கைலாசநாதர் திருக்கோயில், கோடகநல்லூர்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கோடகநல்லூர், திருநெல்வேலி மாவட்டம்.

+91- 99659 23124

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
அம்மன் சிவகாமி, அனந்தகவுரி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் தாமிரபரணி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் கோடகநல்லூர்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முனிவர் இப்பகுதியில் தவம் செய்துகொண்டிருந்தார். அவருக்கு உதவியாக அவரது மகனும் இருந்தார். அவர் விறகு பொறுக்க காட்டிற்குள் சென்றுவிட்டார். அப்போது ஒரு ராஜகுமாரன் அங்கு வந்தான். அவனுக்கு ராஜ்ய அபிவிருத்திக்காக யாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. நிஷ்டையில் இருந்த முனிவரை எழுப்பி யாகம் செய்யும் முறை பற்றி கேட்டறியலாம் என எண்ணினான். ஆனால், எவ்வளவோ எழுப்பியும் அவர் எழ மறுத்துவிட்டார். கோபமடைந்த ராஜகுமாரன் ஒரு இறந்த பாம்பை எடுத்து முனிவரின் கழுத்தில் போட்டுவிட்டு சென்றுவிட்டான். நிஷ்டையில் இருந்ததால் முனிவருக்கு பாம்பு கழுத்தில் கிடப்பது தெரியவில்லை. விறகு பொறுக்கச் சென்ற மகன் திரும்பி வந்தார். தன் தந்தையில் கழுத்தில் பாம்பு கிடப்பதை பார்த்து கோபமடைந்தார். இந்த செயலை செய்தது ராஜகுமாரன் என்பது தெரியவந்தது.

உடனே அரண்மனைக்கு சென்று,”என் தந்தையின் கழுத்தில் போடப்பட்ட செத்த பாம்பு உயிர்பெற்று உன் தந்தையை தீண்டும்என சாபமிட்டுவிட்டு சென்றுவிட்டார். சில நாட்கள் கழித்து மகாராஜாவின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்கள் ராஜாவுக்கு நாகதோஷம் இருப்பதாக கூறினர். ராஜா பாம்பிடம் இருந்த தன்னை காத்துக்கொள்ள மிகவும் மறைவான இடத்தில் ஒரு மண்டபம் கட்டி வசித்தார். அதன் உள்ளே ஒரு எறும்புகூட புக வழியில்லை. ஒருநாள் ராஜா மாம்பழம் சாப்பிடும்போது உள்ளே குட்டியாக இருந்த பாம்பு பழத்தினுள் இருந்து வெளிப்பட்டு ராஜாவை தீண்டியது. ராஜா இறந்துபோனார்.

ராஜாவை தீண்டிய பாவம் நீங்க திருமாலை நோக்கி அந்த பாம்பு தியானம் செய்தது. திருமால் அங்கு தோன்றி சிவபெருமானை வழிபட்டால் பாவம் நீங்கும் என்றார். அதன்படி சிவனை வழிபட்ட பாம்பு சாப விமோசனம் பெற்றது. பாம்பின் பாவத்தை போக்க சிவன் கைலாயத்தில் இருந்து வந்ததால் கைலாசநாதர்என்னும் பெயர் பெற்றார்.

கைலாசநாதர் கோயில்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டன. அதில் இந்தக் கோயிலும் ஒன்று. அங்காரகன் இங்கு சிவனை வழிபட்டார். அதனால் இது செவ்வாய் பரிகார தலமாயிற்று.

இங்கு கைலாசநாதரும் சிவகாமி அம்மையும் காட்சி தருகின்றனர்.

கொடிமரம், பலிபீடம், பரிவார மூர்த்திகள் என எதுவுமே இல்லாத வித்தியாசமான கோயில் இது. சுவாமியே பிரதானம் என்பதால் இந்த அமைப்பில் இருப்பதாக சொல்கிறார்கள். துவாரபாலகர்களின் இடத்தில் கல்யாணவிநாயகர், முருகன் இருக்கின்றனர். நவ கைலாயத் தலங்களிலேயே பெரிய மூர்த்தி இவர். எனவே, இவருக்கு எட்டு முழத்தில், எட்டு வேட்டிகளை அணிவித்து அலங்கரிக்கிறார்கள். சுவாமிக்கு துவரம்பருப்பு நைவேத்யம் படைத்து, சிவப்பு வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் செவ்வாய்தோஷம் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. இக்கோயிலில் ஐந்துதலை நாகத்தின்கீழ் நின்ற நிலையில் காட்சி தரும் அனந்தகவுரியின் சிலை உள்ளது. இவளை, “சர்ப்பயாட்சி,” “நாகாம்பிகைஎன்றும் அழைக்கிறார்கள். சிவகாமி அம்பாளுக்கு தனிச்சன்னதி இருக்கிறது.

இங்குள்ள நந்திக்கு, செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப்போகும் பெண்கள், 58 விரலிமஞ்சளை, தாலிக்கயிற்றில் கட்டி, மாலையாக அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால் விரைவில் வரன் அமையும் என நம்புகிறார்கள்.

சிவராத்திரி, திருவாதிரை, பிரதோஷ நாட்களில் இங்கு விசேஷ பூஜை நடக்கிறது.

சேரன்மகாதேவி அம்மநாதர் ஆலயம் இத்தலத்திற்கு அருகில் உள்ளது.

இத்தலம் நவகைலாயங்களில் ஒன்று இது செவ்வாய் தலமாகும்.

திருவிழா:

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை

கோரிக்கைகள்:

மனித வாழ்க்கையில் செவ்வாய் திசை ஏழு ஆண்டுகள் நடக்கும். இந்த ஏழு ஆண்டுகளில் செவ்வாய் பகவானின் அருள் இருந்தால்தான் வாழ்க்கை செம்மையாக நடக்கும். சிலருக்கு ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றுள்ளதாக சொல்வார்கள். பெண்களுக்கு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் நடக்கத் தாமதமாகும் என்பதுண்டு. இப்படிப்பட்டவர்கள், இக்கோயிலுக்கு சென்று வரலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *