காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி, திருநெல்வேலி மாவட்டம்

+91-4633-222 373

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் விஸ்வநாதர்

அம்மன் உலகம்மன்

தல விருட்சம் செண்பகமரம்

தீர்த்தம் காசி தீர்த்தம்

பழமை 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர் தென்காசி

மாவட்டம் திருநெல்வேலி

மாநிலம் தமிழ்நாடு

சுமார் எழுநூறு வருடங்களுக்கு முன்பு பராக்கிரம பாண்டியன் சிவ பெருமானை வழிபட, காசிக்கு செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தான். ஒருநாள் மன்னன் கனவில் தோன்றிய இறைவன், வடக்கே உள்ள காசிக்கு வருதற்கு பதிலாக இவ்விடத்திலேயே தட்சிண(தென்) காசியில் கோயில் அமைத்து வழிபடும்படி கூறினார். அதாவது எறும்பு ஊர்ந்து செல்லும் வழியாக சென்று அது எங்கு முடிகிறதோ அங்கு கோயில் கட்டும் படி இறைவன் கூறுகிறார். அதன்படி மன்னனும் எறும்பு சென்ற வழியே சென்ற போது, அது சிற்றாற்றங்கரையில் செண்பகவனத்திற்கு வந்து சேர்ந்தது. அந்த இடத்தில் புற்றில் சுயம்புலிங்கம் கண்டு, அங்கு கோயில் கட்டி வழிபட்டான்.

1967 வரை இங்குள்ள கோபுரம் மொட்டைக்கோபுரமாக இருந்தது. அதன் பின் 1990ல் 180 அடி உயரத்தில் மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு அழகிய தோற்றத்துடன் தற்போது இக்கோயில் திகழ்கிறது.

இந்த கோபுரத்தின் ஒன்பது நிலைகளிலிருந்தும் தென்காசியின் இயற்கை அழகைப் பார்க்க அகலமான பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பாதையில் நடந்து சென்றால் வான் வெளியில் வலம் வருவது போல் இருக்கும். கோபுரத்தின் 9வது நிலையில் இருந்தபடியே கோபுரத்தை சுற்றி வரும் பால்கனி வசதி உள்ளது.

கோயில் மூலவராக காசிவிஸ்வநாதரும், உலகம்மனும் அருள்பாலிக்கிறார்கள். தலவிருட்சமாக செண்பகமரமும், தீர்த்தமாக காசி தீர்த்தமும் அமைந்துள்ளது.

இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. இங்குள்ள இரட்டைச்சிற்பங்களான வீரபத்திரர்கள் தாண்டவ மூர்த்திகள். இரண்டு தமிழணங்குகளும், இணைச் சிற்பங்களான ரதி மன்மதன் சிற்பங்களும், தனியழகு சிற்பங்களான திருமால் காளிதேவி ஆகியவையும் உள்ளத்தை கொள்ளை கொள்ளும்.

நாரதர், அகத்தியர், இந்திரன், மிருகண்டு முனிவர், வாலி, நந்தி ஆகியோர் இங்குள்ள காசி விஸ்வநாதரை வழிபட்டுள்ளார்கள்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், கோயில் மூலவரான காசி விஸ்வநாதரை ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்தே பார்க்கலாம். அந்த அளவிற்கு சுவாமி சன்னதி அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மற்ற தலங்களில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் துர்க்கை இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

திருவிழா:

மாசிமகப் பெருந்திருவிழா 10 நாள் சிறப்பாக கொண்டாடப்படும்.

புரட்டாசி நவராத்திரி கொலு திருவிழாவும், ஐப்பசி திருக்கல்யாணமும், ஆவணி மூல தெப்பத்திருவிழாவும், தை அமாவாசை பத்திர தீப திருவிழாவும் முக்கியமானதாகும்.

கோரிக்கைகள்:

இந்தலத்து இறைவனை வணங்கினால் வடகாசியில் உள்ள இறைவனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தல இறைவனை வழிபட்டால் மன நிம்மதி உண்டாகும்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *