அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர்
அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர் – 630 211, சிவகங்கை மாவட்டம்.
+91- 4577 – 261 122, 94862 – 32362 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சவுமியநாராயணர் |
தாயார் | – | திருமாமகள் |
தீர்த்தம் | – | தேவபுஷ்கரிணி, மகாமக தீர்த்தம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருக்கோட்டியூர் |
ஊர் | – | திருக்கோஷ்டியூர் |
மாவட்டம் | – | சிவகங்கை |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் எனும் அசுரன் தேவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தினான். கலங்கிய தேவர்கள் தங்களை காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். இரணியன் பிரம்மாவிடம், தன்னை தெய்வங்களோ, தேவர்களோ, மனிதர்களோ, மிருகங்களோ அழிக்க இயலாத அளவுக்கு வரம் பெற்றிருந்தான்.
எனவே, ஒரு வித்தியாசமான உருவத்தை எடுக்க வேண்டியது பற்றி தீவிரமாக ஆலோசிக்க வேண்டியிருந்தது. ஆனாலும் பயந்த முனிவர்கள், இரண்யனின் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றனர். சுவாமியும் அவர்களது கோரிக்கையை ஏற்றார்.
இதனிடையே இத்தலத்தில் கதம்ப மகரிஷி, விஷ்ணுவின் தரிசனம் வேண்டித் தவமிருந்தார். அவர் தான் தவமிருக்குமிடத்தில், எவ்வித தொந்தரவும் இருக்கக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தார். எனவே தேவர்களுடன் ஆலோசனை செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்தார் மகாவிஷ்ணு. ஆலோசனையில், மிருக முகமும், மனித உடலும் கொண்ட வித்தியாசமான நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழிக்கப்போவதாக கூறினார் மகாவிஷ்ணு.
மகிழ்ந்த தேவர்களும், கதம்ப மகரிஷியும் அவர் எடுக்கப்போகும் அவதாரத்தை தங்களுக்குக் காட்டும்படி வேண்டினர், எனவே, அவதாரம் எடுப்பதற்கு முன்பே இங்கு நரசிம்ம கோலம் காட்டியருளினார். இதனால் மகிழ்ந்த கதம்ப மகரிஷியும், தேவர்களும் அவரது பிற கோலங்களையும் காட்டியரும்படி வேண்டினர். சுவாமியும் நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு, இங்கேயே எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் “திருக்கோட்டியூர்” என்றும் பெயர் பெற்றது.
மூலஸ்தானத்தில் சுவாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி, மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி, சந்தான கிருஷ்ணர் ஆகியோர் உள்ளனர். திருமாமகள் தாயார் தனி சன்னதியில் இருக்கிறாள். புருரூப சக்கரவர்த்திக்கு, பெருமாள் இங்குள்ள தீர்த்த கிணற்றில் கங்கை நதியை பொங்கச்செய்து, அதன் மத்தியில் காட்சி தந்தார். இந்த கிணற்றை “மகாமக கிணறு” என்றே அழைக்கிறார்கள். மகாமகத்தின்போது, சுவாமி கருட வாகனத்தில் இங்கு வந்து தீர்த்தவாரியில் பங்கேற்கிறார்.
இக்கோயிலில் விளக்கு நேர்த்திக்கடன் பிரசித்தி பெற்றது. ஒரு அகல் விளக்கை சுவாமியிடம் வைத்து பூஜித்தபின் வாங்கி, பெட்டியில் வைத்து மூடி பூஜையறையில் வைக்கின்றனர். இவ்வாறு செய்தால் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள் மாசி தெப்ப திருவிழாவின்போது இந்த விளக்குடன் மற்றொரு நெய் விளக்கைத் தீர்த்த கரையில் வைத்து வழிபடுகின்றனர். அந்நேரத்தில் புதிதாக வேண்டுதல் செய்பவர்கள் இந்த விளக்கை எடுத்துச் செல்கின்றனர்.
பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோயில் முகப்பில் சுயம்புலிங்கம் ஒன்று இருக்கிறது.
இவ்வூரில் வசித்த நம்பியிடம் மந்திர உபதேசம் பெறுவதற்கு, ராமானுஜர் வந்தார். நம்பியின் இல்லத்திற்கு சென்ற அவர், “நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்” என்றார். நம்பி,”நான் செத்து வா” (நான் என்ற அகந்தை நீங்கிய பிறகு வா எனப்பொருள்) என்றார். ராமானுஜரும் சென்றுவிட்டார். தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலை சொன்னார். அடுத்த முறை சென்ற ராமானுஜர் “அடியேன் வந்திருக்கிறேன்” என்றார். அவரை அழைத்த நம்பி, “ஓம் நமோநாராயணாய” என்ற மந்திர உபதேசம் செய்தார். இந்த மந்திரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும், மீறி சொன்னால் அவருக்கு நரகம் கிடைக்கும் என்றும் கூறினார். ஆனால், ராமானுஜரோ உலக உயிர்கள், நாராயண மந்திரத்தை தெரிந்து கொண்டு வைகுண்டம் அடைய வேண்டும் என்பதற்காக, மந்திரத்தை உபதேசித்தார். நம்பி, ராமானுஜரை கடிந்து கொண்டார். அவரிடம் ராமானுஜர் பணிவாக, “தனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள் நன்றாக வாழ்வார்களே, அதுபோதும்” என்றார். மகிழ்ந்த நம்பி “நீ என்னிலும் பெரியவன், எம்பெருமானார்” என்று சொல்லி கட்டித்தழுவிக்கொண்டார். ராமானுஜர் மந்திர உபதேசம் செய்த விமானத்தில் அவருக்கு சிலை உள்ளது. இவருக்கு நேரே நம்பியின் வீடு இருக்கிறது. இந்த வீடு “கல் திருமாளிகை” என்றழைக்கப் படுகிறது. கோயிலில் நம்பி, ராமானுஜர் இருவருக்கும் சன்னதி இருக்கிறது.
அஷ்டாங்க விமானத்தின் வடப்பக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு, கேது இருப்பது வித்தியாசமான தரிசனம். மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது போன்று ஓரிரு கோயில்களில் தான் இந்த அஷ்டாங்க விமானம் உள்ளது. ராமானுஜர் உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்த தலம்.
பாடியவர்கள்:
பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மங்களாசாசனம்
கொம்பினார் பொழில்வாய்க் குயிலினம் கோவிந்தன் குணம்பாடு சீர் செம்பொனார் மதில்சூழ் செழுங்கனி யுடைத் திருக்கோட்டியூர் நம்பனை நரசிங்கனை நவின்றேத்து வார்களைக் கண்டக்கால் எம்பிரான்தன் சின்னங்கள் இவரிவர் என்று ஆசைகள் தீர்வனே.
–பெரியாழ்வார்
திருவிழா:
மாசியில் தெப்பத்திருவிழா, வைகுண்டஏகாதசி, நவராத்திரி.
பிரார்த்தனை:
திருமண தடை நீக்கும் முக்கிய தலங்களில் இதுவும் ஒன்று. குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
வழிகாட்டி:
மதுரையிலிருந்து 62 கி.மீ., தூரத்தில் திருப்புத்தூர் சென்று, அங்கிருந்து 8 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். குறித்த நேரத்தில் மட்டும் பஸ்கள் உண்டு.
அருகிலுள்ள ரயில் நிலையம் : காரைக்குடி, மதுரை
அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை
தங்கும் வசதி : காரைக்குடி
நல்லா இருக்கீங்களா?
ஏதோ.. இறைவன் அருளால் உயிரோடு உள்ளேன்.
like