அகத்தீஸ்வரர் கோயில், திருச்சுனை
அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயில், திருச்சுனை, மேலூர் தாலுகா, மதுரை மாவட்டம்.
காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அகத்தீஸ்வரர் | |
அம்மன் | – | பாடகவள்ளி | |
தீர்த்தம் | – | சுனை | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | திருச்சுனை | |
மாவட்டம் | – | மதுரை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
கைலாயத்தில் சிவ,பார்வதி திருமணம் நடந்தபோது, தேவர்களும், மகரிஷிகளும் அங்கு சென்றனர். இதனால், வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. எனவே, சிவன் அகத்தியரை தெற்கே பொதிகை மலை நோக்கி அனுப்பினார்.
தென்திசைக்கு கிளம்பிய அகத்தியர் தான் மட்டும் சிவன் திருமணத்தை காணாமல் செல்வதை எண்ணி வருந்தினார். எனவே சிவன், அகத்தியர் செல்லும் வழியில் எவ்விடத்தில் திருமணக்காட்சி காண விரும்புகிறாரோ, அவ்விடங்களில் தான் மணக்கோலத்தில் காட்சி தரும்படியான வரம் கொடுத்தார்.
அதன்படி தென்திசை வந்த அகத்தியர் பல தலங்களில் சிவனின் திருமணக்காட்சியை தரிசித்தார். அவர் இத்தலம் வழியாக வந்தபோது, இந்த குன்றில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அப்போது அவர் சிவதிருமண தரிசனம் பெற வேண்டும் என எண்ணினார். சிவனை தரிசிக்கும் முன்பு நீராட விரும்பினார். அந்த நேரத்திலேயே, அதிசயமாக பாறையில் ஊற்று பெருகியது.
தீர்த்தத்தில் நீராடிய அகத்தியர், சிவனை வழிபட அருகில் இலிங்கம் தேடினார். ஆனால், இலிங்கம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, பாறையில் சுனை நீரை தெளித்தார். தெளித்ததும், பாறை நெகிழ்வாக மாறியது. பின், பாறையையே சிவலிங்கமாக பிடித்து பூஜைகள் செய்து வழிபட்டார் அகத்தியர். அப்போது இக்குன்றுக்கு எதிரேயுள்ள மற்றொரு மலையில் சிவன், பார்வதியுடன் திருமணக்கோலத்தில் காட்சியளித்தார்.
அகத்தியருக்கு காட்சி தந்தவர் என்பதால் சுவாமி, “அகத்தீஸ்வரர்” எனவும் பெயர் பெற்றார்.
சிவன் சன்னதிக்கு பின்புறத்தில் சுனை தீர்த்தம் இருக்கிறது. மிகவும் விசேஷமான இந்த தீர்த்தம் எப்போதும் வற்றுவதில்லை என்பது கலியுக அதிசயம்.
சுனை தீர்த்தம் தெளித்து சிவலிங்கம் உண்டாக்கப்பட்டதால் இத்தலம் தீர்த்தத்தின் பெயராலேயே, “திருச்சுனை” என்று அழைக்கப்படுகிறது.
அகத்தியர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். பொதுவாக கோயில்களில் நுழைவு வாசலின் வலப்புறத்தில் சூரியன் தனியாகத்தான் இருப்பார். அரிதாக சில தலங்களில் நவக்கிரக மண்டபத்தில் மனைவியருடன் இருப்பார். ஆனால், இங்கு நுழைவு வாசல் அருகில் உஷாவுடன் சேர்ந்து காட்சியளிக்கிறார். உடன் பிரத்யூஷா இல்லை. இந்த அமைப்பை காண்பது அபூர்வம். சிவன், திருமணக்காட்சி தந்த தலமென்பதால் இக்கோயிலில் அதிகளவில் திருமணங்கள் நடத்தப்படுகிறது.
அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கியும், பாடகவள்ளி அம்பாள் சுவாமிக்கு இடதுபுறம் தனி சன்னதியில் தெற்கு நோக்கியும் அருளுகின்றனர். பொதுவாக குன்றின் மீது முருகன்தான் காட்சி தருவார். ஆனால் இங்கு சிவன் காட்சி கொடுக்கிறார்.
சிவன், அகத்தியருக்கு பிரான்மலை என்னும் மலையில் திருமணக்காட்சி கொடுத்தார். இம்மலையிலும் ஒரு சிவன் கோயில் இருக்கிறது. கோஷ்டத்தில் சீடர்களுடன் தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் மற்றும் துர்க்கை ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.
பிரகாரத்தில் நால்வர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சன்னதிகள் இருக்கிறது.
திருவிழா:
சிவராத்திரி, திருக்கார்த்திகை.
வேண்டுதல்கள்:
இங்கு வேண்டிக்கொள்ள மனக்குழப்பங்கள் நீங்கி, அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
இருப்பிடம்:
மதுரையிலிருந்து திருச்சி செல்லும் ரோட்டில் 45 கி.மீ., தூரத்தில், மேலூரை அடுத்துள்ள கருங்காலக்குடி சென்று, அங்கிருந்து இடப்புறம் பிரியும் ரோட்டில் 2 கி.மீ., சென்றால் இக்கோயிலை அடையலாம். கருங்காலக்குடி வரை பஸ் உள்ளது. அங்கிருந்து திருச்சுனைக்கு ஆட்டோவில் செல்லலாம்.
Leave a Reply