அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் ஆலயம், திருவெற்றியூர்

அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் ஆலயம், திருவெற்றியூர், இராமநாதபுரம் மாவட்டம்.

திருமாலுக்கு வெற்றி கிடைக்க வழி செய்த தலம்தான் திருவெற்றியூர்.

வரலாறு : ஒருங்கிணைந்த சேர, சோழ, பாண்டிய நாட்டை மாவலிச் சக்கரவர்த்தி ஆண்டு வந்தான். அவனுக்கு, மக்களிடத்தில் அமோக செல்வாக்குப் பெருகியது. இதனால் மன்னனின் மனதில் ஆணவம் தலைதூக்கத் தொடங்கியது. இறைவனையும் தேவர்களையும் மதிக்காமல் வாழத் தொடங்கினான்.

கலகம் செய்வதில் வல்லவரான நாரதர், இவனைப் பற்றி சிவபெருமானிடம் சொன்னார். ஆனால், சிவபெருமானோ, ‘‘என்னுடைய சன்னதியில் தூண்டா மணி விளக்கு அணைய இருந்தது. முற்பிறவியில் எலியாக இருந்த இந்த மன்னன் திரியைத் தூண்டிவிட்டு ஒளி பரவச் செய்தான். எனவே, மறுபிறவியில் நீ, 56 தேசங்களையும் ஆட்சி செய்யக் கடவாய் என நான் வரம் கொடுத்தேன். என் வரத்தின்படி அவன் மாவலிச் சக்கரவர்த்தியாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறான். அவனை நான் அழிப்பது தர்மம் அல்ல’’ என்று கூறினார்.

இதைக் கேட்ட நாரதர், உடனே திருமாலைத் தேடிச் சென்று அந்த மன்னனைப் பற்றிக் கூறினார். ஆவன செய்வதாக திருமால் கூறியதுடன், ஓர் ஏழைக் குள்ள அந்தணனாக உருவெடுத்து, மன்னனைத் தேடிச் சென்றார். தான் யாகம் செய்யப்போவதாகவும், அதற்காக மூன்றடி இடம் வேண்டும் என்று கேட்க, மன்னனும் தன் ஆளுகைக்கு உட்பட்ட பூலோகத்தைக் காண்பித்து, எடுத்துக் கொள்ளும்படி கூறினான்.

உடனே விஸ்வரூபம் எடுத்த திருமால், தன் நீண்ட கால்களால் இப்பூவுலகை முதல் அடியாகவும், ஆகாயத்தை இரண்டாவது அடியாகவும் அளந்தார். மூன்றாவது அடிக்கு மன்னன் தன் தலையைக் காட்ட, திருமால் அவன் தலையில் தன் பாதத்தை வைத்து அழுத்த, பாரம் தாங்காத மன்னன் அதலபாதாளத்தில் அமிழ்ந்தான்.

தர்மத்தின் காவலனாய்த் திகழ்ந்த மாவலி மன்னனின் மறைவைக் கண்டு மனம் கலங்கினாள் தர்ம தேவதை. உடனே, திருமாலின் காலைப் பற்றிக் கொண்டு கண்ணீர் விட்டாள். அவள் விட்ட கண்ணீர்த் துளிகள் திருமாலின் பாதமெங்கும் தெரித்தன. அந்தக் கண்ணீர்த் துளிகள் தெரித்த இடமெங்கும் திருமாலின் காலில் புற்று வளரத் தொடங்கியது. மனம் பதைத்த திருமால், மதுரை மீனாட்சியை வழிபட்டு, தன் கால் புற்று நீங்க வழி கேட்டார். மீனாட்சி காட்டிய வழிப்படி ஜெயபுரம் வந்த திருமால், அங்கிருந்த வாசுகி தீர்த்தத்தில் நீராடினார். பிறகு, அங்கிருந்த வில்வ மரத்தின் அடியில் இருந்த கல் ஒன்றை லிங்கமாகப் பாவித்து, கட்டிப்பிடித்து சிவ பூஜை செய்தார். அவரது பூஜைக்கு மனமிரங்கிய சிவபெருமான், சக்தியுடன் அர்த்தநாரீஸ்வரராய் திருமாலுக்குக் காட்சி தர, அவர் காலில் இருந்த புற்றும் நீங்கியது.

ஒரு காலத்தில் ஜெயபுரம் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் தற்போது திருவெற்றியூர் என அழைக்கப்படுகிறது.

இறைவனின் சன்னதி கிழக்கு நோக்கியும், அம்மன் சன்னதி தெற்கு நோக்கியும் உள்ளன.

இங்கு இறைவனையும் இறைவியையும் பிரித்துப் பார்க்கக் கூடாது என்பதற்காக எப்போதும் இரட்டை அர்ச்சனையே நடைபெறுகிறது. முதலில் சிவபெருமானுக்கும், பிறகு அம்மனுக்கும் அர்ச்சனை செய்கின்றனர். அம்மனுக்கோ, சுவாமிக்கோ இங்கு தனியாக அர்ச்சனை செய்வது கிடையாது.

அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள வில்வ மரத்தடியில்தான் திருமாலுக்கு சிவனும் சக்தியும் காட்சி தந்து புற்றை நீக்கியதாக ஐதிகம். இந்த மரத்தடியில் வில்வ மர விநாயகரும், நாகரும் காட்சி தருகின்றனர். இவர்களை, உப்பும் முட்டையும் சமர்ப்பித்து வணங்கினால் வணிகம் தழைக்கும் என்பது நம்பிக்கை.

இத்தலத்திற்கு, முன் தினம் இரவு வந்து தங்கி, விடியற்காலையில் வாசுகி தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும் இறைவியையும் வழிபட்டால், தீராத வியாதிகளும் அகன்று விடும் என்பர்.

இத்தலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் யாரையாவது பாம்பு தீண்டினால், அவரைத் தூக்கி வந்து, வாசுகி தீர்த்தத்தில் நீராடச் செய்து பாகம்பிரியாள் சன்னதியில் கிடத்துகின்றனர். அம்பிகையின் விபூதியையும் வேப்பிலையையும் விஷம் தீண்டப்பட்டவர் பெற்று உண்டால் குணமாகித் திரும்புவார் என்பது இங்குள்ளோர் நம்பிக்கை.

இங்குள்ள உரலில் மாவு இடித்து மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டால் வயிற்று வலி குணமாகும் என்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானைக்குத் தென்கிழக்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது திருவெற்றியூர் ‘பாகம்பிரியாள்’ ஆலயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *