ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மானந்தகுடி

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மானந்தகுடி, திருவாரூர் மாவட்டம்.

+91- 4366 239389

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஏகாம்பரேஸ்வரர்
உற்சவர் சந்திரசேகரர்
அம்மன் காமாட்சி
தீர்த்தம் அனுமன் தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் மானந்தகுடி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு

கார்த்தவீரியன் எனும் பக்தன் ஒருவன் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தான். ஒருசமயம் அவன் சிவபூஜை செய்து கொண்டிருந்தபோது, ஆஞ்சநேயர் அவனது பூஜைக்கு தொந்தரவு செய்தார். இதனால் கோபமடைந்த கார்த்தவீரியன், ஆஞ்சநேயரை சபித்து விட்டான். தவறை உணர்ந்த ஆஞ்சநேயர், விமோசனம் வேண்டி இத்தலத்திற்கு வந்தார். சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவன் அவருக்கு அம்பிகையுடன் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தருளினார். அந்த மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடினார் ஆஞ்சநேயர். எனவே இத்தலம் அனுமன் ஆனந்த குடிஎன்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் மானந்தகுடிஎன்று மருவியது.

ஆஞ்சநேயருக்கு காட்சி தந்த சிவன், ஏகாம்பரேஸ்வரராக அருளுகிறார். அம்பிகை காமாட்சி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி இருக்கிறாள். இக்கோயிலில் ஆஞ்சநேயருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால் வாழ்வில் மங்களம் உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே இவரை, “மங்கள ஆஞ்சநேயர்என்றே அழைக்கிறார்கள். அமாவாசை மற்றும் மூல நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

இங்குள்ள தெட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவரது பீடத்தில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களும், சப்த ரிஷிகளும் இருக்கின்றனர். நந்தியும் இருக்கிறது. தெட்சிணாமூர்த்தியின் இத்தகைய கோலத்தை காண்பது அபூர்வம்.

ஆஞ்சநேயர் சன்னதிக்கு நேர் எதிரே நவக்கிரக சன்னதி உள்ளது. ஆஞ்சநேயர், கிரகங்களை தனது வாலில் கட்டியிருப்பதாக ஐதீகம். இவரது நேரடிப்பார்வையில் கிரகங்கள் தத்தம் மனைவியுடன் இருப்பதால் இங்கு கிரக தோஷங்கள் நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது. அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவர்களுக்கென தனித்தனியே திருவாட்சியும் உள்ளது விசேஷம். ஜாதக, கிரக தோஷம் உள்ளவர்கள் நவக்கிரக சன்னதியில் மட்டைத்தேங்காய் கட்டி வேண்டிக்கொள்கின்றனர். நாகதோஷம் உள்ளவர்கள் நாகர் சிலைகள் வைத்து வேண்டுகின்றனர்.

பொதுவாக சிவன் கருவறை கோஷ்டத்தின் பின்பகுதியில் லிங்கோத்பவர்தான் இருப்பார். ஆனால், இங்கு இடும்பன் இருக்கிறார். இவருக்கு நேரே சுப்பிரமணியர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இடும்பன் வலது காலை முன்புறமாக வைத்து, முருகனுக்கு சேவை செய்வதற்கு தயாராக உள்ளார்.

பிரகாரத்தில் வலம்புரி கற்பக விநாயகர், மகாலட்சுமி மற்றும் மாரியம்மனுக்கு தனிச்சன்னதிகள் உள்ளது.

திருவிழா:

சித்ராபவுர்ணமி, அனுமன்ஜெயந்தி, ஆடி வெள்ளி, திருக்கார்த்திகை.

கோரிக்கை:

தெரியாமல் தவறு செய்து வருந்துபவர்கள், மன அமைதி கிடைக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *