குபேரலிங்கேசுவரர், திருக்கழுக்குன்றம்
அருள்மிகு குபேரலிங்கேசுவரர், திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் மாவட்டம்.
ஆன்மிகச் சிறப்புகளைத் கொண்டு, தெய்வீகப் பொலிவால் தனித்து விளங்கும் திருக்கழுக்குன்றம் ஊர் நுழைவு வாயிலிலேயே மலையைப் பார்த்தவண்ணம் ஸ்ரீ குபேரலிங்கேஸ்வரர் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
சித்தபுருஷர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம். ஆவுடையார் மேடை பலவகை மருந்துகளால் செய்விக்கப்பட்டது. அந்த மேடையின் மேலே குன்றாத வளம் அருளும் அருள்மிகு குபேரலிங்கேஸ்வரரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
ஒரு காலகட்டத்தில் இத்திருக்கோயில் பூஜைகள் நின்றன. ஆலயமும் சிதிலமடைந்தது. இறைவனின் திருவிளையாடல். ஒரு பிரதோஷ தினத்தன்று, “உனக்கு மட்டும் வீடு கட்டிக்கொண்டு, எனக்கு வீடு கட்டாமல் இருக்கிறாயே” என்று பக்தர் ஒருவரின் கனவில் அசரீரி ஒன்று தோன்றியது.
அதிகாலையில் ஊர்ப் பெருமக்களோடு அக்கோயிலுக்குச் சென்று பார்த்தால், சிவலிங்கத் திருமேனி இருக்கும் கருவறையில், நல்ல பாம்பு ஒன்று படுத்திருந்ததையும், அவர்கள் சென்று பார்வையிட்டபோது ஓர் ஓரமாக அது அமைதியாக வெளியே சென்றதையும் பார்த்துப் விதிர்த்து விட்டனர். அன்றைக்கே திருப்பணிக்கான பூமிபூஜை போடப்பட்டது. கோயில் சீரமைப்புப் பணிகள் தொய்வில்லாமல் துரிதமாக நடைபெற்றன. கோயிலுக்குள்ளே இருந்த திருக்குளத்தின் திருப்பணியும் வெகு வேகமாக நடந்து கொண்டிருந்தது. அப்படித் திருப்பணி செய்யும்போது, குளத்தினுள் புதைந்திருந்த ஸ்ரீவிநாயகப் பெருமானும் வெளிப்பட்டார். அன்றைய தினம் சங்கடகர சதுர்த்தி. குளத்திற்கு எதிரே இருந்த அரசமரம் அவரது ஆலயமானது. ஸ்ரீ சங்கடகர கணேசன் என்ற பெயரால் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பொதுவாக விநாயகர் இடதுகால் மடித்தே காணப்படுவார். இங்கு இடதுகாலைத் தொங்கவிட்டுக் கொண்டுள்ளார். அமாசோம விரதம் இத்திருக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அரசமர விநாயகர், திருக்குளம் ஆகியவற்றினைத் திங்கட்கிழமையன்று வரும் அமாவாசை தினத்தன்று வலம் வந்தால், கங்கையில் நீராடிய பலனும், கயிலையம்பதியை வலம் வந்த பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தலப் பெருமான், செல்வநாதன், ஐஸ்வர்யேஸ்வரர், குபேரலிங்கேஸ்வரர் எனும் பெயர்களால் அருள்பாலிக்கிறார். அம்பிகை குபேரஈஸ்வரி என்ற பெயரில் வணங்கப்படுகிறார்.
அம்பிகை குபேர ஈஸ்வரியின் பின்னே வலது கரத்திலிருந்து பொற்காசுகள் கொட்டும் வண்ணம் சர்வ ஐஸ்வர்யலட்சுமி அருள்பாலிக்கிறாள்.
தனக்குத் தேவைப்படும் நேரத்தில் தானே குடமுழுக்குச் செய்துகொண்ட குபேரலிங்கேசப்பெருமான், நமக்குத் தேவையானவற்றையும் தெரிந்துகொண்டு நம் குறைகளைப் போக்கி அருள்பாலிக்கிறார். வாழ்வில் ஒருமுறையாவது இப்பெருமானை வழிபடுவோர், அனைத்து நலன்களையும் பெறுவர் என்பது திண்ணம். இத்திருத்தலம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகிலேயே அமைந்துள்ளது.
Leave a Reply