கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில், வீரபாண்டி

அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில், வீரபாண்டி, தேனி மாவட்டம்.

+91-4546-246 242

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கண்ணீஸ்வரமுடையார்
அம்மன் அறம்வளர்த்த நாயகி
தீர்த்தம் முல்லையாறு
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் வீரபாண்டி
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

பாண்டிய நாட்டை வீரபாண்டிய மன்னன் ஆண்டு வந்தான். பார்வையோடு இருந்த அவனுக்கு முன்வினைப் பயனால் பார்வை போனது. அவன் பட்ட மனவருத்தத்துக்கு அளவே இல்லை. கஷ்டம் வரும் போது கடவுளை நினைக்காதவர் உலகில் இல்லை. வீரபாண்டியனும் அதற்கு விதிவிலக்கல்ல. அவன் சிவபெருமானை உணர்ச்சிப் பெருக்குடன் வணங்கினான். அவரது அறிவுரைப்படி முல்லையாற்றங்கரையிலுள்ள கவுமாரியை வணங்கச் சென்றான். கருணைத்தாயான அவள், அவனுக்கு ஒரு கண் பார்வையைக் கொடுத்தாள். மறுகண் ஒளி பெற, தான் வணங்கும் சிவலிங்கத்தை வணங்கும்படி அறிவுறுத்தினாள். வீரபாண்டியனும் அவ்வாறே செய்தான். சிவன் அவனிடம் தனக்கொரு கோயிலை எழுப்பும்படி கூறினார். அவ்வாறு எழுந்ததே கண்ணீஸ்வரமுடையார் கோயில். பின்னர் வீரபாண்டியனின் மற்றொரு கண்ணும் ஒளி பெற்றது.

பார்வை குறைவுள்ளவர்கள் கண்ணீஸ்வரமுடையாரை வணங்கி, அருகிலுள்ள கவுமாரியம்மன் கோயிலுக்கு சென்று அம்பிகையையும் தரிசிக்க வேண்டும். இத்தல அம்பிகை அறம்வளர்த்த நாயகி, கருணைக் கடலாய் அருள்புரிகிறாள். மன்னனின் பெயரால் இவ்வூர் வீரபாண்டிஎனப் பெயர் பெற்றது. அருகிலுள்ள முல்லையாற்றில் குழந்தைகளுடன் நீராடி மகிழலாம். இதுவே இத்தலத்து தீர்த்தமும் ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் இந்நதியில் மூலிகையின் சக்தி நிறைந்துள்ளதால் நோய் தீர்க்கும் சக்தி மிக்கதாக கருதப்படுகிறது. இத்தலத்திற்கு அருகில் கவுமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.

கோரிக்கை:

பார்வைக்குறை உள்ளவர்கள் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *