காசிவிஸ்வநாதர் திருக்கோயில் , உமையாள்புரம்

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் , உமையாள்புரம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435- 244 1095

காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காசி விஸ்வநாதர்
அம்மன் குங்குமசுந்தரி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் காவிரி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் உமையாள்புரம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

படைப்புக் கடவுளான பிரம்மா கயிலாயம் சென்றபோது, அங்கிருந்த முருகனைக் கவனிக்காமல் சென்றார். முருகன் அவரை அழைத்து யார் என விசாரித்தபோது, “நானே படைப்புக்கடவுள்என கர்வத்துடன் கூறினார். அவரது ஆணவத்தை அடக்க எண்ணிய முருகன், படைப்பிற்கு ஆதாரமான பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்க, அவர் தெரியாமல் விழித்தார். அவரிடமிருந்து படைக்கும் தொழிலைப் பறித்தார் முருகன். சிவபெருமானுக்கும் இதற்குரிய விளக்கம் தெரியவில்லை. எனவே, முருகன் தந்தைக்கே குருவாக இருந்து, அம்மந்திரப் பொருளை உபதேசித்தார். இந்த நிகழ்வு ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் நிகழ்ந்தது.

உபதேசம் பெற சிவன் வந்த போது அம்பிகையும் உடன் வந்தாள். சிவன் அவளை இத்தலத்தில் இருக்கும்படி சொல்லிவிட்டு, தான் மட்டும் சென்று உபதேசம் கேட்டார். உமையவளாகிய அம்பாள்
தங்கிய தலமென்பதால் இவ்வூர், “உமையாள்புரம்எனப்பெயர் பெற்றது.

மற்றொரு வரலாறும் இத்தலத்துக்கு உண்டு. விஜயா என்ற கந்தர்வப்பெண், சிவன் மீது தீவிர பக்தி கொண்டிருந்தாள். அவள், இங்கு தீர்த்தம் உண்டாக்கி சிவதரிசனம் வேண்டித் தவமிருந்தாள். சிவன், அம்பாளுடன் காட்சி தந்து, அவளது வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார். மகிழ்ந்த விஜயா இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பினாள். சுவாமிக்கு காசிவிஸ்வநாதர் என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்த வரலாறு பிரம்மாண்ட புராணத்தில் உமாபுர மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.

அம்பாள் சன்னதியில் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முற்காலத்தில் இப்பகுதியில் வசித்த கமலா என்ற பெண், அம்பாள் மீது தீவிர பக்தி கொண்டவளாக இருந்தாள். ஒருசமயம் அவளது கணவன், தீராத நோயால் பாதிக்கப்பட்டான். கணவன் குணமாக வேண்டி அப்பெண், இத்தல அம்பிகைக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டாள். அம்பாள் அவளது கணவனின் நோயைக் குணப்படுத்தி அருள் புரிந்தாள். இதனால் அம்பிகைக்கு குங்குமசுந்தரி என்று பெயர் ஏற்பட்டது. அம்பாள் சன்னதி எதிரே ராஜமகா வல்லபகணபதி தனி சன்னதியில் இருக்கிறார். காவிரி நதியின் வடகரையில் அமைந்த கோயில் இது. பிரகாரத்தில் விநாயகர், முருகன், பைரவர் சன்னதிகள் உள்ளன. கந்தர்வப்பெண் உருவாக்கிய தீர்த்தம் ஊர் எல்லையில் இருக்கிறது.

இத்தலத்தின் அருகில் சுவாமிமலை, திருவையாறு ஐயாறப்பர், திருவைகாவூர் வில்வவனேஸ்வரர், வடகுரங்காடுதுறை அழகுசடைமுடிநாதர் கோயில் மற்றும் திவ்யதேசங்களான கபிஸ்தலம், புள்ளபூதங்குடி ஆகியவை உள்ளன. இங்கு வந்தவர்கள் ஒரே நேரத்தில் பல புண்ணியத்தலங்களை தரிசிக்கவும் வசதியிருக்கிறது.

திருவிழா:

வைகாசியில் திருக்கல்யாண விழா நடக்கிறது. இவ்வேளையில் இவ்வூரில் உள்ள லட்சுமி நாராயணப்பெருமாள் இங்கு எழுந்தருளி, அம்பிகையை சிவனுக்கு மணம் செய்து வைப்பார்.

கோரிக்கைகள்:

பெண்கள் தங்களது கணவர் உடல் நலத்துடன் வாழவும், திருமணத்தடை உள்ளவர்கள் நல்ல வரன் அமையவும் அம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.

மேலும், அம்பாள் சன்னதி முன்பு, கர்ப்பிணிப்பெண்களுக்கு வளைகாப்பு வைபவம் நடத்து கின்றனர். இத்தலத்தில் வேண்டிக்கொள்ள காசியில் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *