அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர்
அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர் – 614 202, தஞ்சாவூர் மாவட்டம்.+91- 93443 – 03803, 93452 – 67501 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வையம்காத்த பெருமாள் |
உற்சவர் | – | ஜெகத்ரட்சகன் |
தாயார் | – | பத்மாசனவல்லி |
தல விருட்சம் | – | பலா |
தீர்த்தம் | – | சக்கர தீர்த்தம் |
ஆகமம் | – | வைகானஸம் |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | சங்கமாபுரி, தர்ப்பாரண்யம் |
ஊர் | – | திருக்கூடலூர் |
மாவட்டம் | – | தஞ்சாவூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இரண்யாட்சகன் எனும் அசுரன் ஒரு சமயம் பூமியைப் பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். எனவே பெருமாள் வராக அவதாரம் எடுத்து, பாதாளத்திற்குள் சென்று அவளை மீட்டு வந்தார். பெருமாள் இத்தலத்தில் தரையைப் பிளந்து பூலோகம் சென்று, அருகில் உள்ள ஸ்ரீ முஷ்ணத்தில் பூமாதேவியை மீட்டு வெளியில் வந்தார் என தலவரலாறு கூறுகிறது. இதனை உணர்த்தும் விதமாக திருமங்கை யாழ்வார் இத்தலத்தை “புகுந்தானூர்” என்று சொல்லி மங்களாசாசனம் செய்துள்ளார். வையகத்தை (பூமியை) காத்து, மீட்டு வந்தவர் என்பதால் இவர் “வையங்காத்த பெருமாள்” எனப்படுகிறார்.
கிளம்புவதற்கு தயார் நிலையில் இருக்கும் இத்தலத்துப் பெருமாள், தன் கையில், “பிரயோகச் சக்கரத்துடன்” இருக்கிறார். அம்பரீஷன் எனும் மன்னனர் பெருமாள் மீது தீவிர பக்தி கொண்டிருந்தான். தன் படைகள் மீது அதிகம் கவனம் செலுத்தாமல் பக்தியிலேயே திளைத்திருந்தான். இதனால் எதிரிகளிடம் தன் நாட்டையும் இழந்தார்.
ஆனாலும் கவலைப்படாத அம்பரீஷன், எப்போதும் மகாவிஷ்ணுவின் திருநாமத்தையே உச்சரித்துக் கொண்டு, அவருக்காக விரதங்கள் இருப்பதிலேயே கவனமாக இருந்தார். ஒருசமயம் அவர் ஏகாதசி விரதம் இருந்தபோது துர்வாச மகரிஷி அவரைப் பார்ப்பதற்கு வந்தார். விரதத்தில் மூழ்கியிருந்ததால் மன்னர் துர்வாசரை கவனிக்கவில்லை. அம்பரீஷன் தன்னை அவமதிப்பதாக எண்ணிய துர்வாசர், அவனை சபித்தார். மகரிஷியின் கோபத்திற்கு ஆளான அம்பரீஷன் மனம் வருந்தி மகாவிஷ்ணுவை வேண்டினான். தன் பக்தனை காப்பதற்காக மகாவிஷ்ணு துர்வாசர் மீது சக்கராயுதத்தை ஏவினார்.
சக்கரம் துர்வாசரை விரட்ட அவர் மகாவிஷ்ணுவை சரணடைந்து, தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார். மகாவிஷ்ணுவும் மன்னித் தருளினார். பின் அம்பரீஷன் இத்தலத்தில் பெருமாளுக்கு கோயில் கட்டி வழிபட்டான். அவனது பெயரால் சுவாமிக்கு “அம்பரீஷ வரதர்” என்ற பெயரும் ஏற்பட்டது. இங்கு வேண்டிக்கொள்பவர்களுக்கு பெருமாளின் சக்கரமே பாதுகாப்பாக இருந்து அவர்களை வழிநடத்தும் என்பது நம்பிக்கை.
உலகில் உள்ள புண்ணிய நதிகளில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பர். அந்த நதிகள் எல்லாம் காவிரியில் சேர்ந்து தங்கள் மீது சேர்ந்த பாவங்களை போக்கிக் கொள்ளும் என்பது ஐதீகம். இவ்வாறு மொத்த பாவங்களும் சேரப்பெற்ற காவிரி, தன் பாவங்கள் தீர பிரம்மாவிடம் வழி கேட்டாள். அவர் பூலோகில் இத்தலத்தில் உள்ள பெருமாளை வழிபட, பாவங்கள் நீங்கும் என்றார். அதன்படி காவேரி இத்தலத்தில் பெருமாளை வேண்டி தன் பாவங்களை போக்கிக் கொண்டாளாம். முன்னொருகாலத்தில் இக்கோயில் வளாகத்தில் வசித்த கிளியொன்று அருகில் உள்ள நாவல் மரத்தில் இருந்து ஒரு பழத்தை பறித்து வந்து அதனைப் பெருமாள் முன் வைத்து “ஹரிஹரி” என்று சொல்லி அவரை வணங்கிவிட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தது. ஒருநாள் அந்த கிளி நாவல் பழம் பறித்துக் கொண்டு வந்தபோது, வேடன் ஒருவன் அதன் மீது அம்பை எய்தான். அம்பு தைத்த கிளி “ஹரிஹரி” என்று சொல்லியபடியே தரையில் வீழ்ந்தது. அருகில் சென்ற வேடன், கிளி பெருமாள் நாமத்தை சொல்லியதைக் கேட்டு பயந்து ஓடிவிட்டான். அப்போது மகாவிஷ்ணு அக்கிளிக்கு காட்சி கொடுத்தார். அதனிடம்,”நீ முற்பிறவியில் கற்றிருந்த கல்வியால் செருக்குடன் இருந்தாய். எனவே, கிளியாக சாபம் பெற்ற நீ இப்பிறவியில்
என் திருநாமத்தை மட்டும் உச்சரிக்கும் பணியை செய்தாய்” எனச் சொல்லி சாபவிமோசனம் கொடுத்தார். எனவே, இங்கு வழிபடுபவர்களின் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கருவறைக்கு பின்புறத்தில் சுவாமிக்கு இடது புறத்தில் தலவிருட்சமான பலா மரம் உள்ளது. இம்மரத்தில் இயற்கையாகவே சங்கு வடிவம் தோன்றியிருக்கிறது. பெருமாளின் சக்கரம் துர்வாசரை விரட்டி சென்றபோது, இங்கு சங்கு பிரதானமாக இருந்ததாம். இதனை உணர்த்தும்விதமாக இம்மரத்தில் சங்கு வடிவம் இருக்கிறது. பிரயோக சக்கரம், சுயம்புவாக வெளிப்பட்ட சங்கு இவ்விரண்டையும் இங்கு தரிசிப்பது மிகவும் அரிய பலன்களைத் தரக்கூடியது. நவக்கிரக தலங்களில் கேது தலமான இங்கு பவுர்ணமியில் 108 தாமரை மலர்களுடன் “ஸ்ரீ ஷீக்த ஹோமம்” நடக்கிறது. பெருமாள் இத்தலத்தில் வராக அவதாரம் எடுத்து உட்சென்றவர் என்பதால் கருவறையில் சுவாமியின் திருப்பாதங்களுக்கு மத்தியில் இருக்கும் இடமே உலகின் மையப்பகுதி என்கிறார்கள். நந்தக முனிவர் தேவர்களோடு கூடி வந்து சுவாமியை வழிபட்டுச் சென்றனர். எனவே, இவ்வூர் “கூடலூர்” என்ற பெயர் பெற்றது.
பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று . இத்தலப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக் கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சுத்தஸத்வ விமானம் எனப்படுகிறது.
பாடியவர்கள்:
திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்
கூற்றேரு ருவிற் குறளாய் நிலநீ ரேற்றா னெந்தை பெருமானூர் போல் சேற்றேர் உழவர் கோதை போதூண் கோற்றேன் முரலுங் கூடலூரே.
–திருமங்கையாழ்வார்
திருவிழா:
வைகாசி விசாகத்தில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்.
பிரார்த்தனை:
இங்கு வேண்டிக் கொள்பவர்களுக்குப் பெருமாளின் சக்கரமே பாதுகாப்பாக இருந்து அவர்களை வழிநடத்தும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு கற்கண்டு, வெண்ணெய் நைவேத்தியம் படைத்து வணங்கினால் குறைவிலாத செல்வம் கிட்டும், தாம்பத்யம் சிறக்கும், என்பது நம்பிக்கை.
வழிகாட்டி:
கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் 22 கி.மீ., தூரத்தில் திருக்கூடலூர். ஆடுதுறைப் பெருமாள் கோயில் ஸ்டாப்பிற்கு அருகில் கோயில் இருக்கிறது. சுவாமிமலையில் இருந்து 18 கி.மீ.
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம் :திருச்சி
தங்கும் வசதி : கும்பகோணம்
Leave a Reply