அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம் – 611001 நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4365 – 221 374 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நீலமேகப் பெருமாள் |
உற்சவர் | – | சவுந்திரராஜர், கஜலட்சுமி |
தாயார் | – | சவுந்திரவல்லி |
தல விருட்சம் | – | மாமரம் |
தீர்த்தம் | – | சார புஷ்கரிணி |
ஆகமம்/பூசை | – | பாஞ்சராத்ரம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | சுந்தரவனம் |
ஊர் | – | நாகப்பட்டினம் |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
உத்தால பாத மகாராஜனின் குமாரன் துருவன். சிறுவனான இவன் நாரதர் மூலம் இத்தலத்தின் பெருமையை அறிந்தான். உலகம் முழுவதும் தனக்கே அடிமையாக வேண்டும் என்று பெருமாளை குறித்து, தவம் செய்தான். இவனது தவத்தை கலைக்க தேவர்கள் இடைஞ்சல் செய்தனர். இருப்பினும் தவத்தை வெற்றிகரமாக முடித்த துருவன் முன்பு பெருமாள் கருடன் மீது அமர்ந்து பேரழகு பொருந்தியவராக தரிசனம் தந்தார். பெருமாளின் பேரழகில் மயங்கிய துருவன் தான் கேட்க வந்த வரத்தை மறந்தான். இறைவனது பேரழகே போதும். இதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. அந்தப் பேரழகை எப்போதும் தரிசிக்கும் பாக்கியத்தைத் தரவேண்டும் எனப் பெருமாளிடம் கேட்டான். பெருமாளும் தனது சவுந்தரியமான திருக்கோலத்தை துருவனுக்கு காட்டி அவன் தவமிருந்த தலத்திலேயே தங்கினார். அழகான இவர் “சவுந்தரராஜப் பெருமாள்” என்றழைக்கப்படுகிறார்.
நாகங்களுக்கெல்லாம் தலைவனான ஆதிசேஷன், இத்தலத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு “சாரபுஷ்கரணி” என்று பெயரிட்டு, அதன் கரையில் அமர்ந்து பெருமாளைக் குறித்து தவமிருந்தார். பெருமாளும் மகிழ்ந்து ஆதிசேஷனைத் தனது படுக்கையாக ஏற்றுக்கொள்வதாக இத்தலத்தில் அருள்புரிந்தார். நாகம் (ஆதிசேஷன்) பெருமாளை ஆராதித்ததால் அவரது பெயராலேயே இவ்வூர் நாகப்பட்டினம் ஆனது.
தசாவதாரங்களை விளக்கக்கூடிய செம்பு தகட்டாலான மாலை பெருமாளின் இடையை அலங்கரிப்பதை பார்க்கப் புண்ணியம் செய்திருக்க வேண்டும். சாரபுஷ்கரிணியில் நீராடி பெருமாளை வழிபட்டால் அவர்கள் சூரிய மண்டலத்தை அடைவார்கள் என்பது ஐதீகம். இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கையும் சக்தி வாய்ந்தவள். திருமங்கை ஆழ்வார் இத்தல பெருமாளின் அழகில் மயங்கிய நிலையில் 9 பாசுரங்களை பாடிவிட்டு பத்தாவது பாடலில்தான் இத்தலத்தின் பெயரை குறிப்பிடுகிறார்.
கண்டன், சுகண்டன் என்ற இரு அந்தண சகோதரர்கள் நிறைய கொடுஞ்செயல் புரிந்து வந்தார்கள். ஒருநாள் இவர்கள் சார புஷ்கரிணியில் நீராடினார்கள். உடனே அவர்கள் பாவம் நீங்கி வைகுண்டம் சென்றார்கள். இவர்களது சிற்பங்களை பெருமாள் சன்னதியில் வைத்துள்ளார்கள்.
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. நான்கு யுகம் கண்ட இப்பெருமாள் நின்ற, கிடந்த, இருந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். நரசிம்மர் இங்கு எட்டு கரத்துடன் அஷ்டபுஜ நரசிம்மராக அருள்பாலிக்கிறார். ஒரு கை பிரகலாதனை ஆசிர்வதிப்பது போலவும், ஒரு கை அபய முத்திரையைக் காட்டுகிறது. மற்ற கைகள் இரண்யனை வதம் செய்கின்றன.
இங்கு பெருமாள் கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் திருமஞ்சன திருமேனியுடன் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் சவுந்தர்ய விமானம். இங்கு ஆதிசேஷன், துருவன், திருமங்கையாழ்வார், சாலிசுக சோழன் ஆகியோர் இத்தல பெருமாளை தரிசனம் செய்துள்ளனர். பிள்ளைப்பெருமாள் ஐயங்கார், திருக்குருகைப்பெருமான் கவிராயர், முத்துச்சாமி தீட்சிதர் ஆகியோரின் பாடல்கள் இப்பெருமாளின் பேரழகைப் பாடுகின்றன.
பாடியவர்கள்:
திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்
பொன்னிவர் மேனி மரகதத் தின் பொங்கிளஞ் சோதி யகலத்தாரம் மின், இவர் வாயில் நல் வேத மோதும் வேதியர் வானவ ராவர் தோழி என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார் அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா?
–திருமங்கையாழ்வார்
திருவிழா:
பங்குனி பிரம்மோத்சவம் 10 நாள், ஆனி உத்திரம் 10 நாள், ஆடிப்பூரத்தில் ஆண்டாளுக்கு 10 நாள் விழா, தை, புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ பூஜை.
பிரார்த்தனை
காலசர்ப்பதோஷம் நீங்கவும், திருமணத்தடைகள் நீங்கவும் இங்குள்ள பெருமாளிடம் பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து, துளசிமாலை சார்த்தி பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.
வழிகாட்டி:
நாகப்பட்டினம் பஸ்ஸ்டாண்டிலிருந்து தெற்கே 1 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி
தங்கும் வசதி :
நாகப்பட்டினம்
Leave a Reply