ஐராவதேஸ்வரர் திருக்கோயில், தாராசுரம்

அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், தாராசுரம், தஞ்சை மாவட்டம்.

இறைவன்
ஐராவதேஸ்வரர்
இறைவி
தேவநாயகி அம்பாள்
தல விருட்சம்  வில்வமரம்.

கும்பகோணத்திலிருந்து தஞ்சை செல்லும் வழியில் அரசலாற்றைக் கடந்தால் தெற்கே தாராசுரம் உள்ளது. இக்கோயில் மிகச்சிறந்த கலைவளம் கொண்ட கோயிலாகும். இங்குள்ள சிற்பங்கள் உயிருடன் நம்முடன் கொஞ்சுபவை.

இக்கோயிலில் உள்ள பலிபீடம் இசையொலியெழுப்பும் கல்லால் அமைந்தும் பரதத்தின் நுட்பங்களை விளக்கும் நுண்ணிய சிற்பங்களும் 63 நாயன்மார்களின் வரலாறும் சிற்பவேலைப்பாட்டின் சிகரமாக விளங்குகிறன.

இத்தலத்திற்கு புராணக்கதை ஒன்று உண்டு. அதாவது இந்திரனின் வாகனமான ஐராவதம் என்னும் யானை துர்வாச முனிவரின் கோபத்திற்கு ஆளாகி சாபத்தால் வெள்ளை நிறம் மாறி கருமையாகிறது. எனவே சாபம் நீங்க இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றது. ஆகவே ஐராவதம் வந்து வழிபட்டதால் இத்தலம் ஈஸ்வரர் ஐராவதேஸ்வரர் என்றும் இத்தலம் ஐராவத நகரம் என்றும் பெயர் ஏற்பட்டது.

மேலும் தாரன் என்ற அரசன் என்றும் மரணமில்லாது வாழவும் தேவர்களை வெற்றிகொள்ளவும் இத்தல இறைவனை பூசித்து அருள் பெற்றான். ஆதலின் தாராசுரம் எனப்பெயர் பெற்றது என்றும் கூறுவர். மேலும் தாரன் அசுரனின் மகன் மேகதாரன் வைகாசி மாதத்தில் பெரும் விழா ஒன்றை இத்தலத்தில் சிவபெருமானுக்கு எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இத்தல அம்பாள் தேவநாயகி அம்பாள், இப்போது தனிக்கோயிலாக உள்ளது. முன் காலத்தில் ஒன்றாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. வெளிநாட்டினர் வந்து கண்டு வியக்கும் இக்கோயில் ஒரு கலைப்பொக்கிஷம் ஆகும். இத்தலம் பாடல் பெறாத தலம் ஆகும்.

கும்பகோணத்தில் இருந்து 3 km தூரத்தில் அருள்மிகு ஐராவதேஸ்வரர் குடிகொண்டுள்ள அழகிய கிராமம் தாராசுரம். கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு சிற்றுந்தை(மினி பஸ்) பிடித்து ஏறி அமர்ந்தால் பத்தே நிமிடத்தில் வந்து விடுகிறது தாராசுரம். கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் சற்றே உட்புறமாக அமைந்துள்ளது தாராசுரம். தாராசுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இடதுபுறமாக சென்று, அரசலாற்றின் மேலே உள்ள சிறிய பாலத்தின் வழியாக நடந்து, சில தெருக்களைக் கடந்து சென்றால் பரந்து விரிந்த நிலப்பரப்பில் காணப்படுகிறது தாராசுரம் அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில்.


இத்திருக்கோயிலின் அமைப்பு அப்படியே தஞ்சை பெரிய கோயிலின் வடிவத்தை போன்றே அமையப் பெற்றுள்ளது. 12-ம் நூற்றாண்டில் இரண்டாம் இராஜ ராஜ சோழனால் கட்டப் பட்ட சிற்பக் கோயில் இது. மழை பெய்து திருக்கோயிலே தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. ஒரு ஆற்றின் நடுவே அமைக்கப் பட்ட கோயிலைப் போல காட்சி அளித்தது. முதலில் நம்மை வரவேற்பது நந்தி பகவான். அதையடுத்து ஐந்து கலசங்களைத் தாங்கிய அழகிய கோபுர வாசல் வழியாக திருக்கோயில் பிரவேசம். இத்திருக்கோயில் உயர்ந்த மதில் சுவர்களுடன், திருக்கோயிலைச் சுற்றி அகழி போன்ற அமைப்பு உள்ளது. இந்த மழையில் அவை நீரால் நிரம்பி உள்ளன.

நந்தி பகவான் அமர்ந்து அருள்பாலிக்கும் சிறிய மண்டபத்தின் தூண்கள், படிகள் என அனைத்திலும் சின்னச் சின்ன சிற்ப வேலைப்பாடுகள். இக்கோயில் சிறப்புகளில் ஒன்றான இசைப் படிகள் இந்த நந்தி பகவான் அமர்ந்துள்ள மண்டபத்தின் பின் புறம் அமைந்துள்ளது. ஏழு கருங்கற் படிகள் ஏழு ஸ்வரங்களை ஒலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

நாம் கோயிலுக்குள் நுழையும்போது உள்ள மண்டபத்திலும் சரி, உள்ளே உள்ள கோபுரங்களிலும் சரி ஒவ்வொரு அடுக்குகளிலும், ஒரு இடம் கூட விட்டு வைக்காமல் சிற்பக் களஞ்சியமாக விளங்குகிறது. இயற்கை சீற்றம் முதற்கொண்டு பல்வேறு சூழ்நிலைகளைத் தாண்டி இக்கோயிலின் எதிரே காணப்படும் ஒரு வாயிலுடன் கூடிய மண்டபம். உடைந்த நிலையில் கோபுரம் எழும்பாத நிலையில் காணப் படுகிறது.

கொடி மரத்தை வணங்கிப் பின் கோயிலின் உள்ளே சென்றதும் ஏதோ சிற்பக் கூடத்திற்குள் நுழைந்தது போன்ற பிரமை நமக்கு. ஏற்கனவே புதுப் பொலிவுடன் விளங்கும் கோயில் மழையில் நனைந்து புளி போட்டு தேய்த்த பித்தளைப் பாத்திரம் போல பளபளவென காட்சி அளித்தது. கோயில் முழுவதும் தூண்கள் நிறைந்து காணப்படுகின்றன.


மண்டபங்களின் கீழ் பகுதியில் நடனத் தாரகைகளின் நடன அமைப்புக்கள், குத்துச் சண்டை வீரர்களின் சண்டைக் காட்சி, இரண்டு செம்மறி ஆடுகள் தலையால் முட்டிக் கொண்டு சண்டையிடுவது போன்ற சிற்பக் காட்சி, பூதகணத்தின் பின் செல்லும் காளை மாட்டின் தோற்றம், மனித உருவமும் விலங்கு உருவமும் சேர்ந்து அமைந்துள்ள சிற்பம், யோகாசனம் செய்வது போன்ற தோற்றத்துடன் கூடிய சிற்ப அமைப்பு, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் சிற்பங்களின் அமைப்பினை.

இத்திருக்கோயிலே ஒரு தேர் போன்ற அமைப்புடனேயே காணப் படுகிறது. தாராசுரம் கோயில் உள்ளே உள்ள கோபுரம் ஒற்றைக் கலசத்துடன் கூம்பிய வடிவில் தோன்றுகிறது. இந்த கூம்பிய விமானத் தோற்றமும் அதற்குக் கீழே இரு புறமும் யானைகளும் குதிரைகளும் பூட்டிய தேர், ரதம் போல காட்சி தருகிறது. இது போன்ற மண்டபத்தின் அமைப்பு வான்வெளி ரகசியத்தைக் காட்டுவதாக வான்வெளி அறிஞர்கள் கூறியதாக தகவல்.


இராமாயணம், மகாபாரதம், ரதி மன்மதன் கதைகள், சிவபுராண கதைகள், மேலும் அதிபத்தர், இயற்பகையார், இசைஞானியார், அமர்நீதியார், எறிபத்தர், ஏனாதிநாயனார் உட்பட அறுபத்துமூன்று நாயன்மார்களின் கதைகளும் கோயில் முழுதும் ஆங்காங்கே சிற்ப வடிவில் காணப்படுகின்றன. பரதநாட்டிய அடவுச் சிற்பங்கள் அதிகம் காணப் படுகின்றன.

ஒவ்வொரு தூண்களின் நான்கு பட்டைகளிலும் சிற்பங்கள் அழகிய அரிய சிற்பவகைகள். தூண்களில் காணப்படும் சிற்பங்கள், இரண்டு பெண்கள் ஒன்றாக நடனமாடும் தோற்றம், ஓருடல் சிற்பங்கள், நர்த்தன விநாயகரின் வடிவம், போருக்குச் செல்லும் வீரர்கள் கையில் வில், வேல் என போர்கருவிகளுடன் காணப் படுவது, சிவபிரான் நந்தி மேல் அமர்ந்தும் பூதகணங்கள் அவருக்கு பணிவிடை செய்வதும், சிவனும் பார்வதியும் நந்தி தேவர் மேல் பவனி வர பக்தகோடிகள் பின்தொடரும் காட்சி, சிவபிரான் தட்சிணாமூர்த்தி வடிவம் கொண்டு அனைவருக்கும் அருள்பாலிக்க, அவரது சீடர்கள் குருவின் போதனைகளை கேட்கும் விதமான தோற்றம், என பலவகையான சிற்ப வடிவங்கள்.
மண்டபங்களின் கீழ்புறம், தூண்களின் நான்குபுறம் மட்டுமல்லாது, ஒவ்வொரு மண்டபங்களின் மேற்கூரையிலும் கணக்கிலடங்கா சிற்பங்கள் கண்ணைக் கவர்கின்றன. இங்கும் நடன மங்கைகளின் தோற்றம், விநாயகர் தோற்றம் என சிற்ப வேலைப்பாடுகள். கட்டம் கட்டமாக வடிவமைக்கப் பட்டு அந்த கட்டங்களுக்குள்ளே பல நூறு சிற்பங்களா, சிற்ப ஓவியங்களா என ஐயப் பட வைக்கும் தோற்றம்.
நீண்ட மண்டபத்துடன் கூடிய கோபுரத்தில் சுவர் முழுக்க சிற்பங்களோடு, கருப்பு வண்ண கருங்கற்களில் அன்னை, அப்பனது பல்வேறு அவதாரங்களின் சிற்ப வடிவம். அடிமுடி தேட வைக்கும் அண்ணாமலையார் லிங்கோத்பவரின் சிற்ப வடிவம் கோயில் சுவற்றின் ஒரு பக்கம்.

கோயில் கோபுரத்தின் மேற்புறத்தில் எத்தனை சிற்பங்கள், அவற்றில் ஒன்றாக கலைகளின் தந்தை நடராஜரின் அழகிய சிற்பம். வண்ணமயமான ரதத்தினை குதிரை இழுத்துச் செல்வது போன்ற அற்புதத் தோற்றம் தேர் சக்கரத்துடன்.

ஐராவதேஸ்வரர் குடிகொண்டுள்ள சன்னதியின் முன்புறம் அமைந்துள்ள மண்டபத்தின் தூண்களில் ஒரு வினோத மிருகம் அந்த மண்டபத்தையே தாங்கிக் கொண்டுள்ளது போன்ற தோற்றம். அந்த மிருகம், யானையின் தந்தம், தும்பிக்கை, சிங்கத்தின் தலை, பற்களுடன் கூடிய முக அமைப்பு, செம்மறி ஆட்டின் கொம்பு, மாடு அல்லது மான் இவற்றின் காது, முதலையின் கால் அவற்றின் நக அமைப்பு என நிறைய மிருகங்கள் ஒன்று சேர்ந்து அமைந்த வடிவமாக இந்தச் சிற்பம் செதுக்கப் பட்டுள்ளது. என்ன விஷயத்தை உணர்த்த இந்த வடிவத்தை செதுக்கினார்களோ தெரியவில்லை. இந்த சிற்பத்தை பார்க்கும்போது எனக்குத் தோன்றிய ஒரு விஷயம், தற்கால மனிதன் தன்னிடம் உள்ள தீய குணங்களை விடுத்து, நல்ல குணங்களை தக்க வைத்துக் கொண்டு, இந்த விலங்குகளிடம் உள்ள நல்ல குணங்களைப் பெற்று நல்ல மனிதனாய் வாழ வேண்டும் என்பதை இந்தச் சிற்பம் உணர்த்துவதாகப் பட்டது.
வேணுகோபாலனின் இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் யாருமுண்டோ. இசையில் மயங்கி நிற்கும் இராதை வேணுகோபாலனுடன்.

தானத்தில் சிறந்தது கண்தானம். இதனை அப்போதே நிரூபித்துக் காட்டிய கண்ணப்ப நாயனாரின் அழகிய தோற்றம். கடவுள் முன் கவி பாடுபவனும் ஒன்றுதான், காட்டு வாசியும் ஒன்றுதான். தன் அன்பை மென்மையாக அல்லாமல், மேன்மையாக வெளிப்படுத்தி நாயன்மார்களுள் ஒருவராகிப் போன புண்ணியவானின் உன்னதச் சிற்பம்.
கல்விக்குத் தலைவியான சரஸ்வதி தேவியின் அழகிய சிற்பம். இவரிடம் அனுமதி பெற்றே சிவனை காணச் செல்வது கோயில் மரபு. சிவபிரானின் ஆயுட்கால காவலன். அதிகார நந்தியின் அற்புதத் தோற்றம்.

உலகத்துக்கெல்லாம் படியளக்கும் அன்னபூரணித் தாயாரின் வார்த்தைகளால் வடிக்க முடியாத காண்போரை வியப்பில் ஆழ்த்தும் சிற்பம். அன்னப் பாத்திரம் ஏந்திய இவரது கை விரல்களின் நகங்கள் கூட தத்ரூபமான வடிவத்துடன் காட்சி அளிக்கிறது. கால் விரல்களும் அவ்வாறே.

முனிவரின் தவக்கோலம் நம் கண் முன்னே. எட்டு கையுடன் தோன்றும் மகிஷாசுரமர்த்தினியின் முழு வடிவம்.
முப்புரம் எரித்த திரிபுராந்தகன் கதை சொல்லும் சிற்பம். யானையை வதம் செய்து அதன் தோலைத் தன்மீது உடுத்திக் கொள்ளும் ஈசனின் யானை உரி போர்த்தவர் கஜசம்காரமூர்த்தியின் கதை மற்றொரு சிற்பம்.
இடப் பக்கத்தில் இருந்து பார்த்தால் ஒரு காளையின் உருவம், வலப் பக்கத்தில் இருந்து பார்த்தால் ஒரு யானையின் வடிவம் தெரிகிறது. இந்தச் சிற்பம் அதிசயத்தின் உச்சம். கண்ணப்ப நாயனாரின் காலணிகள் சிற்பவடிவில். காட்டில் அலையும் அவர் அணிந்திருந்த காலணியின் தோற்றம், காட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு செய்த அமைப்பு.

மேலும் எமன் ஒரு ரிஷியின் சாபத்தால் தனக்கேற்பட்ட சரும நோய் நீங்க இக்கோயில் குளத்தில் குளிக்க சரும நோய் நீங்கப் பெற்றான் எமதருமன். இதன் காரணமாகவே இக்கோயில் தீர்த்தம் எம தீர்த்தம் என அழைக்கப் படுகிறது.
பல நூறு கோயில்களுக்குச் சென்று பல ஆயிரம் சிற்பங்களை, அவற்றைக் காணும் பாக்கியத்தினை ஒரே கோயிலிலேயே காணும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது இந்த தராசுரம் திருக்கோயில். மத வேறுபாடுகளின்றி அனைவரும் தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது இதன் சிற்பக் கலை சிறப்பிற்காகவே நம் அடுத்த தலைமுறையினரும் கட்டாயம் காண வேண்டிய கலைக் கருவூலம்.

இவ்வூர் 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக அறியப்படுகிறது. இக்கோவில் மிகச்சிறப்பான கட்டிடக்கலையின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய விமானம் 85 அடி உயரம் கொண்டது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே 4 கிமீ தொலைவில் உள்ளது தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில். கோயில் மண்டபங்களின் மேல் கூரையிலும் தூண்களிலும் எண்ணற்ற நடனமாடும் சிற்பங்கள். ஒரு இஞ்ச் உயரம் மட்டுமே உள்ள குட்டி மினியேச்சர்சிற்பங்களும் உண்டு. இரண்டாம் ராஜராஜ சோழனால் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோயிலைத் தன் உயிரைக் கொடுத்துக் கட்டியிருக்கிறான் இந்த சோழ மன்னன். இவனுடைய முன்னோர்கள் ராஜராஜன் தஞ்சை கோயிலை 13 அடுக்கு கோபுரத்துடனும் ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தில் 9 அடுக்கு கோபுரத்துடனும் சிவன் கோயில்களை அமைத்தனர். ஆனால் இரண்டாம் ராஜராஜன் ஐந்து அடுக்குகளுடன் ஐராவதேஸ்வரர் கோயிலின் கோபுரத்தை அடக்கமாக உருவாக்கினான். ஆனால் உள்ளே தேர்வடிவ முக மண்டபத்தை எழுப்பியும் காலத்தால் அழியாத அரிய சிற்பங்களையும் தூண்களையும் உண்டாக்கியும் தன் கலைச்செறிவினால் வரலாற்றில் தனியிடம் பெற்றான்.

ராஜராஜனும் ராஜேந்திரனும் மகேஸ்வர சிவம்என்னும் சிவனே உயர்ந்தவன் என்னும் கொள்கையைத் தழுவி, அதைப் போற்றும் வகையில் தங்கள் கோயில்களைக் கட்டினர். ஆனால் இரண்டாம் ராஜராஜன் பெண்ணின் பெருமையை கலையிலும் பக்தியிலும் உயர்த்தியவன். சோழர்கள் காலத்தின் இறுதிக்கட்டத்தில்தான் சக்தி வழிபாடு முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதற்கு வித்திட்டவன் இரண்டாம் ராஜராஜன். தன் கோயிலில் வடக்குப் புறத்தில் முதன்முதலாக அம்மனுக்கு தனி சன்னதி அமைத்து தமிழ்நாட்டுக் கோயில்களின் சரித்திரத்தில் புதுமை செய்தான் என கோயிலின் உள்ளே உள்ள இந்தியத் தொல்பொருள் காட்சியகத்தில் செய்தி எழுதி வைக்கப்பட்டுள்ளது.

கோயிலைக் கட்ட ஆரம்பிக்கும்போதே பெண்கள்மேல் இருந்த தனக்கு இருந்த மதிப்பைக் காட்ட இரண்டாம் ராஜராஜன் முகமண்டபத்தில் இரு நடனமணிகளின் அழகான சிற்பங்களை உருவாக்கினான். கோயிலின் முகப்பில் விநாயகர் சன்னிதியும் அதன் மேலே பலிபீடத்திற்கு இட்டுச் செல்லும் தட்டினால் ஏழுஸ்வரங்கள் எழும்பும் ஏழுபடிகளும் அமைந்துள்ளன. அதன் இருபக்கங்களிலும் இந்த இரு சிற்பங்களும் காணப்படுகின்றன. மேலும் பெரிய நாயகி அம்மன் கோயிலின் உள்ளே மகாமண்டபத்தின் இடது, வலது பக்கங்களில் இரு எழில்மிக்கவீரப்பெண்மணிகளின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் ராஜராஜன் விலங்குகளின் மேலும் பிரியம் கொண்டவனாக இருந்திருக்க வேண்டும். இந்திரனை சுமந்த ஐராவதம் என்னும் வெள்ளை யானைகள், (கர்ப்பகிரகத்தின் தெற்கு வடக்கு நுழைவுகளில் காணப்படுகிறது), சிங்கங்கள் வேட்டையாடுவதுபோல அமைந்த யானைகள், அன்னப் பறவை, அன்னப்பட்சி, இரண்டு பாம்புகள் ஒரு எலியைப் பிடிக்கும் காட்சி, யானைகளுக்கு குழந்தைப் பிறக்கும் காட்சி என்று கல்லில் ஒரு விலங்குக் காட்சிச் சாலையை அமைத்திருப்பதும் நம்மை பிரமிக்க வைக்கும்.


கோயிலின் மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இவற்றையே அனிமேஷனாகச் செய்து பல நூறு வாரங்கள் கார்ட்டூன் கதைகளாகக் காட்டலாம். மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கர்ப்பகிரகத்தில் லிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோயில்களில் காணப்படாதது. சூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கம் பிரகாரத்தில் காணப்படுகிறது. பிறகோயில்களில் இல்லாத, அதிசயமான சிற்பங்களும் இங்கு உண்டு.
கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி என சாதரணமாகக் கோயில்களில் காணப்படாத சிற்பங்கள் நம்மை அதிசயிக்க வைக்கும்.

மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர்(சிவனும் பார்வதியும் ஒன்றுகலந்தது), மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும். கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவனும் குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் என நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சிற்பங்களும் உண்டு. குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் என்று சரித்திர ஆய்வாளரான குடவாயில் சுப்ரமணியம் கண்டறிந்துள்ளார்.

மண்டபத்தின் மேல் நாயன்மார்கள், பிரகாரத்தில் சிவாச்சார்யார்களின் 108 உருவங்கள் ஆகியவை இறைவனைப் போற்றும் சிவனடியார்களை வணங்கும் சோழர்களின் பாரம்பரியத்தில் வந்தவன் இரண்டாம் ராஜராஜன் என்பதைக் காட்டும். பிரகாரங்களின் மற்றொரு அழகான அம்சம் அங்கு அமைக்கப்பட்டுள்ள காற்றோட்டமிக்க மண்டபங்கள். சதுர, செவ்வக, நீள்சதுர, வட்ட, பூக்கள் வடிவிலான குறுக்கும் நெடுக்கிலும் காற்று நுழையும்படி அமைக்கப்பட்ட கிரானைட் சன்னல்களைப் பார்க்கலாம். அம்மன் சன்னதியில் பல பூக்களின் டிசைன்களை சுவர்களில் பார்க்கலாம். புடவைக் கடைக்காரர்கள் பார்த்து காப்பியடிக்க வேண்டிய டிசைன்கள்.

அம்மன் கோயிலுக்குப் பின்புறம் பட்டீஸ்வரம் சாலையில் வீரபத்திரருக்குக் கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. வீரபத்திரர் சிவனின் ஜடாமுடியிலிருந்து அவதரித்ததாகக் கதைகள் கூறுகின்றன. இக்கோயிலின் கோபுரம் முழுதும் செங்கல்லால் அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் முதன்முதலாக வெறும் செங்கல்லால் அமைக்கப்பட்ட முத்ல் பெரிய கோபுரம் இது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நான் சென்றபோது மதிய வெய்யிலில் சூரியனின் வெளிச்சம்பட்டு கோபுரம் பளபளவென சிவப்பு நிறத்தில் மின்நியது. இங்குதான் தமிழ்க்காவியமான தக்கயாகப் பரணிஎன்னும் நூலைப் பாடிய ஒட்டக்கூத்தரின் சமாதி காணப்படுகிறது. பார்வதியின் அம்சமான தாட்சாயிணியின் தந்தையான தட்சணின் கதையே இந்த நூலாகும். ஐராவதேஸ்வரர் கோயிலின் உள்ளே திருவள்ளுவர் சிலையும் காணப்படுகிறது.
காட்சியகத்தின் சுவற்றின் கீழ்ப்பகுதியில் மண்குடத்தை ஒருவர் தட்டி தாளம் எழுப்புவதாக ஒரு சிற்பம் காணப்பட்டது. அதுவே கடம் தோன்றியதின் தொடக்கமாக இருந்திருக்கலாம். இரண்டாம் ராஜராஜனின் இசை, கலை, இலக்கியம், பக்தி இப்படி எல்லாவற்றையும் அங்குள்ள சுவர்கள், தூண்கள், சிற்பங்கள், சிலைகள் சொன்னாலும் எனக்கு பிடித்தது அவன் பெண்மையை அதன் சக்தியை தெய்வமாக தனியாகக் கோயில் கட்டி முன்னோடியாக வழிபாடு செய்ததுதான்.

இரண்டாம் இராசராசன்(கி.பி 1146 – 1163)

இரண்டாம் குலோத்துங்கனுக்குப் பிறகு கி.பி.1150-இல் சோழ மண்டலத்தில் மாமன்னனாக முடிசூடியவன் இரண்டாம் இராசராசனாவான். இம்மன்னவன் பழையாறை நகரை ஒட்டி இராசராசபுரி எனும் நகரைத் தோற்றுவித்துத் தன் தலைநகராகக் கொண்டான். இந்நகரை ஒட்டக்கூத்தர் எண்டிசைத் தேவரும் புகுதும் இராசராசபுரி செம்பொன் மாட நிரை இராசராசபுரி என்றெல்லாம் போற்றுகின்றார். இந்த இராசராசபுரியில் இராசராசசேச்சரம் எனும் சிவாயத்தை எடுப்பித்து அழியாப் புகழ் எய்தினான். இத்திருக்கோயில் ஈசனையே பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணி எனும் அருந்தமிழ்க் காப்பியத்தைப் படைத்தார்.

கல்லெல்லாம் கதைசொல்லும் இராசராசேச்சரம் :

இராசராசபுரியில் இராசகம்பீரன் எடுத்த இராசராசேச்சரம் எனும் திருக்கோயில் சாக்த வழிபாட்டின் அடிப்படையில் எழுப்பப்பட்டது. இங்குக் கருவறையின் வெளிப்புறம் திருத்தொண்டரின் மாக்கதை முழுவதும் கல்வெட்டுக் குறிப்புகளுடன் சிற்றுருவ சிற்பத் தொகுதிகளாகவும் படைக்கபட்டுள்ளன. மேலும் இங்கு இடம்பெற்றுள்ள மாயசக்தி, மோகினி, நதி தெய்வங்கள், கண்ணப்பர் ஆகியோர் சிற்பங்களும் கஜசம்கார மூர்த்தி, திரிபுராந்தகர் கங்காள மூர்த்தி ( தற்போது தஞ்சைக் கலைக் கூடத்தில் உள்ளவை ) ஆகியோர் சிற்பங்களும் பிற்கால சோழர்களின் கலைத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்பவை.

திரும்புமிடமெல்லாம் புராணக்கதைகளையும் வரலாற்றுக்கதைகளையும் சிற்றுருவ சிற்பத் தொகுதிகளாகத் தாங்கி நிற்கும் இத்திருக்கோயில் உலக நாட்டுக் கலை வல்லுநர்களால் மிகவும் போற்றப்படும் ஓர் அரிய கற்றிளியாகும். இக் கோயிலைப் படைத்ததனால் இராசகம்பீரனாம் இரண்டாம் இராசராசனின் புகழ் விண்ணளவு ஓங்கி நிற்கிறது.

மேற்கூறியவை வலைப்பூக்களின் தொகுப்பு. அவ்வலைப்பூக்களுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *