ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில், இடைக்காட்டூர்

அருள்மிகு ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில், இடைக்காட்டூர், சிவகங்கை மாவட்டம்.

+91- 94438 33300

காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை மணி 6 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆழிகண்டீஸ்வரர் (மணிகண்டீஸ்வரர்)
அம்மன் சவுந்தர்யநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் வைகை
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் இடைக்காட்டூர்
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் இத்தலத்தில் நந்தர், யசோதை என்னும் தம்பதியர் வசித்து வந்தனர். அவர்களது மகனாக பிறந்தவர் இடைக்காடர். இல்லறம், துறவறம் என இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதால் இவர், “இடைக்காடர்எனக் கூறுகின்றனர். அப்படி இருந்தும் எப்படி சித்தர் நிலைக்குச் சென்றார் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.

சிவபக்தரான இவர், இங்கு சிவலிங்க பிரதிஷ்டை செய்து, தினமும் சிவபூஜை செய்து வழிபட்டார். சிவனருளால் சித்தர்களில் ஒருவரானார். இடைக்காடரை, சிவன் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டார். பின் இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.

ஒருசமயம் நவக்கிரகங்களின் மாறுபட்ட நிலையால் பஞ்சம் உண்டானது. இதை முன்கூட்டியே அறிந்திருந்த இடைக்காடர், தனது ஆடுகளுக்கு எருக்கஞ்செடிகளை உண்ணப் பழகிக்கொடுத்து பஞ்சத்தை சமாளித்தார். இதையறிந்த கிரகங்கள், இடைக்காடரைக் காண அவரது இருப்பிடத்திற்கு வந்தன. இடைக்காடர், கிரகங்களுக்கு உணவு கொடுத்து உபசரிக்கவே, மகிழ்ந்த கிரகங்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்தன. அப்போது மழை பெருகும்வகையில் அவற்றின் திசைகளை மாற்றி விட்டார். உடனே மழை பொழிந்து பஞ்சம் நீங்கியது.

தாங்கள் திசை மாறியிருப்பதை அறிந்த கிரகங்கள், இடைக்காடர் மக்களின் நன்மைக்காக தங்களை மாற்றியதால் அந்த திசையிலேயே அமைந்தன. இந்த நிகழ்வு சித்தரின் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இங்கு நவக்கிரகத்திற்கென தனிக்கோயில் இருக்கிறது.

தமிழ் வருடங்கள் அறுபதிற்கும், ஒவ்வொரு ஆண்டிற்குமான பலன்களை கணித்து பல சித்தர்கள் வெண்பாஇயற்றியுள்ளனர். இதில் வெகுதான்யவருடத்திற்கான பலனைக் கணித்தவர் இடைக்காடர். இவருக்கு திருவாதிரை நட்சத்திரத்தன்று விசேஷ பூஜை நடக்கிறது.

வைகையின் வடகரையில் அமைந்த கோயில் இது. இத்தலத்து சிவன் தன்னை வணங்கும் பக்தர்களின் மன ஆழத்தைக் கண்டு, அருள் செய்பவராக இருக்கிறார். எனவே இவர் ஆழிகண்டீஸ்வரர்என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு மணிகண்டீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பாள் சவுந்தர்யநாயகி தனிசன்னதியில் இருக்கிறாள்.

சுவாமி, அம்பாள் சன்னதிக்கு நடுவில் சோமாஸ்கந்த அமைப்பில் பால சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். இது சிவத்தலமாக இருந்தாலும் முருகனுக்கே விழா எடுக்கப்படுகிறது. சோமாஸ்கந்த வடிவக் கோயில் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.

பங்குனி உத்திரத்தில் 10 நாட்கள் பிரம்மோத்சவம் நடக்கிறது. அப்போது பக்தர்கள் முருகனுக்கு காவடி எடுப்பதுடன், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது விசேடம்.

கிருத்திகை நட்சத்திரத்தின்போது முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் புறப்பாடாகிறார். தமிழ் மாதப்பிறப்பின்போது இவருக்கு விசேட பூசை நடக்கிறது.

பொதுவாக விநாயகர் சன்னதி எதிரே மூஞ்சூறுதான் இருக்கும். ஆனால், இக்கோயிலில் விநாயகருக்கு எதிரே யானை இருக்கிறது.

பொதுவாக சிவன் கோயில் பிரகாரத்தில் ஈசான திசையில் (வடகிழக்கு) நவக்கிரக சன்னதி அமைந்திருக்கும். ஆனால், இங்கு ஊரின் எல்லையில் ஈசான்ய திசையில், தனிக்கோயிலில் நவக்கிரகங்கள் உள்ளன. இங்கு இடைக்காடர் தவக்கோலத்தில் இருக்கிறார்.

திருவிழா:

பங்குனி உத்திரம், சிவராத்திரி

வேண்டுகோள்:

திருமண, புத்திர தோடம் நீங்க வேண்டிக்கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *