மல்லிகார்ச்சுனர் கோயில், தர்மபுரி

அருள்மிகு மல்லிகார்ச்சுனர் கோயில், தர்மபுரி, தர்மபுரி மாவட்டம்.

மூலவர் மல்லிகார்ச்சுனர்
அம்மன் காமாட்சியம்மை
தல விருட்சம் வேளா மரம்
ஊர் தர்மபுரி
மாவட்டம் தர்மபுரி
மாநிலம் தமிழ்நாடு

இப்பதி இன்று தர்மபுரிஎன்று வழங்குகிறது. அதியமான் ஆண்ட நகரம். இங்குள்ள அதியமான் கோட்டை சொல் வழக்கில் திரிந்து அதமன் கோட்டைஎன்றாயிற்று. அதியமான் கோட்டை முழுவதுமாக அழிந்து சுவடுகள் மறைந்து போயின. ஒரு சிறு கிராமம் மட்டுமே அங்குள்ளது.

ஐராவதம், இராமர், துர்வாசர், அர்ச்சுனன் முதலியோர் வழிபட்ட தலம்.

இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும்.

மூலவர் சிவலிங்கத் திருமேனி; சுயம்பு மூர்த்தி.

ஒளவைப் பெருமாட்டிக்குத் தமிழின்பால் கொண்ட விருப்பத்தால், கிடைத்தற்கரிய நெல்லிக் கனியைத் தான் உண்ணாது ஒளவைக்குத் தந்த அதியமான் ஆண்ட பகுதி தகடூர்.

கோட்டைக் கோயில்” – “கோட்டை ஈஸ்வரன் கோயில்” – “தகடூர் காமாட்சி கோயில்என்று கேட்டால்தான் மக்களுக்குத் தெரிகிறது. “கோட்டை சிவன் கோயில்என்றே இக்கோயில் வழங்குகிறது.

மக்கள் அம்பாளைத் தகடூர் காமாட்சி என்றழைக்கின்றனர்.

தலமரம் வேளா மரமாதலால் இப்பகுதி முற்காலத்தில் வேளா மரக்காடாக இருந்திருக்கலாம். இப்பகுதிக்கு வேளாவனம் என்றும், சுவாமிக்கு வேளாலீஸ்வரர் என்ற பெயரும் சொல்லப்படுகிறது.

இக்கோயிலில் காடு வெட்டிச் சித்தரின்ஜீவ சமாதி என்று சொல்லப்படும் சித்தலிங்கேஸ்வரர் (சிவலிங்க) சந்நிதியுள்ளது. ஒவ்வொரு மாதப் பிறப்பிலும் முதல் வழிபாடு இவருக்குத்தான் நடத்தப் பெறுகிறது. சுவாமி சந்நிதி மகாமண்டபத்தில் உள்ள கல் தூண்கள் சிற்பக்கலை மிகுந்தவை; வரலாறுகளைக் கொண்டவை. யோக நரசிம்மர் உருவமும் உள்ளது.

வாயிலின் இடப்பால் வீரபத்திரர் கம்பீரமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்.

இங்குள்ள பைரவர் சந்நிதி விசேஷமானது. வாகனத்துடன், சூரிய சந்திரர் இருபுறமும் விளங்க, கோயிலின் குபேர பாகத்தில் எழுந்தருளியுள்ளார்.

அம்பாள் சந்நிதி பட்டத்து யானைகள் 18 தாங்குகின்ற அமைப்பில் உள்ளது. அம்பாள் காமாட்சி கருங்கல்லாலான ஆதார பீடத்தில் நின்று தரிசனம் தருகிறாள். அம்பாள் சந்நிதியின் முன்பாக மகாமண்டபத்தின் மேற்புறத்தில் நடுவில் உமேசராகப் பெருமான் விளங்க, சுற்றிலும் அஷ்டதிக்குப் பாலகர்கள் இடம் பெற்றுள்ள சிற்பம் அருமை. சுவாமி சந்நிதியிலும் மகா மண்டபத்தின் மேற்புறத்தில் நடுவில் சிவ பெருமான் தாண்டவ மூர்த்தியாகத் திகழச் சுற்றிலும் அஷ்டதிக்குப் பாலகர்கள் இடம் பெற்றுள்ள சிற்பம் அழகு.

இங்குள்ள கல்வெட்டுக்களில் சுவாமி பெயர் இராஜராஜேஸ்வர முடையார் என்று குறிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு

தகடூர் என்பது தற்போதைய தருமபுரி என்றும்; வேதாரண்யத்திற்கு அருகிலுள்ள தகட்டூர் என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன.

வழிகாட்டி:

தர்மபுரி பேருந்து நிலையத்திலிருந்து திருப்பத்தூர் சாலையில் வந்து வேல் பால் டிப்போ என்ற இடத்தில் பிரியும் சாலையில் இடது புறமாகச் சென்றால் தெருவின் கோடியில் கோயிலை அடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *