அகத்தீஸ்வரர் திருக்கோயில், அம்பாசமுத்திரம்

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4634 – 250 882

காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அகத்தீஸ்வரர்
உற்சவர் அகத்தியர்
அம்மன் லோபமுத்திரை
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் அம்பாசமுத்திரம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது, பூமியை சமப்படுத்த அகத்தியர் தென்திசை நோக்கி வந்தார்.

பொதிகை மலைக்குச் செல்லும் வழியில் அவர், பல இடங்களில் சிவபூஜை செய்தார். இவ்வூரிலுள்ள காசிபநாதரை பூஜித்துவிட்டு, பொதிகை மலைக்கு கிளம்பினார். அப்போது அவருக்கு பசி எடுத்தது. அவ்வேளையில் அகத்தியரை தரிசிக்க சிவபக்தர் ஒருவர் வந்தார். அவரிடம் தனக்கு அமுது படைக்கும்படி கேட்டார் அகத்தியர். அவர் தன் இருப்பிடத்திற்கு சாப்பிட அழைத்தார். ஆனால், அகத்தியர் அவரிடம் ஒரு புளியமரத்தடியில் காத்திருப் பதாகச் சொல்லிவிட்டார். சிவபக்தரும் அன்னம் எடுத்து வரக்கிளம்பினார். அவர் வருவதற்கு தாமதமாகவே, அகத்தியர் சாப்பிடாமலேயே பொதிகை மலைக்குச் சென்று விட்டார். அதன்பின் சிவபக்தர் சாதமும், அரைக்கீரையையும் சமைத்து எடுத்து வந்தார். அகத்தியர் சென்றதைக் கண்ட அவர், அகத்தியர் உணவை சாப்பிடாமல் தான் இருப்பிடம் திரும்பமாட்டேன் என சபதம் கொண்டார். அகத்தியரை வேண்டி தவமிருந்தார். சிவபக்தரின் பக்தியை மெச்சிய அகத்தியர் அவருக்கு காட்சி கொடுத்து, அன்ன அமுது சாப்பிட்டார். இந்த நிகழ்வு நடந்த இடத்தில் பிற்காலத்தில், அகத்தியருக்கு கோயில் எழுப்பப்பட்டது. சிவனருள் பெற்றவர் என்பதால் இவர், “அகத்தீஸ்வரர்என்று பெயர் பெற்றார்.

அகத்தியர், இக்கோயிலில் நின்ற கோலத்தில் வலது கையில் ருத்ராட்ச மாலையுடன், சின்முத்திரை காட்டியபடி இருக்கிறார். இடக்கையில் ஏடு இருக்கிறது. இவரது சன்னதி எதிரில் நந்தியும், பிரகாரத்தில் சண்டிகேஸ்வரரும் இருக்கிறார். சிவனுக்குரிய பூஜை முறைப்படியே, இவருக்கும் பூஜை நடக்கிறது. சிவராத்திரியன்று இரவில் 4 கால பூஜையும் உண்டு.

பிரகாரத்தில் நடராஜர், நால்வர், சனீஸ்வரர், பைரவர் சன்னதிகள் உள்ளது.

உற்சவர் அகத்தியர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் வலது கையில் நடு விரல்கள் இரண்டையும் மடக்கி, பக்தர்களை அழைத்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பான அமைப்பு.

அகத்தியரின் மனைவி லோபமுத்திரை, தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவர் அம்பிகையைப் போலவே வலது கையில் பூச்செண்டு வைத்திருக்கிறாள். நவராத்திரி விழாவின்போது 9 நாட்களும் இவளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்படுகிறது.

தை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில், அகத்தியர், லோபமுத்திரை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் லோபமுத்திரை மட்டும் கோயிலில் இருந்து புறப்பாடாகி, ஓரிடத்தில் தவம் இருக்கிறாள். மாலையில் அகத்தியர் அங்கு சென்று காட்சி கொடுத்துவிட்டு, பின்பு இருவரும் கோயிலுக்குத் திரும்புகின்றனர். அன்றிரவில் இருவருக்கும் திருக்கல்யாணம் நடக்கும். சிவன் கோயில்களில் நடப்பதைப்போன்றே, இந்த வைபவம் இங்கு நடக்கிறது. இந்த நேரத்தில் அகத்தியரைத் தரிசித்திட, திருமண பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை. திருக்கார்த்திகையில் அகத்தியர், லோபமுத்திரை இருவர் முன்னிலையிலும் சொக்கப்பானை கொளுத்தும் வைபவமும் உண்டு.

பங்குனியில் பிரம்மோத்சவம் நடக்கிறது. விழாவின் 8ம் நாளில், அகத்தியருக்கு அமுது படைக்கும் வைபவம், அதன்பின் சிவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடக்கும். அன்று மாலையில் கோயிலில் உள்ள அன்ன மண்டபத்தில் சாதம், குழம்பு, ரசம், தயிர், பலாக்கறி, அரைக்கீரை அவியல், அப்பளம், வடை என விருந்து சாப்பாடு படைக்கப்படும். பின்பு அகத்தியர், லோபமுத்திரை இருவரும் பச்சை நிற பட்டாடை அணிந்து, “பச்சை சாத்திகோலத்தில் இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள அம்மையப்பர் கோயிலுக்கு அருகில் செல்வர். அங்கு நடராஜர் அகத்தியருக்கு காட்சி கொடுப்பார். அதன்பின் இருவரும் கோயிலுக்குத் திரும்புவர். அகத்தியர், சிவ தரிசனம் கண்ட பிறகு அன்ன மண்டபத்தில் இருக்கும் உணவை, எடுத்துக் கொள்வதாக ஐதீகம். இவ்விழாவில் பக்தர்கள் அகத்தியருக்கு பால்குடம் எடுத்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.

திருவிழா:

பங்குனியில் பிரம்மோற்ஸவம், ஆனியில் வருஷாபிஷேகம், நவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை, சிவராத்திரி.

பிரார்த்தனை:

திருமணத்தடை நீங்க, செயல்களில் வெற்றி கிடைக்க அகத்தீஸ்வரரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி:

திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் அம்பாசமுத்திரம் உள்ளது. கோயிலுக்கு அருகிலேயே பஸ் ஸ்டாப் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *