கடுத்துருத்தி சிவன் திருக்கோயில், கடுத்துருத்தி

அருள்மிகு கடுத்துருத்தி சிவன் திருக்கோயில், கடுத்துருத்தி, கோட்டயம் Dt, கேரளா

+91- 093874 84685

காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சிவன்(கடுத்துருத்தி)
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் கடுத்துருத்தி
மாவட்டம் கோட்டயம்
மாநிலம் கேரளா

முன்னொரு காலத்தில் கரண் என்ற அசுரன் மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக சிதம்பரத்தில் சிவனை நோக்கி கடும் தவம் செய்தான்.

தவத்திற்கு மகிழ்ந்த சிவன் கரணுக்கு 3 சிவலிங்கம் கொடுத்து, தென் திசையில் பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வர சொன்னார். வலக்கையில் ஒரு இலிங்கமும், இடக்கையில் ஒரு இலிங்கமும் எடுத்து கொண்ட அவன் மூன்றாவது இலிங்கத்தை எப்படி எடுத்து செல்வது என தெரியாமல், வாயில் கடித்து இருத்தி சென்று பிரதிஷ்டை செய்ததால் இத்தலம்கடித்துருத்திஎனப்பட்டது.

இதில் வலக்கையில் இருந்த லிங்கத்தை வியாக்ரபாத மகரிஷியிடம் கொடுத்து வைக்கத்தில் பிரதிஷ்டை செய்யக் கூறினான். இடக்கையில் இருந்ததை ஏற்றுமானூர் கோயிலில் கொடுத்து பிரதிஷ்டை செய்யும் படி கூறினான்.

கிழக்கு பார்த்த இக்கோயில் சிறு குன்றின் மீது அமைந்துள்ளது. ஒரு முறை வடக்கன்கூர் ராஜா தினமும் இந்த மூன்று கோயில்களுக்கும் சென்று வழிபாடு செய்து வந்தார்.

வயதான காரணத்தால் மூன்று கோயில்களுக்கும் சென்று வழிபாடு செய்ய முடியவில்லை. எனவே கடுத்துருத்தி கோயிலின் வடக்குப்பகுதியில் வைக்கத்தப்பனை கிழக்கு நோக்கியும், தெற்குப்பகுதியில் ஏற்றமானூரப்பனை மேற்கு நோக்கியும் என மூன்று சிவனையும் ஒரே தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார்.

எனவே மூன்று கோயில்களுக்கும் செல்ல முடியாதவர்கள் கடுத்துருத்தி மகாதேவர் கோயில் சென்று வழிபாடு செய்து, கோயிலைச் சுற்றி வந்தாலே மூன்று தலங்களுக்கும் சென்ற பலன் கிடைக்கும் என தல புராணம் கூறுகிறது.

கேரள மாநிலத்தில் பெரும்பாலான சிவன் கோயில்களில் மூலஸ்தானத்தில் சிவன் மட்டும் இருப்பார். அம்மன் இருக்க மாட்டார். இதனாலேயே கர்ப்பகிரகத்தை இடமிருந்து சுற்றும் போது கோமுகி வரையிலும் சென்று, பின் அதே வழி வந்து சாமி தரிசனம் செய்து விட்டு, பின் வலப்புறம் சென்று கோமுகியை வணங்கி விட்டு பின் வெளி வருவார்கள். ஏனென்றால் சிவன் அம்பாளுடன் இல்லாமல் தனியாக கர்ப்பகிரகத்தில் இருக்கும் போது சிவனது சடையில் கங்கை இருப்பாள். அபிஷேக தீர்த்தம் எல்லாம் கங்கா தீர்த்தமாக கோமுகி வழியாக வரும். கோமுகியை தாண்டினால் கங்கையை தாண்டிய தவறு ஏற்படும். எனவே கோமுகியை தாண்ட மாட்டார்கள். ஆனால் கோட்டயத்திற்கு அருகே பழமையான கடுத்துருத்தி மகாதேவர் கோயில் மூலஸ்தானத்தில் சிவன் அம்மனுடன் தம்பதியுடன் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

வைக்கம் கோயிலில் ஞானம் கொடுக்கும் தெட்சிணாமூர்த்தியாகவும், கடுத்துருத்தி கோயிலில் சகல சவுபாக்கியங்களை கொடுக்கும் தம்பதிசமேதராக அனுக்கிர மூர்த்தியாகவும், ஏற்றமானூரில் வெற்றி கொடுக்கும் காட்டாளன் ரூபத்திலும் சிவன் அருள்பாலிக்கிறார்.

திருவிழா:

மகா சிவராத்திரி, மாசி மகம், மார்கழி திருவாதிரை பிரார்த்தனை:

கல்வியில் சிறக்க விரும்புவர்கள், திருமணத்தில் தடை உள்ளவர்கள், எதிலும் வெற்றி பெற விரும்புவர்கள் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.

ஒரே நாளில் இந்த மூன்று தலங்களையும் தரிசித்தால் சிறந்த பலன் உண்டு என்றும், அவர்களுக்கு மறு ஜென்மம் கிடையாது என்பதும் நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி :

வைக்கத்திற்கும் ஏற்றமானூருக்கும் இடையில் இத்தலம் அமைந்துள்ளது. வைக்கத்திலிருந்து இத்தலத்திற்கு 14 கி.மீ. இத்தலத்திற்கு ஏற்றமானூருக்கு 14 கி.மீ. என ஒரே தூரம் இருப்பதும் ஒரு சிறப்பம்சம் தான். கோட்டயத்திலிருந்து வடக்கே 30 கி.மீ. தூரத்தில் கடுத்துருத்தி அமைந்துள்ளது. கோட்டயத்திலிருந்து வைக்கம் செல்லும் பஸ்களில் இத்தலம் செல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *