அனவரத தாண்டவேஸ்வரர், அரடாப்பட்டு

அருள்மிகு அனவரத தாண்டவேஸ்வரர், அரடாப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம்.

தொடர்புக்கு: 98432 76679,

94432 24448

பஞ்சபூதத் தலங்களுள் அக்னித் தலமாகப் போற்றப்படுவது திருவண்ணாமலை.

தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய திருக்கோயில்களுள் ஒன்று இது. பிரமாண்டமான ஒரு நெருப்புக் குழம்பே, பின்னாளில் குளிர்ந்து திருவண்ணாமலையாக மாறியது என்கிறது புராணம். இங்கு குடி கொண்ட இறைவனார் அருணாசலேஸ்வரர் என்றும் அண்ணாமலையார் என்றும் ஆதி காலத்தில் இருந்தே வணங்கப்பட்டு வருகிறார். இந்த அக்னி மலையையே சிவ சொரூபமாக எண்ணி வணங்குவார்கள் பக்தர்கள். எனவேதான், இந்த மலையை வலம் வந்து வணங்குவது சிறப்பு.

ஒவ்வொரு மாத பௌர்ணமியின்போதும் இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் நமசிவாயநாமம் சொல்லி, இங்கே கிரிவலம் வந்து அண்ணாமலையானைப் போற்றித் துதிக்கின்றனர். புண்ணியம் நிறைந்த இந்த திருவண்ணாமலையைச் சுற்றிலும் ஏராளமான திருத்தலங்கள் கம்பீரமாக விளங்குகின்றன. அவற்றுள் சில, பலராலும் அறியப்பட்டவை. இன்னும் பல, அறியப்பட வேண்டியவை. அப்படி அறியப்பட வேண்டிய ஒரு திருத்தலம்தான் அருள்மிகு அனவரதத் தாண்டவேஸ்வரர் திருக்கோயில். இது திருவண்ணாமலை மாவட்டம், அரடாப்பட்டு என்னும் ஊரில் உள்ளது.

புகழ்பெற்ற திருவண்ணாமலை திருத்தலத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் பிரதான சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் வருகிற சிறு கிராமம் அரடாப்பட்டு. இங்கிருந்து திருக்கோவிலூருக்கு சுமார் 15 கி.மீ. தொலைவு. அதாவது இரு பெரும் தலங்களான திருவண்ணாமலை மற்றும் திருக்கோவிலூருக்கு மத்தியில் அமைதி தவழும் கிராமமாக விளங்குகிறது

அரடாப்பட்டு. பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மேற்குப் பக்கம் செல்கிற நேர் சாலையில் சுமார் ஐந்து நிமிடம் நடந்தால் அனவரதத் தாண்டவேஸ்வரர் திருக்கோயில் (ஆலய முகப்புப் பலகையில் அனவர தாண்டேஸ்வரர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது) வந்து விடும்.

அற்புதமான பழைமையான சிவாலயம். ராஜகோபுரத்தில் சுதைகள் கரைந்து போய், செங்கற்கள் பல் இளிக்கின்றன. சுற்றுச் சுவர்களில் ஏராளமான கற்களைக் காணோம். திருக்கோயிலின் பெரும்பகுதி கட்டுமானம், கருங்கல்லால் ஆனது.

சுமார் ஒண்ணேகால் ஏக்கரில் ஆலயம் விஸ்தாரமாக அமைந்துள்ளது. தினமும் ஒரு கால பூஜை நடந்து வருகிறது. முறையான ஆகம வழிபாடு ஒரு காலத்தில் சிறப்பாக இருந்ததாம். ஆனால், தற்போது இல்லை. அற்புதமான அனவரத தாண்டவேஸ்வரர் குடி கொண்டிருக்கும் ஆலயம் இன்று விசேட பூசைகள் ஏதும் இல்லாமல், வெயிலில் காய்ந்து மழையில் நனைந்து வெறுமனே காட்சி அளிப்பதைப் பார்க்கும்போது, கவலைப்படத்தான் முடிகிறது. ஆலயத்தின் பழைமை பற்றி விசாரித்தால், சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என்கிறது ஒரு தகவல். ஆலயத்தின் கோபுர வேலைகளை வைத்துப் பார்க்கும்போது பல்லவர் காலம் என்கிறார்கள். நுணுக்கமான சில சிற்பங்களின் வடிவத்தை ரசிக்கும்போது சோழர்களின் கைவண்ணமாக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். சேதாரத்தை வைத்துதான் இப்படிச் சில செய்திகளைச் சொல்கிறார்கள். எதற்கும் முறையான ஆதாரம் இல்லை. பல்லவர்களோ, சோழர்களோ தெரியவில்லை. யாரோ ஒரு அரசன்தான் இந்த அனவரத தாண்டவேஸ்வரருக்கும் ஓர் ஆலயத்தைக் கருங்கல் திருப்பணியாக உருவாக்கி உள்ளான். இந்த அரடாப்பட்டு அனவரத தாண்டவேஸ்வரருக்கும் மாட்சிமை தங்கிய மன்னர்களும், மகோன்னத குணங்கள் நிரம்பிய மக்களும் மான்யங்களை எழுதி வைத்திருக்கலாம். இதெல்லாம் ஒரு யூகம்தான். அத்தகைய சொத்துக்கள், இன்றைக்கு எவர் ஆதிக்கத்திலாவது இருக்கலாம்தான். இந்த மான்யங்கள் குறித்த முறையான தகவல்கள் ஏதும் ஆலயம் தொடர்பான எவருக்கும் தெரியவில்லை.

முறையான தல வரலாறு கூட இந்த ஆலயத்துக்கு இல்லை. யாரோ சிலர் சொன்னது, சிலரிடம் இருந்து சேகரித்தது என்பதான தகவல்கள் மட்டுமே இப்போது நடைமுறையில் இருக்கின்றன. அற்புதமான இந்த ஆலயத்துக்கு நித்திய வழிபாடுகள் நின்று போய் சுமார் 60 வருடங்களுக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். அதாவது, கூட்டமாக பக்தர்கள் உள்ளே போய் விழாக்கள் நடந்து 60 வருடங்களுக்கு மேல் இருக்கும். சமீபத்திய வருடங்களில் பெரிய விழாக்கள் ஏதும் இந்த ஆலயத்தில் நடந்துள்ளதாகத் தகவல் இல்லை. கோயிலுக்குள் இருக்கிற இந்த வெறிச்சோடிய நிலைமை என்றுதான் மாறுமோ, தெரியவில்லை. ஸ்ரீஅனவரத தாண்டவேஸ்வரர் பிரகாசிக்க, ஜோதி சொரூபமான அந்த அண்ணாமலையார்தான் அருள் புரிய வேண்டும்என்கிறார் திருவண்ணாமலையில் வசித்து வரும் ஆன்மிக அன்பர் ஒருவர்.

கிழக்குப் பார்த்த ஆலயம். உள்ளே நுழையும் முன் நான்குகால் மண்டபங்கள் இரண்டு காணப்படுகின்றன. சில அடிகள் எடுத்து வைத்ததும் களை இழந்து போன ராஜகோபுரம். அடிப் பகுதி கருங்கல் கட்டுமானம். மேலே செங்கல் கட்டுமானம்.

மூன்று நிலை. அலங்காரமாகவும் அற்புதமாகவும் ஒரு காலத்தில் கட்டப்பட்ட இந்த ராஜகோபுரம், இப்போது ஏகத்துக்கும் சிதிலமாகி செடிகளுக்கும் கொடிகளுக்கும் புகலிடமாக இருப்பது, மனதைப் பிசையும் காட்சி. ராஜகோபுரத்தின் செங்கல் கட்டுமானம் செல்லரித்துப் போனது போல், சுதைகள் முற்றிலும் தேய்ந்து, செந்நிறக் கற்கள் அலங்கோலமாகத் துருத்திக் கொண்டு காட்சி அளிக்கின்றன. ஆலயத்தைச் சுற்றி அமைந்துள்ள கருங்கல்லால் ஆன உயரமான சுற்றுச் சுவர் பிரமிக்க வைக்கிறது. ஆனால், இந்த சுவரும் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்து, பல கற்கள் போன இடம் தெரியவில்லை.

பரந்த வெளியைத் தாண்டியதும் பெரிய மண்டபம். இங்கே வலப் பக்கத்தில் ஒரு மேடையில் பாலாலயம் செய்யப்பட்ட மூலவர் விக்கிரகங்கள் (சிலா) வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 2003ல் பாலாலயம் நடந்ததாம். விநாயகர், அனவரத தாண்டவேஸ்வரர், அனவரதாம்பிகை ஆகிய மூன்று விக்கிரகங்கள் மட்டும் இங்கே காணப்படுகின்றன. பிரமாண்டமான இந்த ஆலயத்தில் இந்த மூன்று விக்கிரகங்கள்தான் ஓரளவு சுமாரான நிலையில் காட்சி தருகின்றன. எண்ணெய்ப் பிசுக்குகள் அதிகம் சேர்ந்து போனதால், அம்மனின் அழகிய முகத்தில் வசீகரம் சற்றுக் குறைந்து காணப்படுகிறது. இந்த விக்கிரகங்களுக்கு அபிஷேகம் ஆகி நெடு நாட்கள் ஆகி இருக்கும் போலிருக்கிறது.

ஒரே பிராகாரம். சற்றே பெரியது. திருப்பணி வேலைகள் துவங்கி இருப்பதால் ஆங்காங்கே கற்குவியல். மண்மேடுகள். பிராகார வலத்தின்போது முதலில் வருவது விநாயகர் சந்நிதி. முழுக்க முழுக்க மண் மூடிப்போன இந்தச் சந்நிதியை சுத்தம் செய்த போது இரண்டு லோடு மண்ணை வெளி யேற்றினார்களாம். தவிர, ஏராளமான செடிகளும் வேர்களும் சந்நிதியின் உள்ளே ஊடுருவி இருந்தனவாம். அதையெல்லாம் முழுக்க அகற்றி, சந்நிதியை ஓரளவு பார்க்கும் நிலையில் தற்போது வைத்திருக்கிறார்கள். இங்கிருந்த விநாயகர்தான் தற்போது பாலாலயத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்கள். பிராகாரத்தை ஒட்டி, திருமாளிகைப் பத்தி மண்டபம் பெரிய அளவில் தொடர்ந்து கொண்டே வருகிறது. அந்தக் காலக் கட்டுமானத்தின் சிறப்பையும் தன்மையையும் ஆலயத்தின் உள்ளே இருந்தபோதுதான் நம்மால் பூரணமாக உணர முடிந்தது. அதாவது வெளியே வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் நண்பகல் வேளையிலும் ஆலயத்துக்குள்ளே சில்லென்று குளுமையாக உள்ளது.

விநாயகப் பெருமான் திருச்சந்நிதியை அடுத்து ஸ்ரீவேணுகோபாலருக்கும் ஸ்ரீஆறுமுகப் பெருமானுக்கும் தனித்தனி சந்நிதிகள். ஆனால், உள்ளே விக்கிரகங்கள் இல்லை. ஆறுமுகப் பெருமானின் சேதமான விக்கிரகம் ஒன்று பிராகாரத்தின் ஒரு மூலையில் தென்படுகிறது. இந்த விக்கிரகத்தின் கைகள் உடைந்துள்ளதால் புதிய பிரதிட்டைக்கு இது உதவாதாம். இதுவாவது பரவாயில்லை. ஸ்ரீவேணுகோபாலர் விக்கிரகத்தைக் காணவே காணோம்.

வன்னி மரமும் வில்வ மரமும் காணப்படுகின்றன. ஈஸ்வரனின் கோஷ்டத்தில் விக்கிரகங்கள் எதுவுமே இல்லை. அம்மன் சந்நிதி பாழ்பட்டுக் காணப்படுகிறது. வெளவால்கள் மட்டும் அடிக்கடி உள்ளே போய்விட்டு வெளியே வருகின்றன. வெளியே நந்தி விக்கிரகம் காணப்படுகிறது. விஸ்தாரமான சந்நிதி. இந்த அம்பாள் அனவரதாம்பிகை என அழைக்கப்படுகிறாள். மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை, விமானம் ஆகிய எல்லாம் உண்டு. சிறிது தொலைவு நடந்ததும் தரையோடு தரையாக ஒரு சுரங்கம் காணப்படுகிறது. இப்போது இதன் உள்ளே குப்பைகளைப் போட்டு மூடி வைத்திருக்கிறார்கள். இதில் இறங்கி நடந்தால், திருவண்ணாமலை ஆலயம் சென்று விடலாம் என்று உள்ளூர்க்காரர்

ஒருவர் சொன்னார். சுரங்கம் தற்போது அடைபட்டுள்ளது. பிராகாரத்தில் பாணம் இல்லாமல் ஆவுடை, பின்னமாகிப் போன இன்னொரு விநாயகர் விக்கிரகம் போன்றவை காணப்படுகின்றன. அடுத்து, நவக்கிரக சந்நிதி. கொடி மண்டபம், பலிபீடம் போன்றவை இல்லை. அதே நேரம் மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை, விமானம் என்று அனவரத தாண்டவேஸ்வரரின் சந்நிதி சற்று விரிவாகவே காணப்படுகிறது. திருப்பணி வேலைகளின் காரணமாக பிரதான நந்தி தேவர் கீழே இருக்கிறார். இவர்தான் பிரதோஷ நாயகர்.

இங்கு குடி கொண்டு அருள் பாலிக்கும் ஈஸ்வரரின் பெயர் வித்தியாசமானது. அருள்மிகு அனவரத தாண்டவேஸ்வரர். ‘அனவரதஎன்றால் எந்நேரமும் என்று பொருள். ‘தாண்டவம்என்றால் நடனம் என்று பொருள். அதாவது, எப்போதும் நடனம் ஆடிக்கொண்டே இருக்கும் ஈசன் என்பது இந்த ஆலய இறைவனின் பெயர். இங்கே உறையும் இறைவனுக்கு இந்தப் பெயர் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

திருவண்ணாமலையில் இருந்து திருக் கோவிலூர் செல்லும் பிரதான சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் வருகிற கிராமம்அரடாப்பட்டு. இங்கிருந்து திருக்கோவிலூருக்கு சுமார் 15 கி.மீ. தொலைவு. அதாவது இரு பெரும் ஷேத்திரங்களான திருவண்ணாமலை மற்றும் திருக்கோவிலூருக்கு மத்தியில் இருக்கிறது அரடாப்பட்டு கிராமம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *