS CORRECT NAME

    BY

    PACHAIYAPPA’S SATHISH [1-M.SC–ZOOLOGY]
    PACHAIYAPPA’S COLLEGE CHENNAI-30
    FROM — THENMATHIMANGALAM VILLAGE
    T.V.MALAI DISTRICT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *