Category Archives: நாகப்பட்டினம்

அருள்மிகு கோடிக்குழகர் கோயில், அமுதகடேஸ்வரர் திருக்கோயில், கோடியக்காடு

அருள்மிகு கோடிக்குழகர் கோயில், அமுதகடேஸ்வரர் திருக்கோயில், கோடியக்காடு,நாகப்பட்டினம் மாவட்டம்.

+91 – 4369 272 470 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர்
அம்மன் அஞ்சனாக்ஷி, மைத்தடங்கண்ணி
தல விருட்சம் குராமரம்
தீர்த்தம் அக்னி தீர்த்தம் (கடல்), அமுதகிணறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கோடி, திருக்கோடிக்குழகர், குழகர் கோயில்
ஊர் கோடியக்காடு
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், சுந்தரர்

மிகவும் பழமையானது இந்தக்கோயில். இராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன்பு இங்கு வந்தார். இவ்வூரிலிருந்து கடல் வழியே மிகக் குறுகிய தூரத்தில் இலங்கை இருக்கிறது. எனவே, இங்கிருந்து பாலம் அமைத்து இலங்கைக்கு செல்ல ஏற்பாடு செய்தான் சுக்ரீவன். ஆனால், இராமன் இங்கு பாலம் அமைக்க மறுத்துவிட்டார். இலங்கையின் பின்பக்கமாக கோடியக்காடு அமைந்துவிட்டதால், இராமபிரான் பின்பக்கமாக சென்று இராவணனைத் தாக்குவது தனக்கு பெருமை தராது எனக் கருதி, இலங்கையின் முன்பக்கமுள்ள தனுஷ்கோடிக்கு சென்றுவிட்டார். அவர் இங்கு வருகை தந்ததை நினைவுபடுத்தும் வகையில் இராமர் பாதம் அமைக்கப்பட்டுள்ளது. இராமன் இலங்கை செல்லும்போது இங்குள்ள சிவபெருமானை வணங்கினார். இவருக்கு அமிர்தகடேஸ்வரர்என்ற பெயரும் உண்டு.

திருப்பாற்கடலில் அமுதம் கடையும்போது அசுரர்கள் சூறாவளியை ஏற்படுத்தினர். அமுதப் பாத்திரத்தை ஏந்திச் சென்ற வாயுபகவான் அந்த சூறாவளியை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அமுதம் சிறிதளவு சிந்தியது. அதை முருகப்பெருமான் ஒரு கலசத்தில் ஏந்திக்கொண்டார். அந்த கலசத்துடன் அவர் காட்சி தருகிறார். இவரை வணங்குவோருக்கு ஆயுள்விருத்தி ஏற்படும். இங்கே சுவாமியை விட முருகனுக்கே முக்கியத்துவம். அருணகிரிநாதர் திருப்புகழில் இவ்வூர் சுப்பிரமணிய சுவாமியை புகழ்ந்து பாடியுள்ளார். சுந்தரரால் பாடல்பெற்ற தலம் இது. மிகவும் பழமையான இந்தக்கோயிலில் அம்பாள் மையார்தடங்கண்ணி அழகுபொங்க காட்சி தருகிறாள்.

அருள்மிகு கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) திருக்கோயில், கீழ்வேளூர்

அருள்மிகு கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) திருக்கோயில், கீழ்வேளூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4366 – 276 733 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கேடிலியப்பர், அட்சயலிங்க சுவாமி
அம்மன் வனமூலையம்மன், சுந்தரகுஜாம்பிகை
தல விருட்சம் பத்ரி, இலந்தை
தீர்த்தம் சரவணப்பொய்கை, அக்னி, சேஷ, பிரம்ம, சூரிய, சந்திர, குபேர தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கீவளூர், திருக்கீழ்வேளூர்
ஊர் கீழ்வேளூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

திருச்செந்தூரில் முருகப்பெருமான், சூரனை கொன்ற கொலைப்பாவம் நீங்க சிவனை வேண்டினார். கீழ்வேளூர் திருத்தலத்தில் குளம் உண்டாக்கி சிவனை வழிபட்டால் பாவம் விலகும் என சிவன் அருளினார். அதன்படி முருகப்பெருமானும் நவவீரர்களுடன் இத்தலம் வந்தார். முதலில் முழுமுதற்கடவுளான விநாயகரை மஞ்சளால் பிடித்து வழிபட்டார். அதுவே இப்போது கீழ்வேளூர் அருகே மஞ்சாடிஎனப்படுகிறது. அடுத்து சிவலிங்க பூஜை செய்வதற்காக, தேவதச்சன் மயனை கொண்டு அருமையான சிவாலயத்தைக் கட்டி, புஷ்கலம் எனப்படும் விமானத்தையும் அமைத்தார். கோயிலின் கிழக்கு கோபுர வாசலில் தனது வேலால் தீர்த்தத்தை உண்டாக்கி அதில் தானும், தன்னுடன் வந்த நவவீரர்களும், சேனாதிபதிகளும், பூதப்படையினரும் சேர்ந்து நீராடினார். இதனால் இத்தலம் வேளூர்ஆனது. பின் முருகன் சிவனை நோக்கிக் கடும் தவம் மேற்கொண்டார். இந்த தவம் முழுமையடையாமல் இருக்க தீய சக்திகள் இடையூறு விளைவித்தன. இதிலிருந்து தன்னை காக்க பார்வதியை அழைத்தார் முருகன். முருகன் அழைத்தவுடனேயே தாய் பார்வதி, “அஞ்சுவட்டத்தம்மன்என்ற திருநாமம் கொண்டு நான்கு திசை மற்றும் ஆகாயத்திலுமாக சேர்த்து காவல் புரிந்தார்.

சிங்கத்துவஜன் என்னும் அரசன் காட்டில் வேட்டையாடி அலைந்த போது களைப்பால் தாகம் ஏற்பட்டது. ஒரு முனிவரின் ஆசிரமத்துக்கு சென்று, அரசன் என்ற ஆணவத்துடன் தண்ணீர் கொண்டு வரும்படி ஆரவாரமாகக் கத்தினான். இதனால், தியானத்தில் இருந்த முனிவர் கோபத்துடன் வெளியில் வந்து, “கழுதை போல் கத்துகிறாயே, நீ கழுதையாகப் போஎன்று சபித்தார். மற்றொரு காட்டரசன் விந்திய மலையில் தவம் செய்து கொண்டிருந்த அகஸ்தியரைத் தரிசிக்கச் சென்றவர்களை துன்புறுத்தி வந்தான். இதனால் அந்த அரசனையும் கழுதையாகுமாறு அகஸ்தியர் சபித்தார். அவர்கள் கழுதையாகப் பிறந்தனர். வணிகன் ஒருவன் அவற்றைப் பொருள் சுமக்கப் பயன்படுத்தினான். ஒருநாள், கழுதைகள், தற்போதைய அட்சயலிங்க சுவாமி கோயிலிலுள்ள பிரம்மத் தீர்த்தத்தில் நீர் பருகின. இறைவனின் அருளால் அவை தமது முற்பிறப்பு வரலாற்றை உணர்ந்தன. அதை மனித மொழியில் பேசிக்கொண்டன. கழுதைகள் பேசுவதைக் கவனித்த வணிகன், அவற்றை விட்டுவிட்டு ஓடிவிட்டான். இரண்டு கழுதைகளும் கோயிலை வலம் வந்தன. அட்சயலிங்க சுவாமியின் அருள் பெற்றன. “ஆடிமாதம் பவுர்ணமி முதல் சதுர்த்தி வரையில் பிரம்மதீர்த்தத்தின் நீரருந்தினால், நீங்கள் மீண்டும் மனித வடிவை அடைவீர்கள்என்று அசரீரி ஒலிக்கவே, இரண்டும் நீர் அருந்தி மனித வடிவத்தைப் பெற்றன.