அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் (அஷ்டபுஜப்பெருமாள்) திருக்கோயில், காஞ்சிபுரம்
அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் (அஷ்டபுஜப்பெருமாள்) திருக்கோயில், காஞ்சிபுரம் – 631501, காஞ்சிபுரம் மாவட்டம்.
+91-44-2722 5242 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆதிகேசவப்பெருமாள் |
தாயார் | – | அலமேல்மங்கை, பத்மாஸனி |
தீர்த்தம் | – | கஜேந்திர புஷ்கரிணி |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | காஞ்சிபுரம் |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முன்னொரு காலத்தில் மகாசந்தன் என்னும் யோகிக்கு, இந்த பூவுலக வாழ்க்கையை முடித்து விட்டு இறைவனின் திருவடி சேர விருப்பம் ஏற்பட்டது. இந்திரனுக்கு நிகரான தகுதி பெற்றிருந்த இவர் பெருமாளை நோக்கி நீண்ட காலம் தவமிருந்தார். பயந்து போன இந்திரன், மகாசந்தனின் தவத்தை கலைக்க, தேவலோக கன்னிகளை அனுப்பி வைத்தான். இதற்கெல்லாம் யோகி அசையவில்லை. பின் இந்திரன் ஆண்யானை வடிவமெடுத்து முனிவரின் இருப்பிடம் சேர்ந்தான். இதன் அழகில் மயங்கிய முனிவர் தானும் யானை வடிவெடுத்து யானைகளுடன் கூட்டம் கூட்டமாக காடுகளில் திரியும் போது, சாளக்கிராமத்தில் நீராடியது. அப்போது அந்த யானைக்கு தன் யோக வாழ்க்கை ஞாபகத்திற்கு வந்தது. மிகவும் வருந்திய யானை, பல திவ்ய தேசங்களுக்கும் சென்று பெருமாளை வழிபட்டுப் பரிகாரம் தேடியது. மிருகண்டு முனிவர் என்பவர் இதன் நிலை கண்டு வருந்தி,”காஞ்சிக்கு சென்று வரதராஜப்பெருமாளை வழிபட்டால் உனது பிரார்த்தனை நிறைவேறும்” என்றார். அதன்படியே இந்த யானையும் பெருமாளை வழிபட்டு வந்தது. ஒரு முறை கோயிலுக்கு செல்லும் வழியில் அஷ்டபுஜப் பெருமாளைத் தரிசிக்கும் வாய்ப்பு இதற்கு கிடைத்தது. இவரது அழகில் மயங்கிய யானை அருகிலிருந்த குளத்திலிருந்து 14,000 மலர்களை பறித்துக் கொடுத்து இறைவனுக்கு சேவை செய்து வந்தது. ஒரு நாள் பூ கிடைக்காமல் போகவே பக்கத்திலிருந்த குளத்திற்குச் சென்று பூ பறித்தது. அப்போது அதிலிருந்த முதலை யானையின் காலை விடாமல் பிடித்து கொண்டது. பயந்து போன யானை அஷ்டபுஜப் பெருமாளை நோக்கி,”ஆதிமூலமே” என அபயக்குரல் கொடுத்தது. முன்பொரு முறை கஜேந்திரனைக் காப்பாற்றிய ஆதிமூலம் இந்த முறையும் கருட வாகனத்தில் ஏறி வந்து, தனது சக்கரத்தினால் முதலையின் தலையை வெட்டி, யானையைக் காப்பாற்றினார்.
அஷ்டபுஜபெருமாள்: ஒரு சமயம் பிரம்மா பூமியில் தனக்கு விக்ரக வழிபாடு இல்லை என்பதற்காக சரஸ்வதியை விட்டுவிட்டுத் தனியாக பிரமாண்டமான யாகம் ஒன்றை இப்பகுதியில் நடத்தினார். இதனால் வருந்திய சரஸ்வதி யாகத்தை அழிக்க, சரபாஸ்வரன் போன்ற கொடிய அரக்கர்களை அனுப்பி வைத்தாள். தன்னை காக்கும்படி பிரம்மனும் பெருமாளை வேண்ட, பெருமாள் 8 திருக்கரங்களுடன் அஷ்டபுஜப் பெரு மாளாகத் தோன்றி, அரக்கர்களையும் பின் வந்த காளியையும் அழித்து யாகம் சிறப்பாக நடைபெறச் செய்தார். ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட 108 திருப்பதிகளில் திருமங்கையாழ்வாரும், பேயாழ்வாரும் மங்களாசாஸனம் செய்த 44வது திருப்பதி இந்த அஷ்டபுயகரம். பெருமாள் இங்கு அஷ்டபுஜப் பெருமாளாக தோன்றுவதற்கு முன்பே ஆதிகேசவப்பெருமாளாக இத்தலத்தில் அருள்பாலித்து வந்திருக்கிறார் என்றும், மங்களாசாஸனத்திற்கு பின் தான் அஷ்டபுஜப்பெருமாள் எனப் பிரபலமானார் என்றும் கூறுவார்கள். 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் எட்டு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள தாயாரைத் தனியாக பாடல் பாடி மங்களாசாஸனம் செய்துள்ளனர். இந்தப் பெருமாள், வலது நான்கு திருக்கரங்களில் சக்கரம், கத்தி, புஷ்பம், அம்பு ஆகியவையும் இடது நான்கு திருக்கரங்களில் சங்கு, வில், கேடயம், கதை ஆகியவையும் கொண்டு அருள் பாலிக்கிறார். சாதாரணமாகப் பெருமாள் கோயில்களில் ராஜகோபுர நுழைவு வாயில் ஒரு திசையிலும் சொர்க்க வாசல் ஒரு திசையிலும் இருக்கும். ஆனால் இங்கு சொர்க்கவாசலும் கோயிலின் நுழைவு வாசலும் வடக்கு நோக்கி இருப்பது கோயிலின் சிறப்பு.
பெருமாள் சக்ராக்ருதி விமானத்தின் கீழ் மேற்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
பாடியவர்கள்:
திருமங்கையாழ்வார், பேயாழ்வார் மங்களாசாஸனம்
அட்ட புயக்கரம் எங்ஙனும் நாமிவர் வண்ணமெனில் ஏதுமறிகிலம் ஏந்திழையார் சங்கும் மணமும் நிறைவு மெல்லாம் தம்மனவாயப் புகுந்து தாமும் பொங்கு கருங்கடல் பூவை காயா போதவிழ் நீலம் புனைந்த மேகம் அங்ஙனம் போன்றிவர் ஆர் கொல்லென்ன அட்ட புயகரத் தேனென் றாரே.
–திருமங்கையாழ்வார்
திருவிழா:
வைகுண்ட ஏகாதசி, ராமநவமி, நவராத்திரி
பிரார்த்தனை:
பூமாதேவியை அழிக்க வந்த அரக்கனை இத்தலத்துப் பெருமாள் அழித்து அவளைக் காப்பாற்றியதால், வீடுகட்ட நிலம் வாங்க இருப்பவர்கள், விளை நிலங்களை வாங்குபவர்கள், கட்டிய வீடுகளில் பிரச்னை உள்ளவர்கள் இங்கு வழிபட்டு பலனடைகிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
வழிகாட்டி:
காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள சின்னக் காஞ்சிபுரம், திருக்கச்சி நம்பிகள் வீதியில் இத்தலம் அமைந்துள்ளது
அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்.
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை
தங்கும் வசதி : காஞ்சிபுரம்
Leave a Reply