அருள்மிகு கஜேந்திரவரதர் சுவாமி திருக்கோயில், அத்தாளநல்லூர்
அருள்மிகு கஜேந்திரவரதர் சுவாமி திருக்கோயில், அத்தாளநல்லூர் – 627 426 திருநெல்வேலி மாவட்டம்.
+91- 4634 – 287195 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆதிமூலம் |
உற்சவர் | – | கஜேந்திவரதன் |
தாயார் | – | ஆண்டாள் |
தீர்த்தம் | – | தாமிரபரணி |
ஆகமம்/பூசை | – | பாஞ்சராத்ரம் |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | யானைகாத்தநல்லூர் |
ஊர் | – | அத்தாளநல்லூர் |
மாவட்டம் | – | திருநெல்வேலி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிறந்த பெருமாள் பக்தனாக இருந்த இந்திரதிம்னன் எனும் மன்னன், அகத்தியரைத் தனது குருவாக ஏற்றுக்கொண்டு அவரது ஆலோசனைப்படி ஆட்சி புரிந்து வந்தான். ஒருமுறை தன் அவைக்கு வந்த அகத்தியரை வரவேற்காமல், கேளிக்கையில் மூழ்கியிருந்தான். இதனைக்கண்டு மனம் குமுறிய அகத்தியர், தனது சீடராக இருந்து கொண்டு தம்மை மதிக்காமல் இருந்ததற்குத் தண்டனையாக அவரை யானையாக மாறி, வனத்தில் சுற்றித்திரிந்து பின் மோட்சம் பெறுவாய் என சபித்தார். அகத்தியரிடம் சாபம் பெற்ற அவன் காட்டில் யானைகளின் தலைவனாக கஜேந்திரன் என்ற பெயரில் வாழ்ந்து வந்தான்.
இது ஒருபுறமிருக்க, கபிலமுனிவர் ஒருமுறை ஆற்றில் நீராடச் சென்றார். அப்போது அங்கு ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த கந்தர்வன், விளையாட்டாக அவரது காலைப்பிடித்தான். இதனால் கோபம் கொண்ட கபிலமுனிவர் அவனை நீரிலேயே முதலையாக இருக்கும் படியும், பிற்காலத்தில் பகவான் விஷ்ணுவின் சக்கரத்தால் சாப விமோசனம் பெற்று, மோட்சம் பெறுவாய் என்றும் சபித்துச்சென்றார். அதன்படி அவன் தாமிரபரணி ஆற்றில் முதலைகளின் தலைவனாக வசித்து வந்தான். இவ்வாறு, இந்திரதிம்னனும், கந்தர்வனும் தாங்கள் பெற்ற சாபத்தினால் யானையாக நிலத்திலும், முதலையாக நீரிலும், வாழ்ந்து வந்தனர்.
ஒருசமயம், காட்டில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட அங்கு வசித்த யானைகள் அனைத்தும் அவர்களின் தலைவனான இந்திரதிம்னன் தலைமையில் நீர் நிலையைத் தேடி தாமிரபரணிக்கு வந்தன. அவ்வாறு, வந்த யானைகள் அனைத்தும் ஒரே சமயத்தில் தாமிரபரணியில் இறங்கிட அங்கு வசித்த உயிரினங்கள் யானைகளின் காலில் மிதிபட்டு இறந்தன. இதனால் கலக்கமடைந்த முதலைகளும், நீர்வாழ் ஜீவன்களும் யானைகளின் படையெடுப்பிற்கு முடிவு கொணரும்படி, தங்களது தலைவனாக இருந்த கந்தர்வனிடம் முறையிட்டனர். எனவே கந்தர்வன் நீருக்கு அடியில் வந்து இந்திரதிம்னனின் காலை இறுகப்பற்றிக்கொண்டான். தனது காலை முதலையிடமிருந்து மீட்க யானை எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
இவ்வாறு, இவ்விருவரும் ஒரு யுககாலம் வரையில் போரிட்டும் முடிவு ஏதும் ஏற்படவில்லை. அப்போது ஆற்றின் நடுவே தாமரை மலர் ஒன்று இருந்ததைக்கண்ட இந்திரதிம்னனுக்கு அம்மலரை பெருமாளின் திருப்பாதத்தில் வைத்து பூஜைசெய்ய வேண்டுமென்ற ஆசை தோன்றியது. எனவே “மூலப்பரம்பொருளே! இறுதியாக உன்னை துதிக்கும் பாக்கியத்தை எனக்கு வழங்கு” என்று பெருமானை நோக்கி வணங்கினார். அவரது வேண்டுகோளுக்கு செவிசாய்த்த விஷ்ணு, அவ்விடத்தில் தோன்றி முதலை வடிவில் இருந்த கந்தர்வன் மீது தனது சக்கராயுதத்தை செலுத்தி அவனை மோட்சமடையச் செய்தார். பின், கஜேந்திரனை மீட்க விஷ்ணு அவருக்கு கைகொடுத்த போது அவர் தனது கையை கொடுக்காமல்,”என் வேண்டுதலை ஏற்று என்னைக் காக்க வந்தது போல, உன்னை நாடி வரும் பக்தர்களையும் காக்க இவ்விடத்தில் இருந்து அருள்புரிய வேண்டும்” என்றார். அவரது, கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எம்பெருமாள் இவ்விடத்தில் வீற்று அருள்பாலித்து வருகிறார்
யானையாக சபிக்கப்பட்ட இந்திரதிம்னனும், முதலையாக சபிக்கப்பட்ட கந்தர்வனும் மோட்சம் பெற்ற இத்தலத்திற்கு வந்து சுவாமியை எண்ணி மனமுருகி துதிப்போரது பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும். தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ள இத்தலத்தில் பெருமாளின் பக்தர்களான பிருகு மற்றும் மார்க்கண்டேய ரிஷிகள் தவம் செய்து கஜேந்திரவரதரின் திருவுருவ தரிசனம் பெற்றுச் சென்றுள்ளனர். இத்தலத்தில் யானைகள் வந்ததற்கு சான்றாக இன்றும் பக்கத்தில் உள்ள முண்டந்துறை வனப்பகுதியில் அதிகளவில் யானைக்கூட்டம் இருப்பதும், அகத்திய முனிவர் இருந்ததற்கு சான்றாக அருகிலுள்ள பாபநாசத்தில் அகத்தியர் அருவி இருப்பதும் குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். மன்னர்காலத்தில் கட்டப்பட்ட இத்தலம் பிரம்மாண்டமாக மன்னர்கால கட்டடக்கலையை பறைசாற்றும் விதமாக பொலிவுற அமைந்துள்ளது. இங்கு கோயில் செய்தி குறித்த கல்வெட்டுக்களும் அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளன.
கஜேந்திரனாக சாபம் பெற்ற பின் மோட்சம் அடைந்த இந்திரதிம்னனின் வேண்டுகோளின் படி பெருமாள் இத்தலத்தில் வீற்றிருப்பதால் அவர் “கஜேந்திரவரதன்” என்ற திருநாமம் கொண்டே அழைக்கப்படுகிறார். இதனால், இவ்வூர் ஆதியில் யானைகாத்தநல்லூர் என்ற பெயரிலும் அழைக்கப் பட்டுள்ளது.
இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் இத்தரவிமானம் எனப்படும். இங்கு நைவேத்யமாக சுத்தன்னம் படைத்து வழிபடுகின்றனர்.
கோயில் சுற்றுப்பிரகாரத்தில் தசாவதார கோலங்களில் பெருமாள், வேணுகோபால், பரமபத நாதன், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் மற்றும் நாச்சியார்கள் தனித்தனி சன்னதிகளிலும், நரசிம்மர் ஸ்தம்பத்திலும் அமைந்திருந்து அருள்புரிகின்றனர்.
பிற ஆலயங்களில் இல்லாத விதமாக இத்தலத்தில் கஜேந்திரவரதர் தனது கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் பித்ரு, மார்க்கண்டேய மகரிஷிகளுடன் நின்றகோலத்தில் இருந்து அருட்காட்சி தருகிறார்.
திருவிழா:
தைப்பூச தினத்தில் 3 நாட்கள், சித்திரைப்பிறப்பு, வைகுண்ட ஏகாதசி, திருக்கார்த்திகை, மார்கழி 30 நாள் பூஜை, தமிழ் மாத இறுதி சனி மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகள்.
பிரார்த்தனை
திருமணத்தடை நீங்க, புத்திரபாக்கியம் கிடைக்க, நல்ல இல்வாழ்வு அமைய, கல்வியில் சிறக்க, படிப்புக்கேற்ற வேலை கிடைக்க, குடும்ப பிரச்னைகள் நீங்க, ஐஸ்வர்யம் கிடைக்க, வியாபாரம் சிறக்க, உடற்பிணிகள் நீங்க, நினைத்த செயல்கள் ஈடேற இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
நேர்த்திக்கடன்:
கஜேந்திரவரதரிடம் வேண்டிக்கொண்ட செயல்கள் நிறைவேறிட பட்டு வஸ்திரங்கள் சாத்தி, விசேஷ திருமஞ்சனம் செய்து திருவாபரணங்கள் செலுத்தலாம். நரசிம்மருக்கு பூச்சட்டை சாத்தியும் வழிபடலாம்.
இருப்பிடம் :
திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் பஸ்களில் வீரவநல்லூரில் இறங்கி ஆட்டோவில் சென்று கோயிலை எளிதில் அடையலாம். மினிபஸ்களும் உள்ளன. முக்கிய ஊர்களில் இருந்து தூரம் : நெல்லையிலிருந்து 38 கி.மீ., வீரவநல்லூரிலிருந்து 8 கி.மீ.,
அருகிலுள்ள ரயில் நிலையம் :வீரவநல்லூர்
அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை, திருவனந்தபுரம்
தங்கும் வசதி :திருநெல்வேலி
Leave a Reply