Category Archives: ஆந்திரப் பிரதேசம்

அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், சத்யவேடு

அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், சத்யவேடு, சித்தூர் மாவட்டம், ஆந்திர மாநிலம்.

+91- 97046 49796 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீரபத்திரர்
உற்சவர் கல்யாண வீரபத்திரர்
தல விருட்சம் வில்வம், வேம்பு, அரசு
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சத்திவீடு
ஊர் சத்தியவேடு
மாவட்டம் சித்தூர்
மாநிலம் ஆந்திரம்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சத்தியவேட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த சிவபக்தர்கள் வீரபத்திரருக்கு கோயில் கட்ட விரும்பினர். வீரபத்திரர் சிலை செய்யும் பணி சிற்பி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டதுபணி முடிந்து, சிலையை மாட்டுவண்டியில் ஏற்றி சத்தியவேடு வந்த போது, வண்டியின் அச்சு முறிந்தது. எனவே, சிலையை இறக்கி வைத்துவிட்டு சக்கரத்தை சரி செய்தனர். மீண்டும் சிலையை தூக்க முயன்றபோது, அது அவ்விடத்தில் இருந்து அசையவில்லை. அப்போது அசரீரி ஒலித்து, சிலையை அங்கேயே பிரதிஷ்டை செய்யும்படி கூறியது. அதன்படி வீரபத்திரரை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர்.

குரு வீரபத்திரர்: மூலஸ்தானத்தில் வீரபத்திரருக்கு வலப்புறம் பாணலிங்கம் இருக்கிறது. வீரபத்திரருக்கு பூஜை செய்தபின்பு, லிங்கத்திற்கு பூஜை செய்கின்றனர். இத்தல வீரபத்திரர் தெற்கு நோக்கி காட்சி தருவதால், “குரு வீரபத்திரர்என்ற சிறப்பு பெயர் இருக்கிறது. தென்திசை, சிவனின் குரு அம்சமான தெட்சிணாமூர்த்திக்கு உரியது. கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற வியாழக்கிழமைகளில் இவருக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடும் வழக்கம் உள்ளது. கிரக தோஷம் உள்ளவர்கள் ஹோமம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். ராகு, கேது பரிகார ஹோமத்திற்கு ரூ.300, பிற கிரகதோஷ பரிகார ஹோமங்களுக்கு ரூ.1000 கட்டணம். சித்ரா பவுர்ணமியன்று வீரபத்திரர்பத்ரகாளி திருக்கல்யாண வைபவம் நடக்கும்.

அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம்

அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம், (திருப்பருப்பதம்), கர்னூல் மாவட்டம், ஆந்திரமாநிலம்.

+91- 8524 – 288 881, 887, 888

காலை 5 – மதியம் 3மணி, மாலை 5.30 – இரவு 10 மணி. காலை நேரத்தில் மட்டுமே சுவாமிக்கு நாமே பூஜை செய்ய அனுமதியுண்டு. இதற்கு தனியாக கட்டணம் உண்டு.

மூலவர் மல்லிகார்ஜுனர்,(ஸ்ரீசைலநாதர், ஸ்ரீபருப்பதநாதர் )
அம்மன் பிரமராம்பாள், பருப்பநாயகி
தல விருட்சம் மருதமரம்
தீர்த்தம் பாலாநதி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பருப்பதம்
ஊர் ஸ்ரீசைலம்
மாவட்டம் கர்நூல்
மாநிலம் ஆந்திரப்பிரதேசம்
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்

சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக்குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர். சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி,”தந்தையே! கலங்காதீர்கள். நான் சிவனைக்குறித்துக் கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னைக் காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார். நந்தி தவம் செய்த நந்தியால்என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் தவமிருந்தான். பர்வத ன்கடும் தவம் செய்து சிவபெருமான் பாதம் எப்போதும் தன் மீது இருக்க வேண்டும் என்ற வரம் பெற்றான். ஆதன்படிப் பர்வதனை ஒரு மலையாக ஆக்கி ஸ்ரீ பர்வதம் என்னும் பெயரிட்டு தாம் சிவலிங்கமாக அம்மலையின் மீது அமர்ந்து எழுந்தருளினார். ஆந்த ஸ்ரீ பர்வதமே நாளடைவில் ஸ்ரீசைலம் என வழங்கலாயிற்று. சைலம் என்றால் மலை எனப் பொருள்படும்.

மற்றும் ஒரு சிவபக்தை நகஸ்ரீ என்பவள் தவமிருந்து இத்தலம் தனது பெயரால் வழங்கப்பட வேண்டுமென சிவபெருமானிடம் வரம் பெற்றாள். நகஸ்ரீ என்பது ஸ்ரீ நகம் என மாறி தற்போது ஸ்ரீசைலம் என மருவி வழங்குகிறது.
சிலாதமுனிவர் தவம் செய்தமையால் இம்மலை சிலாத முனி மலை எனப்பெயர் பெற்று நாளடைவில் ஸ்ரீ சைலம் எனப் பெயர் மருவிவிட்டது எனவும் கூறப்படுகிறது.

மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள், சந்திரரேகா இங்கு கிடைத்த மல்லிகைப்பூவாலும், அர்ஜுனா மலர்களாலும் இறைவனைப் பூஜித்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் மல்லிகார்ஜுனர்எனப்படுகிறார்.