ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில், பெத்தநாயக்கன்பாளையம்

அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில், பெத்தநாயக்கன்பாளையம், சேலம் மாவட்டம்.

+91- 4282 – 221 594

காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆட்கொண்டீஸ்வரர்
உற்சவர் சந்திரசேகரர்
அம்மன் அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் வசிஷ்டநதி
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பிருகன்நாயகிபுரி
ஊர் பெத்தநாயக்கன்பாளையம்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

சிவத்தலயாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர், வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வணங்கினார். அதில் ஒன்றே இந்தக் கோயிலிலுள்ள லிங்கமாகும்.

இந்த லிங்கம் காலவெள்ளத்தில் புதைந்து விட்டது. பிற்காலத்தில் இப்பகுதியில் வசித்த சிவனடியாரின் கனவில் தோன்றிய சிவன், தான் வசிஷ்டநதியின் தென்கரையில் மண்ணில் புதையுண்டு இருப்பதாக கூறினார். அவர் லிங்கத்தை தோண்டி எடுத்து கோயில் கட்ட ஏற்பாடு செய்தார்.

சக்தியும் சிவமும் ஒன்றுதான் என்பதை உணர்த்துவதற்காக சிவன், தனது இடப்பாகத்தில் பார்வதிக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சிதந்தார். மேலும் பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், சக்தியிலிருந்து தோன்றுவதுதான் சிவம் என வலியுறுத்தும் விதமாக சக்தியின் ஆயுதமான சூலத்தின் மத்தியில் அமைந்தும் காட்சி தருகிறார்.

இந்த வித்தியாசமான அர்த்தநாரீஸ்வரர் சேலம் அருகிலுள்ள பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டீஸ்வரர் கோயிலில் உற்சவராக அருள்புரிகிறார்.

கருவறையில் லிங்கத்தின் கீழ் இருக்கும் ஆவுடையார் தாமரை மலர் போன்ற அமைப்பில் இருக்கிறது.

சுவாமி தன் நெற்றியில் நெற்றிக்கண்ணுடன் காட்சி தருவது சிறப்பு. தன்னை வணங்கும் பக்தர்களின் மனதை ஆட்கொள்வதால் இவரை ஆட்கொண்டீஸ்வரர்என்கின்றனர். அம்பாள் அகிலாண்டேஸ்வரிஎன்ற திருநாமத்துடன் அருளுகிறாள்.

பொதுவாக உற்சவர் சிலைகள் அமர்ந்தநிலையில் வடிவமைக்கப்படும். இவையே விழாக்காலங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்படும். ஆனால், இங்குள்ள உற்சவர் சந்திரசேகர் மற்றும் அம்பாள் இருவரும் நின்ற வடிவில் பக்தர்களுக்கு அருளுகின்றனர்.

தங்களை வரவேற்று, வணங்கும் பக்தர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில், இவர்கள் எழுந்து நின்று அருளுகின்றனர் என்பது பரவசமூட்டும் தகவல். சூல அர்த்தநாரீஸ்வரர் இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர், சூலத்தின் மத்தியில் அமைந்து காட்சி தருகிறார்.

ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அனைவரும் சக்தி எனும் பெண்ணிலிருந்துதான் தோன்றுகின்றனர் என உணர்த்தும் விதமாக இக்கோலத்தில் இருக்கிறார். தாயை விட்டு பிரிந்துள்ள பிள்ளைகளும், பிரிந்த தம்பதிகளும் இவரை வணங்கிட பிரச்னைகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை.

இத்தலவிநாயகர் மகாகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் திராவிட விமானம். இங்கு சுவாமிக்கு சுத்தான்னம் நைவேத்யம் செய்கின்றனர். சிவனுக்கு பின்புறம் கிருஷ்ணர் மகாலட்சுமியுடன் இருக்கிறார்.

பிரகாரத்தில் நின்ற நிலையில் நவக்கிரகங்கள், சுப்பிரமணியர், பஞ்சலிங்கங்கள், பைரவர், சூரியன், நாயன்மார்கள் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.

திருவிழா:

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, மகாசிவராத்திரி, சனிப்பெயர்ச்சி.

வேண்டுதல்:

அதிகார நந்தி, பிரதோச நந்தி இரண்டும் ஒரே மண்டபத்தில் அருகருகில் அமர்ந்துள்ளது. பிரதோச காலத்தில் இவர்களை வணங்கினால் செல்வம் உண்டாகும்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *