அருள்மிகு ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில், கல்லிடைக்குறிச்சி

அருள்மிகு ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில், கல்லிடைக்குறிச்சி – 627 416. திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4634 – 250 302, 94431 59402 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

 

மூலவர் ஆதிவராகப்பெருமாள்
உற்சவர் லட்சுமிபதி
தாயார் பூமாதேவி
தல விருட்சம்
தீர்த்தம் தாமிரபரணி
ஆகமம்/பூசை வைகானஸம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கல்யாணபுரி, திருக்கரந்தை
ஊர் கல்லிடைக்குறிச்சி
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

தல வரலாறு:

குபேரன், ஒரு சாப விமோசனத்திற்காக பூலோகம் வந்தான். பல தலங்களில் சிவனை தரிசித்த அவன், பெருமாளை தரிசிக்க விரும்பினான். எனவே, வராகப்பெருமாளுக்கு ஒரு சிலை வடித்து, தாமிரபரணி நதிக்கரையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். காலப்போக்கில் இந்த சுவாமி இருந்த இடம் மறைந்துவிட்டது. ஒருசமயம் இங்கு வசித்த பெருமாள் பக்தர் ஒருவர் கனவில் தோன்றிய சுவாமி, தான் தாமிரபரணி நதிக்கரையில் இத்தலத்தில் இருப்பதாக உணர்த்தினார். அதன்பின் பக்தர் அச்சிலை இருந்ததைக் கண்டார். பின்பு இங்கு கோயில் எழுப்பப்பட்டது.

மூலஸ்தானத்தில் ஆதிவராகர், பத்ம பீடத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது மடியில் அமர்ந்திருக்கும் பூமாதேவி, சுவாமியின் திருமுகத்தை பார்த்தபடி இருக்கிறாள். எப்போதும் தாயாருடன் சேர்ந்து காட்சி தருவதால் சுவாமிக்கு, “நித்ய கல்யாணப்பெருமாள்என்றும் பெயர் உண்டு. தலத்திற்கும், “கல்யாணபுரிஎன்ற புராணப்பெயர் உண்டு. திருமணம் ஆகாதவர்கள் இங்கு உற்சவ மூர்த்திக்கு, திருமஞ்சனம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். இதனால், விரைவில் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.

பெருமாள் கோயில்களில் சுவாமிக்கு இருபுறமும் பிரகாரத்தில் தாயார், ஆண்டாள்தான் தனிச்சன்னதியில் இருப்பர். ஆனால் இக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சுவாமி தீட்சிதர், இத்தல பெருமாளைப் பற்றி கீர்த்தனைகள் இயற்றியுள்ளார்.

இங்கு பிரார்த்திக்கும் பக்தர்கள் பெருமாளை, கருட வாகனத்தில் எழுந்தருளச்செய்து வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் வருடத்தில் அதிக நாட்களில் இக்கோயிலில், பெருமாளின் கருடசேவையைத் தரிசிக்கலாம்.

இரண்டு பெருமாள் தரிசனம்:

சுவாமி சன்னதி விமானத்தில் சயனப்பெருமாள் சன்னதி இருக்கிறது. இவருக்கு அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, நாபியில் பிரம்மா, அருகில் பிருகு, மார்க்கண்டேய மகரிஷிகளும் இருக்கின்றனர். தினமும் காலையில் ஆதிவராகருக்கு திருமஞ்சனம் செய்தபின்பு, ஒருவேளை மட்டும் இவருக்கு பூஜை செய்கின்றனர். அவ்வேளையில் மட்டுமே இவரை தரிசிக்க முடியும். கோயில் மேல்புற சுவரில், மூலகருடாழ்வார் இருக்கிறார். ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து, பூக்களால் ஆன ஆடை அணிவித்து, விசேஷ பூஜை செய்கிறார்கள்.

பிரகாரத்தில் மடியில் லட்சுமியுடன் லட்சுமிநாராயணர், விஷ்வக்ஷேனர், ஆழ்வார்கள் சன்னதி இருக்கிறது.பெருமாளின் தசாவதார வடிவங்கள், சுவாமி சன்னதிக்கு பின்புறம் சிலாரூபமாக இருக்கிறது. பீட வடிவில் யானை, குதிரை வாகனங்களுடன் சாஸ்தா இருக்கிறார்.

பெருமாள் வராக மூர்த்தியாக, பூமாதேவியை மடியில் அமர்த்தியபடி பத்ம பீடத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பு. இவருக்குதாமிரபரணி தீர்த்தத்தால் மட்டுமே திருமஞ்சனம் செய்யப்படுவது சிறப்பு. இதற்காக தினமும் காலையில் சுவாமிக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், மேளதாளம் முழங்க தாமிரபரணி நதிக்குச் சென்று, தீர்த்தம் எடுத்து வருகிறார்.

திருவிழா:

சித்திரையில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரத்தை ஒட்டி ஊஞ்சல் உற்ஸவம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி.

பிரார்த்தனை

நிலம் தொடர்பான பிரச்னைகள் நீங்கவும், செல்வம் பெருகவும் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு சர்க்கரைப்பொங்கல் படைத்து, விசேஷ திருமஞ்சனம் செய்தும், சுவாமியை கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

இருப்பிடம் :

திருநெல்வேலியில் இருந்து 35 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது. பேருந்து நிலையத்தில் இருந்து கோயிலுக்கு நடந்து சென்றுவிடலாம்.

அருகிலுள்ள புகைவண்டி நிலையம் : திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை

தங்கும் வசதி : திருநெல்வேலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *