அருள்மிகு ஆதிகேசவரப்பெருமாள் சுவாமி திருக்கோயில், பவானி

அருள்மிகு ஆதிகேசவரப்பெருமாள் சுவாமி திருக்கோயில், பவானி – 638 301 ஈரோடு மாவட்டம்.

+91- 4256 – 230 192 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அமாவாசை நாட்களில் நாள் முழுதும் திறந்திருக்கும்.

 

மூலவர் ஆதிகேசவரப்பெருமாள்
உற்சவர் கூடலழகர்
தாயார் சவுந்திரவல்லி
தல விருட்சம் இலந்தை
தீர்த்தம் காவிரி, பவானி, அமிர்தநதி
ஆகமம்/பூசை பாஞ்சராத்ரம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருநணா
ஊர் பவானி
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

அசுரகுருவான சுக்கிரனின் பொறாமைக்கு ஆளான குபேரன், அவனிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டி, பூலோகத்தில் தலயாத்திரை சென்றான். அவன் இவ்வழியாக சென்றபோது புலி, மான், யானை, சிங்கம், பசு, நாகம், எலி என ஒன்றுக்கொன்று எதிரான குணங்களை உடைய விலங்கினங்கள் ஒரே இடத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தன. தேவர்கள், மகரிஷிகள், கந்தர்வர்கள் என பலர் தவம் செய்து கொண்டிருந்தனர். மிருகங்களும் அவர்களுக்கு தொந்தரவு தராமல் அமைதியாக இருந்தன. அதைக்கண்ட ஆச்சர்யமடைந்த குபேரன், கொடிய மிருகங்களும் அமைதியாக இருக்கும் இத்தலம் புனிதம் வாய்ந்ததாகத்தான் இருக்க வேண்டுமென எண்ணினான். இவ்விடத்தில் திருமால், சிவனை தரிசிக்க விரும்பித் தவம் செய்தான். இருவரும் அவனுக்கு காட்சி தந்தனர். குபேரன் அவர்களிடம், “புனிதமான இந்த இடத்தில் தனக்கு அருளியது போலவே எப்போதும் எல்லோருக்கும் அருள வேண்டும்என வேண்டினான். அவனுக்காக சிவன் சுயம்புவாக எழுந்தருளினார். திருமாலும் அருகிலேயே தங்கினார்.

ஆதிகேசவர் சன்னதிக்கு முன்புறம் வேணுகோபாலர் இராதா, இருக்குமணியுடன் தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார். இவருக்கு பின்புறத்தில் பசு ஒன்று உள்ளது. இந்த பசுவின் முன்பகுதியில் தலை இருப்பதோடு, பின் உடல் பகுதியில் மற்றொரு தலையும் இருக்கிறது. இவ்வாறு இரண்டு தலைகளுடன் பசு காட்சியளிப்பது வித்தியாசமான அமைப்பு ஆகும்.

சைவ, வைணவ தலம் :

இத்தலத்தில் சிவன் சங்கமேஸ்வரராகவும், திருமால் ஆதிகேசவராகவும் அருளுகின்றனர். சிவன் வலது புறத்தில் லிங்க வடிவத்தில் இருக்க, திருமால் இடது புறத்தில் அர்ச்சாவதார (மனித வடிவம்) வடிவத்தில் இருக்கிறார். இவ்விருவரின் சன்னதிகளுக்கு இடையே அம்பாள் வேதநாயகி, தாயார் சவுந்திரவல்லியின் சன்னதிகள் உள்ளன. அம்பாள் தாயாருக்கு முறையே, சிவன், பெருமாள் இருவரும் பாதுகாப்பாக இருந்து அருளுவதாக இக்கோலத்தை சொல்கிறார்கள். தம்பதியர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் அவர்களுக்குள் ஒற்றுமை கூடும், தாம்பத்யம் சிறக்கும் என்பது நம்பிக்கை.

வடக்கு மற்றும் தென் திசையில் இரண்டு ராஜகோபுரங்கள் இருக்கிறது. இவை சிவன், ஆதிகேசவர் இருவருக்கும் பொதுவானதாக கருதப்படுகிறது. பிரதான வாசல் வழியே நுழைந்தவுடன் வலப்புறத்தில் ஆதிகேசவர் சன்னதி இருக்கிறது. ஒரே தலத்தில் சிவன், திருமால் இருவரையும் தரிசிப்பது விசேஷமான பலன்களைத் தரும்.

கொங்கு நாட்டில் உள்ள முக்கியமான 7 தலங்களில் இத்தலமும் ஒன்று. ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் இத்தலத்தில்தோன்றியதாகவும், அவற்றின் வடிவமாக இங்கு சிவனும், திருமாலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே, இங்கு வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

காவிரி, பவானி, அமிர்த நதி ஆகிய மூன்று நதிகளும் இத்தலத்தில் சங்கமிக்கின்றன. இதில் அமிர்தநதி மட்டும் கண்ணிற்கு தெரியாது. இந்த நதியானது பூமிக்கடியில் இருந்து இவ்விடத்தில் சங்கமிப்பதாக ஐதீகம். மூன்று நதிகள் சங்கமிப்பதால் இத்தலத்திற்கு, “தென்திரிவேணி சங்கமம்என்ற பெயரும் உண்டு. இந்நதியில் நீராடி, சிவன் திருமாலை வழிபட்டால் பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும் என்கிறார்கள். இங்கு அதிகளவில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கிறார்கள். பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.

கோயில் முன்மண்டபத்தில் சந்தான கோபாலர் இருக்குமணி, சத்யபாமாவுடன் இருக்கிறார். கருவறையில் ஆதிகேசவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருளுகிறார். தாயார் சவுந்திரவல்லி சுவாமிக்கு வலப்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவ்விருவரின் சன்னதிகளுக்கு நடுவே இலட்சுமி நரசிம்மர் சாந்தமான கோலத்தில் இருக்கிறார்.

ஆதிகேசவர் சிலை முழுக்க சாளக்கிராமத்தால் செய்யப்பட்டதாகும். பிரதோஷ நாளன்று இலட்சுமி நரசிம்மருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. அந்நேரத்தில் சுவாமியை வழிபட்டால் பயங்கள் நீங்கும், எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்கிறார்கள்.

திருவிழா:

சித்திரையில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பெருக்கு, வைகுண்ட ஏகாதசி.

வேண்டுகோள்:

திருமண, புத்திர தோஷம் இருப்பவர்கள் சுவாமிக்கு நைவேத்யம் படைத்து, திருமஞ்சனங்கள் செய்து வழிபடுகின்றனர்.

புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் பெருமாளுக்கு பாசிப்பருப்பு நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள் துலாபாரம் செலுத்தி நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *