அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், மலையடிப்பட்டி
அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், மலையடிப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம்.
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
(நன்றி: தினமலர்)
மூலவர் | – | ரங்கநாதர் |
தாயார் | – | கமலவல்லி |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | மலையடிப்பட்டி |
மாவட்டம் | – | புதுக்கோட்டை |
மாநிலம் | – | தமிழ்நாடு |
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் குடைவரைக் கோயிலைப் போலவே சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஒரே குன்றின்மீது தனித்தனியே அருகருகே எழுப்பப்பட்டுள்ள இரு குகைக் கோயில்கள்தான் மலையடிப்பட்டி கோயில். ஆலயக் கல்வெட்டுகளில் இவ்வூர், திருவாலத்தூர் மலை என்று காணப்படுகிறது.
அனந்தசயன மூர்த்தியாகக் காட்சியளிக்கும் விஷ்ணு கோயில், திருப்பதிக்கு நிகரானது என்கிறார்கள். இங்குள்ள சிவன் கோயில், திருமால் கோயிலைவிட, காலத்தால் முற்பட்டது. இக்கோயிலில் நந்திவர்ம பல்லவன் காலத்துக் கல்வெட்டு (கி.பி 775-826) இருக்கிறது. அந்தக் கல்வெட்டில் இக்கோயில் 16-வது ஆட்சியாண்டில், அதாவது கி.பி. 730-ல் குவாவன் சாத்தன் என்பவரால் மலையைக் குடைந்து சிவனுக்குக் கோயில் எடுத்து, வாகீஸ்வரர் எனப் பெயரிட்டதாகச் செய்தி காணப்படுகிறது.
வாகீஸ்வரர் கருவறையை அடுத்து அர்த்தமண்டபம் உள்ளது. அந்த மண்டபச் சுவரில் சப்தமாதர்கள். கணேசர். வீரபத்திரர், சிவன், விஷ்ணு ஆகியோரது சிற்பங்கள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. காளிகாம்பாள் மகிஷாசுரமர்த்தினியாகச் செதுக்கப்பட்டுள்ள சிற்பத் தொகுதி மிக அற்புதமாக உள்ளது. குகையை ஒட்டியுள்ள முன்மண்டபம். விஜயநகர கால கலைப்பாணி உடையது. வாயிற்காப்போர் எனும் துவாரபாலகருக்கு இரண்டு கைகள் மட்டும் உள்ளன. வேறு கோயில்களில் நான்கு திருக்கரங்களோடு துவார பாலகர்கள் காட்சியளிப்பார்கள். மலையடிப்பட்டி திருமால்(ஸ்ரீ ரங்கநாதர்) கோயிலில், கருவறையும் முன்னால் ஒரு மண்டபமும் உண்டு. இங்குள்ள தூணின் அடிப்பக்கம் சிங்கம் நிமிர்ந்து உட்கார்ந்திருப்பது போன்றும், அதற்குமேல் தூண் உயர்ந்திருப்பதையும் காணலாம். இது பல்லவ மாமல்லன் காலத்துக் கலைப்பாணி என்று சொல்லப்படுகிறது. மண்டபச் சுவரில் நரசிம்மர். வராகமூர்த்தி, தேவியருடன் திருமால் ஆகிய சிற்பங்கள் சுவரிலேயே செதுக்கப்பட்டுள்ளன. கருவறையில் திருமால் அனந்தசயன மூர்த்தியாகக் காட்சியளிக்கின்றார். நாகராஜனாகிய ஆதிசேஷனின் ஐந்து தலைகளும் குடை போன்று விரிந்து திருமாலின் தலைக்கு நிழலளித்துக் கொண்டிருக்கின்றன. திருமாலின் நாபியிலிருந்து பிரம்மா தோன்றிக் காட்சியளிக்கிறார். கருவறையின் பின் சுவரில், அரக்கர்களும் தேவர்களும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
தாயாரின் சந்நிதி காலத்தால் மிகவும் பிற்பட்டதாகும். கி.பி.16 – ஆம் நூற்றாண்டில், இப்பகுதி தஞ்சை நாயக்க மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தபோது, அச்சுதப்ப நாயக்கர் இக்கோயிலுக்குக் கொடையளித்த செய்தியும் ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது.
மலையடிப்பட்டி குகைக் கோயில்களுக்கு மிக அருகில் களியாப்பட்டி, விசலூர் போன்ற இடங்களில் வேறுசில பழங்கால குகைக்கோயில்களும் உள்ளன. இந்தக் குடவரைக் கோயிலில் சிவா–விஷ்ணு ஆகிய இருவரும் ஒரே மலையில் இருப்பதால், பிரதோஷ நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். திருவோண நட்சத்திர காலங்களில் விஷ்ணுவுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. ஆடிப்பூரம், நவராத்திரி திருவிழா, பிரதோஷம். கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, மார்கழி மாத திருவாதிரை நாட்கள் விசேஷ தினங்களாகக் கொண்டாடப்படுகிறது. கண் நோய்களைப் போக்குவதால் இவருக்குக் கண் ஒளி வழங்கும் பெருமாள் என்ற திருநாமமும் உண்டு.
சப்தமாதர்கள், விநாயகர், முருகன், வீரபத்திரர், வாகீஸ்வரர், காளிகாம்பாள், நரசிம்மர், வராகமூர்த்தி, கமலவல்லி தாயார் சன்னதிகள் உள்ளன.
திருவிழா:
ஆடிப்பூரம், நவராத்திரி திருவிழா, பிரதோஷம். கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, மார்கழி மாத திருவாதிரை நாட்கள்.
வேண்டுகோள்:
கண் கோளாறு உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து வணங்கி செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு நெய் விளக்கேற்றியும், துளசி மாலை அணிவித்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply