அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில், பெரியகளந்தை

அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில், பெரியகளந்தை, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91-4259 – 283 503

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆதீஸ்வரர் (ஆதிசேஸ்வரன், ஆதி புரீஸ்வரர் )
உற்சவர் சந்திரசேகர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் சந்தனம்
தீர்த்தம் பிரம்மதீர்த்தம்
ஆகமம் காமிகம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் குழந்தை நகர்
ஊர் பெரியகளந்தை
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

அருணகிரியார் திருப்புகழ்

படைப்புத்தொழிலை செய்வதால், தான்தான் அனைத்திலும் சிறந்தவன் என அகங்காரம் கொண்டிருந்த, பிரம்மன் தனது சாபம் நீங்கப் பல இடங்களிலும் சிவனை வணங்கி வந்தார். அவர், சந்தனமரங்கள் நிறைந்த இப்பகுதிக்கு வந்தபோது, சுயம்புவடிவில் சிவன் இருந்ததைக் கண்டு அவரை வணங்கி சாபம் நீங்கப்பெற்றார். பிற்காலத்தில், இவ்விடத்தில் கரிகாற்சோழமன்னர் கோயில் எழுப்பினார்.

இத்தலத்து சிவனை இந்திரன், பிரம்மன், சூரியன், வாலி, அகத்தியர், பதஞ்சலி மகரிஷி, சுந்தரானந்தர் உட்பட பலர் வழிபட்டுள்ளனர். பதஞ்சலி தவம் செய்த இடத்தில் கல்கம்பம் ஒன்று உள்ளது.

இங்கு தங்கியிருந்த படிக்காசு புலவர் என்பவர் தினமும் சிவனைக்குறித்து பாடல் பாடி, பரிசாக பொற்காசுகளைப்பெற்று வந்தார். ஒருசமயம், அவர் சுவாமியை நினைத்து மனமுருகி கண்மூடி பாடிவிட்டு விழித்த போது, சுவாமியும், அம்பாளும் அங்கில்லை. சிவன் தன்னை சோதனை செய்வதை உணர்ந்த அவர், அங்கிருந்த நந்தியிடம், “சிவனும் அம்பிகையும் எங்கே?” என்று கேட்டார். அவர் மீது பரிவு காட்டும் வகையில் நந்திதேவர், சிவன் மறைந்திருக்கும் திசையே நோக்கி தனது தலையை திருப்பி அடையாளம் காட்டி விட்டு ஒன்றும் தெரியாதவர் போல் இருந்து கொண்டார். இது சிவனுக்குத் தெரியாமல் இருக்குமா? தலை இருக்கும்போது வால் அசையலாமா எனக் கண்டித்தார்.


தங்கள் பக்தன் ஒருவன் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்திலேயே அவ்வாற செய்ததாகக் கூறினார். நந்தியின் கருணையை பாராட்டினார் சிவன். இங்குள்ள நந்தி நேரே சிவனை பார்க்காமல் இடப்புறம் திரும்பியே இருக்கிறது. இவரை வணங்கினால், சிவனிடம் சிபாரிசு செய்து, கோரிக்கைகள் நிறைவேற உதவுவார் என்பது நம்பிக்கை.


இத்தலத்தில் துர்வாசமுனிவர் யாகம் செய்து அம்பாளை குழந்தை வடிவில் பெற்றார். அவள் கன்னிப்பருவம் எய்தியதும் ஆதீஸ்வரருக்கு மணம் முடித்து வைத்தார். இந்த தேவியை துர்வாசரே இக்கோயிலில் பிரதிஷ்டை செய்தார். புகுந்த வீட்டுக்கு வந்ததும் நந்தி தலை திரும்பியிருப்பதைப் பார்த்தாள். தன் கணவரைக் ஒரு பக்தனுக்காக காட்டிக் கொடுத்ததால் இப்படி இருப்பதாகத் தெரிய வந்ததும், அவரைத் தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த அவள், அதன் மீது அமர்ந்தாள். நந்திதேவருக்கும் மகிழ்ச்சி. சிவனை மட்டுமே சுமந்த தனக்கு அம்பிகையையும் சுமக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து மேலும் மேலும் ஆனந்தப்பட்டார்.

இங்கு சிவனுக்கு இடதுபின்புறம் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி, தனது கழுத்தை வலப்புறம் சாய்த்தபடி காட்சி தருவது சிறப்பு. இம்முருகனைப் பற்றி பாடியுள்ள அருணகிரியார், இவ்வூரை குழந்தை நகர்என்று குறிப்பிட்டுள்ளார். அம்பிகையை துர்வாசர் யாக குண்டத்தில் இருந்து குழந்தையாகப் பெற்றதால் இந்நகருக்கு இப்படி ஒரு பெயர் வந்திருக்கலாம் என தெரிய வருகிறது.

அம்பாள் சன்னதியில் தரப்படும் வெள்ளைக்கயிறைக் கட்டிக்கொள்ள நோய்கள் வராது என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் சனீஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜர் ஆகியோர் அருளுகின்றனர்.

தலவிநாயகரின் திருநாமம் பாலகணபதி.

சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருளுகிறார். சிவனின் கருவறைக்கு அடியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் சுனைஒன்று உள்ளதாகச் சொல்கிறார்கள்.

திருவிழா:

ஆனி உத்திரம், ஆடிவெள்ளி, சிவராத்திரி, நவராத்திரி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்.

வேண்டுகோள்:

சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அம்பாளுக்கு மஞ்சள் கயிறு கட்டி, செவ்வரளியால் பூஜை செய்திட திருமணதோஷம், புத்திரதோஷம் நீங்கும், சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்ற தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *