கைலாசநாதர் உடனுறை துர்கா பரமேஸ்வரி திருக்கோயில், அம்மன்குடி

அருள்மிகு கைலாசநாதர் உடனுறை துர்கா பரமேஸ்வரி திருக்கோயில், அம்மன்குடி, தஞ்சாவூர் மாவட்டம் .

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
அம்மன் துர்க்கா பரமேஸ்வரி, பார்வதிதேவி
தீர்த்தம் பாப விமோசன தீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தேவி தபோவனம்
ஊர் அம்மன்குடி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

மகிஷாசுரனை வதம் செய்த பிறகு அம்பாளை பாவம் பற்றியது. அவள் தனது பாவத்தைத் தீர்க்க இடம் தேடி அலைந்தாள். துக்காட்சி என்ற இடத்திற்கு வந்து தனது சூலத்தில் படிந்திருந்த இரத்தக்கறையை கழுவுவதற்கு இடம் தேடினாள். துக்காட்சியின் அருகிலுள்ள ஒரு குளத்தில் தனது சூலத்தை கழுவினாள். அங்கு அவளுக்கு பாப விமோசனம் ஏற்பட்டது. தீர்த்தத்திற்கு பாப விமோசன தீர்த்தம்என பெயர் ஏற்பட்டது. தன் பாவம் தீர்ந்த பூமியில் குடியிருக்க துர்க்காதேவி விரும்பினாள். அங்கேயே குடியிருந்ததால் இவ்வூருக்கு அம்மன்குடி என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் சிவலிங்கம், விநாயகர் ஆகியோரை பிரதிஷ்டை செய்து அம்பாள் வழிபட்டாள்.

அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் இடமாக இருந்தாலும் இக்கோயிலில் கைலாசநாதரே மூலவராக இருக்கிறார். கைலாசநாதரின் வலதுபாகத்தில் துர்க்கை காட்சி தருகிறாள். எட்டு கைகளுடன் எட்டுவித ஆயுதங்கள் தாங்க சிம்ம வாகனம், மகிஷன் தலை ஆகியவற்றுடன் சாந்த முகத்துடன் காட்சி தருகிறாள். மகிஷாசுரமர்த்தினி என்றும் இவளை கூறுகிறார்கள். ராஜராஜசோழனின் படைத்தலைவர்களான கிருஷ்ணன், இராமன், பிரம்மராயன் ஆகியோர் இங்கு வாழ்ந்துள்ளனர். நவக்கிரகங்களுக்கு அதிபதியாக துர்க்கை விளங்குவதால் இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பூஜை உண்டு.

இத்தலத்தில் உள்ள விநாயகரின் சிற்பம் சாளக்கிரமத்தால் ஆனது. காலையில் பச்சை, மதியம் நீல நிறம், மீண்டும் மாலையில் பச்சை நிறமாக மாறிவிடும் தன்மை கொண்டது. வழுவழுப்பான கல்லால் ஆனது. விநாயகரின் வயிற்றில் நாகம் உள்ளது. எனவே நாகதோஷம் உள்ளவர்கள் இந்த விநாயகரை வழிபடுகின்றனர். கையில் தவசுமாலை வைத்துள்ளார். இவருக்கு தபசு மரகத விநாயகர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. விநாயகரின் துதிக்கை அவரது உடலோடு ஒட்டாமல் துளையிட்டு சிற்பத்திறமையுடன் செய்யப்பட்டுள்ளது.

இங்குள்ள சூரியன் குழந்தை வடிவ தோற்றத்தில் உள்ளார். எனவே இவரது காலில் தண்டைஎன்ற அணிகலன் அணியப்பெற்றுள்ளது. இந்த அணிகலனை குழந்தைகளே அணிவார்கள். இங்குள்ள துர்க்கைக்கு நூறு கண்கள் இருப்பதாக ஐதீகம். மழை இல்லாத காலங்களில் இந்த அம்பிகைக்குப் பூஜை செய்தால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை. இங்கு யோகசரஸ்வதி சிலையும் உள்ளது. சரஸ்வதியின் கையில் வீணை இல்லை. இதற்குபதிலாக தவத்தில் ஆழ்ந்திருப்பது போல் சரஸ்வதி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இக்கோயில் கி.பி.944ல் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோயில் இது. இங்கு பார்வதிக்கு தனி சன்னதி உள்ளது.

சிவனைத் தன்னுள் அடக்கிய துர்க்கை ஸ்தலம். ஒரு சிவன் கோயிலில் துர்க்காதேவிக்கு கிழக்கு நோக்கிய சன்னதி அமைந்துள்ளது இதன் தனி சிறப்பாகும். இத்தலத்தில் அம்மனே பிரதானமாக வழிபாடு செய்யப்படுகிறது.

திருவிழா:

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை

வேண்டுகோள்:

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள விநாயகரை வழிபடுகின்றனர். கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *