அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில், ஒத்தக்கடை
அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில், ஒத்தக்கடை, மதுரை மாவட்டம்
+91-98420-24866 (மாற்றங்களுக்குட்பட்டது)
பகவான் நாராயணன் இரணிய வதத்திற்காக மனிதனும் சிங்கமும் கலந்த விநோத உருவம் கொண்ட நரசிம்ம மூர்த்தியாக(தற்போது ஆந்திர மாநிலம் அகோபிலம் திருத்தலத்தில்) அவதாரம் எடுத்தார். அவரே, யோக நரசிம்மராக, ரோமச முனிவர் என்ற பக்தரின் பிரார்த்தனைக்கு மனமிரங்கி யானைமலையில் அவதாரம் செய்கிறார்.
இந்த யோக நரசிம்மர் மதுரைக்கு அருகே ஒத்தக்கடையில் 5 கி.மீ. நீளமுள்ள யானைமலை அடிவாரத்தில் தனிக் கோயிலில் அருள்பாலிக்கிறார்.
தேவலோகத் தலைவனான இந்திரனே யானை வடிவில் மலையாக படுத்திருப்பதாகப் புராணம் கூறுகிறது. இங்குள்ள நரசிம்மரைப்போல் வேறு எங்குமே தரிசிக்க முடியாது. ஆறடி உயர கர்ப்பக்கிரகத்தில் முழுவதுமாக நிரம்பி அமர்ந்த கோலத்தில், வலது கையில் சக்கரத்துடன் பிரம்மாண்டமாக அருள்பாலிக்கிறார்.
பிரகலாதன் என்பவன் இரண்யனின் மகன். நாராயணனின் பக்தன். இவன் சதா சர்வ காலமும் நாராயணனின் நாமத்தையே சொல்லிக் கொண்டிருப்பவன். இது அவனது தந்தையான இரணியனுக்கு பிடிக்காது. தன்னையே கடவுளாக வழிபடவேண்டும் என மகனை கட்டாயப்படுத்தினான். ஆனால் பிரகலாதன் மறுத்துவிட்டான். ஆத்திரமடைந்த இரணியன் பிரகலாதனைக் கொல்ல எத்தனையோ முயற்சி செய்தும் அவனைத் திருமால் காப்பாற்றி விடுகிறார். இறுதியாக, உன் நாராயணன் எங்கிருக்கிறான் என கேட்க, தூணிலும் துரும்பிலும் இருக்கிறான் என்று பிரகலாதன் கூறுகிறான். அப்படியானால் இந்த தூணில் இருக்கிறாரா? என்று கேட்டபடி அருகிலிருந்த தூணை தன் கதாயுதத்தால் ஓங்கி அடிக்கிறான் இரணியன். அமைதியாய் இருந்த பெருமாள், நரசிம்ம மூர்த்தியாக வெகுண்டு எழுந்து வந்து இரணியனை அழித்து விட்டார்.
முன்னொரு காலத்தில் ரோமச முனிவர், தனக்கு புத்திர பாக்கியம் வேண்டி இத்தலம் வந்து, சக்கர தீர்த்தத்தில் நீராடி யாகத்தை தொடங்குகிறார். அப்போது நரசிம்ம மூர்த்தியை அவதார காலத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் தரிசிக்க ஆசைப்பட்டார். இவரது ஆசையை நிறைவேற்ற பெருமாள் உக்கிர நரசிம்மராக காட்சி தந்தார். இவரது உக்கிரத்தால் இந்த உலகமே வெப்பத்தால் அவதிப்பட்டது. தேவர்களும், முனிவர்களும் பயந்து போய் நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்க, பிரகலாதன் வரவேண்டும் என்று அவனுக்கு ஆள் அனுப்பினார்கள். அவன் வந்தால் நரசிம்மரின் உக்கிரம் தணிந்து விடும் என அனைவரும் நம்பினார்கள். பிரகலாதனும் வந்து விட்டான். இவன் வந்த பிறகு நரசிம்மரின் உக்கிரம் குறைந்ததே தவிர முற்றிலுமாக நீங்கவில்லை. கடைசியில் மகாலட்சுமியிடம் விஷயத்தை கூறினார்கள். நரசிம்மரின் கோபத்தை குறைத்து சாந்தப்படுத்தி இந்த உலகை காப்பாற்ற மகாலட்சுமி வந்தாள். மகாலட்சுமியை பார்த்ததுமே உக்கிர நரசிம்மரின் கோபம் தணிந்தது. அத்துடன் மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்தவுடன் யோகநரசிம்மராக கேட்டதையெல்லாம் தருபவராக அருள்பாலித்து வருகிறார்.
மூலவர் யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு பார்த்தும், நரசிங்கவல்லிதாயார் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். இந்த கோயிலில் கொடி மரம் கிடையாது. ஏனெனில் கொடிமரம் என்பது, கருவறைக்கு மேல் எழும்பும் விமானத்தின் நீள அகல அளவைப்பொறுத்தே அமையும். ஆனால் இத்தலத்தில் கருவறைக்கு மேல் யானைமலை மிகவும் உயர்ந்து இருப்பதால் கொடிமரம் வைக்கவில்லை என கூறப்படுகிறது. இது ஒரு குடவரைக்கோயில். கருவறையும், அதன் முன்னே உள்ள உடையவர், நம்மாழ்வார் உள்ள அர்த்த மண்டபமும் குடவரை அமைப்புகள் தான்.
கோயிலை ஒட்டி அமைந்துள்ள தீர்த்தத்தில் மாசிப்பவுர்ணமியில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காகவே இத்தலத்தின் அருகேயுள்ள திருமோகூரிலிருந்து காளமேகப்பெருமாள் இங்கு எழுந்தருளுகிறார்.
திருவண்ணாமலையைப் போலவே இங்கும் பவுர்ணமி கிரிவலம் சிறப்பு.
கி.பி. 8,9ம் நூற்றாண்டுகளில் மிகவும் காடாக இருந்த இப்பகுதியில் மதுரையை ஆண்ட வரகுண பாண்டியனின் அமைச்சர் மாறன் காரி என்பவரால் கோயில் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு, அவருக்குபின் அவரது தம்பி மாறன் எயினர் என்பவரால் கி.பி.770ம் ஆண்டு கோயில் கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு(கும்பாபிஷேகம்) செய்யப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. அதன் பின்னர் 1300 வருடங்கள் கும்பாபிஷேகமே செய்யப்படாமல் இருந்து, தற்போது கோயில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இத்தலத்தில் சிவன் கோயில்களைப்போலவே பிரதோஷ வழிபாடு சிறப்பாக செய்யப்படுகிறது. நரசிம்மர் அவதாரம் எடுத்தது ஒரு தேய்பிறை சதுர்த்தி பிரதோஷ காலத்தில்தான். அந்த நேரத்தில் யோகநரசிம்மரை வழிபட்டால் கல்வி சிறக்கும். வியாபாரம் விருத்தியாகும். எதிரிபயம் இருக்காது. மரணபயம் நீங்கும்.
தாயார் நரசிங்கவல்லியை வேண்டினால் திருமண தடை நீங்கும். திருமணம் நடந்தும் கோபக்கார கணவனாக இருந்தால் அவனது கோபம் நீங்கி, சாந்தமாக மனைவியை எப்போதும் நெஞ்சில் வைத்திருப்பவனாக மாறிவிடுவான். எனவே நரசிம்ம பிரதோஷ பூஜை என்பது இத்தலத்தின் ஒரு சிறப்பு.
வழிகாட்டி: மதுரையிலிருந்து வடக்கே 8 கி.மீ. தொலைவில் உள்ள ஒத்தக்கடையிலிருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டிலிருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.
Leave a Reply