Category Archives: நாகப்பட்டினம்

மாதங்கீஸ்வரர் கோயில், திருநாங்கூர்

அருள்மிகு மாதங்கீஸ்வரர் கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம்.

+91- 4364 – 256 044, 94436 – 78793

காலை6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மதங்கீஸ்வரர்
அம்மன் மாதங்கீஸ்வரி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் மதங்க தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மதங்காஸ்ரமம்
ஊர் திருநாங்கூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் சிவன் பூலோகத்தை தண்ணீர் பிரளயம் மூலம் அழித்து விட்டார். இதையறியாத பிரம்மாவின் மகனாகிய மதங்கர் எனும் முனிவர் தவம் செய்வதற்காக தேவலோகத்தில் இருந்து பூலோகம் வந்தார். எங்கும் தண்ணீர்க்காடாக இருந்ததால், அவரால் பூமியில் இறங்க முடியவில்லை. அப்போது வான்வெளியில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த நாரதரிடம், பூமியில் தவம் செய்ய தண்ணீர் வற்றிய தகுந்த இடத்தை காட்டும்படி ஆலோசனை கேட்டார். அவர் சுவேத வனம் என்ற இடத்தில் தவம் புரியலாம் என ஆலோசனை சொன்னார். அதன்படி அங்கு சென்ற மதங்கமுனிவர் சிவனை வேண்டித் தவம் செய்தார். சிவன் அவருக்கு காட்சி தந்தார்.

சிவனிடம் மதங்கர், “ஜீவன்களுக்கு தந்தையாக இருக்கும் நீங்கள் எனக்கும் உறவினனாக வேண்டும்என கேட்டார். சிவன் முனிவரிடம் தகுந்த காலத்தில் அவருக்கு மருமகனாக வருவதாக கூறிவிட்டு மறைந்தார். மதங்கர் மீண்டும் தன் தவத்தைத் தொடர்ந்தார். ஒரு சித்ராபவுர்ணமி தினத்தன்று அவர் மணிக்கருணை ஆற்றில் நீராடச் சென்றார். அப்போது, நீரில் மிதந்து வந்த தாமரை மலரின் மீது ஒரு அழகிய குழந்தை இருந்ததைக் கண்டார். “மாதங்கிஎனப் பெயர் சூட்டி அவளுக்கு அனைத்து கலைகளையும் கற்றுக்கொடுத்து வளர்த்தார். மாதங்கி பருவ வயதை அடைந்தபோது, அவளை மணம் முடிக்கும் தகுதி சிவனுக்கு மட்டுமே உண்டு என்று அறிந்திருந்த முனிவர் சிவனை வேண்டினார். சிவன் அங்கு வந்து மாதங்கியை திருமணம் செய்து கொண்டார். பின் அவர்களிருவரும் மதங்கருக்கு சிவ, பார்வதியாக தரிசனம் தந்தனர். அவரது வேண்டுதலுக்காக சிவன், இலிங்கமாக எழுந்தருளி மதங்கீஸ்வரர்என்ற பெயர் பெற்றார்.

அருள்மிகு செங்கண்மால் ரங்கநாதர் திருக்கோயில், திருத்தெற்றியம்பலம், திருநாங்கூர்

அருள்மிகு செங்கண்மால் ரங்கநாதர் திருக்கோயில், திருத்தெற்றியம்பலம், திருநாங்கூர் – 609 106. நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364 – 275 689 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் செங்கண்மால், பள்ளிகொண்ட ரங்கநாதர்
தாயார் செங்கமலவல்லி
தீர்த்தம் சூரிய புஷ்கரணி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருநாங்கூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியைத் தூக்கிக்கொண்டு பாதாள உலகத்தில் மறைத்து வைத்து விட்டான். தேவர்கள், முனிவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவரும் பூமியை காப்பாற்றுவதற்கு வராக அவதாரம் எடுக்க சம்மதித்தார். இதை கேட்டவுடன் மகாலட்சுமி,”பகவானே! நான் ஒரு நொடி கூட உங்களை விட்டு பிரியாமல் தங்களது மார்பில் குடியிருப்பவள். நீங்களோ என்னை விட்டு வராக அவதாரம் எடுக்கபோவதாகக் கூறுகிறீர்கள். நான் எப்படித் தனியாக இருப்பதுஎன வருத்தப்பட்டாள். இதே போல் ஆதிசேஷனும், “பரந்தாமா! நீங்கள் பூமியைக் காக்க பாதாள உலகம் சென்று விட்டால் என் கதி என்னாவது?” என வருத்தப்பட்டார்.

இதைக்கேட்ட பெருமாள், “பயப்படாதீர்கள். எல்லாம் நன்மைக்குத்தான். நீங்கள் இருவரும் பலாசவனம்சென்று என்னைத் தியானம் செய்யுங்கள். அங்கே சிவபெருமானும் வருவார். நான் இரண்யாட்சனை வதம் செய்துவிட்டு, உங்களுக்கு அனுக்கிரகம் செய்ய அங்கு வந்து விடுகிறேன்என்றார்.