கைலாசநாதர் உடனுறை பிரசன்னநாயகி திருக்கோயில், நெடுங்குடி

அருள்மிகு கைலாசநாதர் உடனுறை பிரசன்னநாயகி திருக்கோயில், நெடுங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர், காசி நாதர்
அம்மன் பிரசன்னநாயகி
தல விருட்சம் வில்வமரம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் நெடுங்குடி
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

புராண காலத்தில் நெடுங்குடியில் வில்வமரங்கள் நிறைந்த மண்மலைக் குன்றுகள் இருந்தது. இங்கு வந்த பெருஞ்சீவி, சிரஞ்சீவி என்னும் சகோதரர்கள் சிவபெருமானை வழிபட எண்ணினர். அண்ணன் பெருஞ்சீவி தன் தம்பி சிரஞ்சீவியிடம் வழிபாட்டிற்காக காசியிலிருந்து புனித லிங்கம் எடுத்து வர கூறினார். அண்ணன் உத்தரவை ஏற்று தம்பி காசிக்குச் சென்றார். ஆனால் பூஜைக்கு உரிய நேரத்தில் தம்பி வராததால், தானே சிவலிங்கம் ஒன்றைச் செய்து அண்ணன் சிவவழிபாடு செய்தார்.

காசிக்கு சென்ற தம்பி சிரஞ்சீவி தாமதமாக வந்து, தான் கொண்டுவந்த சிவலிங்கத்தை வைத்து மீண்டும் பூஜை செய்யச் சொன்னார். அண்ணன் மறுக்கவே, ஆத்திரமடைந்த தம்பி கயிலைநாதனை நோக்கி தவமிருந்தார்.

கயிலைநாதன் இருவர் முன்பும் தோன்றி பெருஞ்சீவி பூஜை செய்த இலிங்கம் கைலாசநாதர் எனவும், சிரஞ்சீவி கொண்டு வந்த இலிங்கம் காசிநாதர் என பெயர் சூட்டி, இங்கு வழிபட்டால் காசியிலும், கையிலையிலும் வழிபட்ட பலன் கிடைக்க அருளினார்.

13ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டது.

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது போல, புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி கைலாசநாதர் கோயிலிலும் பவுர்ணமிகளில் கிரிவலம் நடக்கிறது. இந்த ஆலயத்தின் அடிவாரத்தில் கிரிவல வீதியில் ஈசான்ய வடகிழக்கு திசையில் உள்ள பாம்பாறு நதியில் நீராடி, சுவாமியை தரிசித்தால் வேண்டிய பிரார்த்தனை நிறைவேறும்.

இங்கு பவுர்ணமி, அமாவாசை மற்றும் மாதப்பிறப்பு நாட்களில் கிரிவலமும், பிரதோஷ நாட்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பஜனை வழிபாடும் நடக்கிறது.

கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், அம்மன் சன்னதி மற்றும் பரிவார தெய்வங்களுடன் கோபுரங்களும் உள்ளன.

ஆடிபூரத்தன்று அம்பாளுக்கு திருவிழாவும், திருக்கல்யாணமும், கடைசித் திங்களில் ஐயப்பன் சன்னதியில் படிபூஜையும் நடக்கிறது. மாசி மாத மகா சிவராத்திரி விழாவில், தமிழகத்தின் பலபகுதியில் இருந்து 48 நாட்கள் விரதமிருந்து இந்த கோயிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்களும் வருகின்றனர்.

பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியர் இங்கு வந்து ஒரு நாள் தங்கியிருந்து சர்ப்பநதியில் நீராடி, தேரோடும் வீதியில் 5 முறை வலம் வந்து பிரசன்ன நாயகிக்கும், கைலாசநாதருக்கும் அபிஷேக, அர்ச்சனைகள் செய்து வணங்கினால் மகப்பேறு உண்டாகும்.

மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் பெற்றோருடன் வந்து இதை செய்தால் திருமணம் உடனே நடக்கும்.

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சன்னதி முன்பு மண்டபத்தின் உச்சியில் அமைக்கப்பட்ட 12 ராசி சக்கரத்தின் நேராக கீழே தரையில் பதிக்கப்பட்ட பத்மபீடத்தில் அமர்ந்து ஓம் நமசிவாயஎன்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்

ஒவ்வொரு தமிழ்மாத முதல் தேதியன்றும் மாதசங்கரம பூஜை நடைபெறும். இந்த பூஜை காலத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை திருமணமாகாத பெண்கள், சுமங்கலிகள் மற்றும் ஜாதகத்தில் பித்ரு தோஷம், புத்திரதோஷம், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், மற்ற ஆண்களும், பெண்களும் அம்மனுக்கும், நாதருக்கும் அர்ச்சனை செய்து கொடிமரத்தின் முன்பு ஐங்கோணக் கோலமிட்டு நெய்தீபம் ஏற்றி மன ஒருமையுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வந்தால் சகல தோஷங்களும் நீங்கி மங்களம் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *