அருள்மிகு தில்லைக் காளி திருக்கோயில், சிதம்பரம்
அருள்மிகு தில்லைக் காளி திருக்கோயில், சிதம்பரம் – 608 001, கடலூர் மாவட்டம்.
+91- 4144 – 230 251 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4.30 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | தில்லைக் காளி, பிரம்ம சாமுண்டீசுவரி |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | சிதம்பரம் |
மாவட்டம் | – | கடலூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சில காலத்துக்குப் பின்னால் நடக்க இருந்த ஒரு போரில், பார்வதியே வேறு அவதாரம் எடுத்து ஒரு அரக்கனை அழிக்க வேண்டும். அந்த அரக்கனை பார்வதியால் மட்டுமே அழிக்க முடியும் என்பது தேவ விதியாக இருந்தது.
ஆகவே பார்வதி சிவபெருமானை விட்டு பிரிந்து செல்லவில்லை என்றால் பார்வதி, உக்ர குணத்தைக் கொண்டு அந்த அவதாரத்தை எடுக்க முடியாது. மேலும் பார்வதி முன்னர் ஒரு சமயத்தில் பெற்று இருந்த சாபத்தினால், சிவபெருமானைப் பிரிந்து சில காலம் வாழ வேண்டும். இவை அனைத்தையும் அந்த ஈசன் அறிந்து இருந்தார். ஆகவே அதற்காக அவர் ஒரு திருவிளையாடலை நடத்தத் துவங்கினார்.
அதற்கேற்ப ஒரு முறை கைலாயத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் பெரிய வாக்குவாதம் ஏற்படுகின்றது. அது நீ பெரியவனா இல்லை நான் பெரியவளா எனத் துவங்கிய சண்டை. சக்தி இல்லையேல் சிவனும் இல்லை என பார்வதி வாதாடும் நிலைக்குப் போக, சினமுற்ற சிவபெருமான், பார்வதியைக் கோர உருவம் கொண்ட காளியாக மாறுமாறு சாபம் கொடுத்து விடுகிறார்.
சிவனை விட்டுப் பிரிய மனமில்லாத பார்வதி, அழுது புலம்பி, தன்னை மன்னித்து விடுமாறு அவரை கேட்டுக் கொண்டார். பின் சாப விமோசனம் பெற்று மீண்டும் அவரை எப்படி அடைவது எனக் கேட்க, அதற்கு, சிவபெருமான் கூறினார்: “இன்னும் சிறிது காலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் நடக்க உள்ளது. அந்த நேரத்தில் நீ இதே காளி உருவில் தேவர்களுக்காகப் போரிட்டு அசுரர்களை அழிப்பாய். பிறகு, நீ தில்லை மரங்கள் சூழ்ந்த தில்லைக்கு வந்து, என்னை நினைத்து தவம் இருக்க வேண்டும். நான் வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்களது வேண்டுகோளின்படி தில்லையில் ஆனந்த நடனம் ஆடுவேன். அப்போது நீ சிவகாமி என்ற திருநாமத்துடன் என்னிடம் வந்து சேர்வாய்” என்றார். அவ்வாறே அவள் செய்தாள்.
காலம் ஓடியது. தாரகாசுரன் என்ற அசுரன் தோன்றி தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வரலானான். தேவர்களும் முனிவர்களும் மும்மூர்த்திகளிடம் சென்று அவன் தொல்லையில் இருந்து தம்மை காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து சிவபெருமானிடம் ஆலோசனைக் கேட்க, அவர் காளி உருவில் இருந்த பார்வதியை, தாரகாசுரனை வதம் செய்ய அனுப்பினார். காளி உருவில் இருந்த பார்வதி யுத்தகளத்துக்குச் சென்றாள். தாரகாசுரனையும் அவன் சேனையும் அழித்தப் பின் வெற்றி அடைந்தாள். ஆனால், அவனை வெற்றி கொண்டபின்னும் அவள் கோபம் அடங்கவில்லை. வெறிபிடித்தவள் போல் ஊழித்தாண்டவம் ஆடத் துவங்கினாள்.
தாரகாசுரன் அழிந்தாலும், அசுரர்கள் முனிவர்களைத் தொல்லைப்படுத்தினர். அவர்கள் மீண்டும் சிவபெருமானிடம் மீண்டும் சென்று வேண்டினார்கள். அனைவரும் சிவபெருமானையே மீண்டும் மீண்டும் தஞ்சம் அடைவது காளிக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவளுக்கு சிவபெருமான் மீது கோபம் ஏற்பட்டது. அவரை விட தானே பெரியவள் என முன்னர் கொண்டு இருந்த எண்ணம் இன்னமும் குறையவில்லை. வெறியும் அடங்கவில்லை. அவளுடைய உக்ரத்தினால் அனைத்து முனிவர்களும் சொல்லொண்ணத் துயருக்கு ஆளாகினார்கள்.
அந்த நேரத்தில் அங்கு இருந்த வியாக்கிரபாதர் மற்றும் பதஞ்சலி முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று, சிவபெருமான் அவர்களுக்கு தில்லையில் திருநடனக் காட்சி தந்தார். அதை மெச்சி அனைவரும் அமர்ந்திருந்த வேளையில், காளி சிவனை நடனப் போட்டிக்கு அழைத்தாள். போட்டியில் யார் தோற்றாலும் அந்த ஊரின் எல்லைக்கு சென்று விட வேண்டும் என்பது நிபந்தனை. நடனம் துவங்கியது. அனைத்து தேவர்களும் கடவுள்களும் இசை இசைக்க, காளி மற்றும் சிவபெருமானின் நடனப் போட்டி தொடர்ந்தது. வெற்றித் தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் அனைவரும் திகைத்து நின்றபோது சிவபெருமான் ஊர்த்துவத் தாண்டவம் என்பதை ஆடிக் காட்டினார். அதில் அவர், தனது காலால் கீழே விழுந்த குண்டலத்தை எடுத்துக் காலை மேலே தூக்கி குண்டலத்தைத் தன் காதில் அணிந்து கொண்டார். அதே ஊர்த்துவத் தாண்டவத்தை பெண்ணான காளியினால் செய்ய முடியாமல் நாணம் தடுத்தது. பெண்ணினால் எப்படிக் காலை மேலே தூக்கிக் காட்டுவது? அதனால் போட்டியில் தோற்றுப் போனாள்.
போட்டியில் தோற்று போனதும், அவமானம் அடைந்தவள் ஊர் எல்லைக்குச் சென்று உக்ரத்துடன் வட எல்லைக் காளியாக அமர்ந்தாள். அதைக் கண்ட அனைவரும் அதிர்ந்து போனார்கள். சக்தி இல்லையேல் சிவம் இல்லை. இருவரும் இணைந்து இல்லாதவரை பிரபஞ்சம் எப்படி இயங்கும் என கவலைப்பட, அனைத்து தேவர்களும், திருமாலும் பிரும்மாவும் ஒன்று சேர்ந்து காளியிடம் சென்று அவளைச் சாந்தமடையுமாறு வேண்டிக் கொண்டனர். அவளது கோபத்தைப் போக்கும் வகையில், பிரம்மா அவளை வேதநாயகி எனப்புகழ்ந்து பாடி, நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில், நான்கு முகங்களுடன் அருளுமாறு வேண்டினார். அதன்படி காளி,”பிரம்ம சாமுண்டீசுவரி” என்ற பெயரில் பிரம்மனைப்போல் நான்கு முகத்துடன் காட்சி தந்தாள். அவர் பூசையை ஏற்றுக் கொண்ட காளி, சாந்தநாயகி ஆகி, அதே இடத்தில் இன்னொரு சன்னதியில் சென்று அமர்ந்தாள்.
ஆக அந்த ஆலயத்தில் ஒரு சன்னதியில் உக்ரகாளி தேவியாக பல ஆயுதங்களையும் ஏந்திய எட்டுக் கைகளைக் கொண்ட தில்லைக்காளியாகவும், இன்னொரு சன்னதியில் சாந்தமான நான்கு முக பிரும்ம சாமுண்டேசுவரி அம்மனாகவும் காட்சி தந்தவாறு பக்தர்களை காத்து வருகிறாள்.
கோப சக்தியாக இருக்கும் “தில்லைக்காளி“யை “எல்லைக்காளி” என்றும் சொல்வர். பிரம்ம சாமுண்டீசுவரிக்கு “தில்லையம்மன்” என்ற பெயரும் உண்டு. இவள் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி சாந்த சொரூபிணியாக அருளுகிறாள். இவளுக்கு தினமும் அபிசேகம் நடைபெறும்.
தில்லைக்காளி உக்கிரத்துடன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் உள்ளாள். இப்படி செய்வதால் அம்மன் மகிழ்ந்து வேண்டும் வரம் தந்திடுவாள் என்பது நம்பிக்கை.
காளி சொரூபத்தில் உள்ளவள் பில்லி சூனியம், பேய்கள், சினம், பகை, கொடிய வியாதிகள், ஆணவம், அகம்பாவம் போன்றவற்றை அழித்து வருகிறாள். சாந்தமான பிரும்ம சாமுண்டேசுவரி கல்வி, செல்வம், வீரம் போன்ற அனைத்தையும் அளித்து வருகிறாள்.
இந்த ஆலயத்தை பன்னிரெண்டாம் நூற்றாண்டில் (1229 AD மற்றும் 1278 AD ஆண்டுகளில்) கோபெருஞ் சிங்கன் என்ற மன்னன் கட்டினான் என்று தெரிகின்றது. அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த பழக்கத்தின்படி போரில் வெற்றி அடைவதற்காகத் தமது தலையையே தருவதாக வேண்டிக் கொண்ட படையினர் சிலர், போர்களில் வெற்றிப் பெற்ற பின் அங்கு வந்து தமது தலைகளையே வெட்டிக் கொண்டு மரணம் அடைந்ததாக வாய்மொழிக் கதைகளும் உள்ளது.
சிதம்பரத்தில் அருள் செய்யும் நடராஜரைத் தரிசிப்பவர்கள், ஊரின் எல்லையில் அருள்பாலிக்கும் தில்லைக்காளியையும் தரிசிக்கிறார்கள்.
ஆலயம் மிகப் பெரியது அல்ல ஆனால் மிகப் பழமையானது. உள்ளே நுழைந்ததும் வலது பக்கத்தில் உள்ள தனி சன்னதியில் ஆனந்த நர்த்தனமாடும் விநாயகரும், இடதுபுறத் தனிச் சன்னதியில் முருகனும் கிழக்கு திசையை நோக்கிப் பார்த்தவாறு இருந்து கொண்டு பக்தர்களை காத்து அருளுகிறார்கள்.
பிரகாரத்தில், நின்ற கோலத்தில் “வீணை வித்யாம்பிகை” என்ற பெயரில் சரசுவதியும், தெட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் “கடம்பவன தட்சிண ரூபிணி” என்ற பெயரிலும் அருளுகிறார்கள். கல்வியில் சிறந்து விளங்க வியாழக்கிழமைகளில் இவர்களுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்கிறார்கள். தெட்சிணாமூர்த்தியை, பெண் வடிவில் இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.
சிதம்பரத்தில் இரண்டு முக்கியமான ஆலயங்கள் உள்ளன. அனைவரும் அறிந்தது சிதம்பரம் தில்லை நடராசர் ஆலயமே. ஆனால் அந்த தில்லை நடராசர் ஆலயத்துக்குச் செல்பவர்கள், அந்த ஆலயத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள தில்லைக் காளியம்மனையும் தரிசிக்காமல் வந்தால் தில்லை நடராசரை தரிசித்த பலன் கிடைக்காது என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
முதல் மண்டபமான தியான மண்டபத்தின் இரண்டு பக்கங்களிலும் அலுவலக அறைகள் உள்ளன. தியான மண்டபத்தில் பக்தர்கள் நெய் விளக்குகளை ஏற்றி தேவிகளை ஆராதிக்க விளக்கு பீடமும் வைக்கப்பட்டு உள்ளது. அடுத்த மண்டபத்தில் உள்ள சன்னதிகளில் நாம் காணுவது கிழக்கு நோக்கி தனி சன்னதியில் அமர்ந்து உள்ள தில்லைக்காளி அம்மனும், மேற்கு நோக்கி அமர்ந்து உள்ள பிரும்ம சாமுண்டியும் ஆவர்கள். அவர்கள் அங்கு அமர்ந்தவாறு பக்தர்களைக் காத்துக்கொண்டு உள்ளனர். அந்த மண்டப நுழை வாயிலில் இருபுறமும் பிரும்மாண்டமான காவல் தேவதைகள் நின்று கொண்டு உள்ளார்கள். சுவற்றில் சில கல்வெட்டுக் குறிப்புகள் காணப்படுகின்றன.
சிதம்பர ஆலயத்தில் இருந்து இடதுபுறமாகச் சென்று முதலில் வரும் இடது திருப்பத்தில் திரும்பி நேராகச் சென்றால் அந்த சாலையின் இறுதியில் தில்லைக் காளியம்மன் ஆலயம் உள்ளது. அது மட்டும் அல்ல. அந்த தில்லைக் காளியம்மன் வரக் காரணமாக இருந்த இரண்டு முனிவர்களான ‘ஆனந்தீஸ்வரர்” மற்றும் “இளமையாக்கினார்” போன்றவர்களின் சமாதிகளும் அந்த ஊரில் எங்கோ உள்ளது என்றும், அங்கும் போய் அவர்களை தரிசிப்பது இன்னும் விசேடம் என்று கூறுகிறார்கள்.
தில்லைக் காளியம்மனுக்கு வெள்ளைப் புடவையை மட்டுமே சாத்துகிறார்கள். தினமும் அவளுக்கு நல்லெண்ணெய் அபிசேகம் மட்டுமே நடைபெறுகின்றது. காளி சாந்தம் அடையக்கூடாது என்பதற்காக வெம்மை தரும் எண்ணையான நல்லெண்ணை மட்டுமே உபயோகிக்கின்றார்கள். உடல் முழுவதும் மஞ்சளினால் ஆன குங்குமம் கொட்டப்பட்டு (அதைக் காப்பிடுதல் என்று கூறுகிறார்கள்) வெள்ளைப் புடவை அணிவிக்கப்பட்டுள்ளது. கண்கள் மட்டும் ஜொலிக்கும் வகையில் வெள்ளை நிறத்தில் காட்சி தருகின்றது. தில்லைக் காளியை அந்த கோலத்தில் மட்டுமே தரிசிக்க முடிந்தது.
அவள் சன்னதிக்குப் பக்கத்திலேயே அவளை ஆராதித்து தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள விளக்கு பீடமும் வைக்கப்பட்டு உள்ளது. அந்த சன்னதியில் தில்லைக் காளியை தரிசிப்பவர்கள் கண்டிப்பாக அவளின் உக்ரமான கண்களை உற்று நோக்கி அவளை வேண்டிக் கொண்டால்தான் பலன் உண்டு என்கின்றனர்.
ஆனால் அதற்கு மாறாக, பிரும்ம சாமுண்டிக்கோ அனைத்து விதமான அலங்காரங்களும் செய்யப்பட்டு தேன், பால், போன்ற அபிஷேகங்களும் செய்யப் படுகின்றன.
அவள் சன்னதிக்கு பக்கத்தில் சுமார் ஆறு அல்லது ஐந்து அடி உயரமும் நான்கு அல்லது ஐந்து அடி சுற்றளவும் கொண்ட மிகப் பெரிய நாகதேவர் சிலை உள்ளது. காளியை வணங்கியப் பின் அவரையும் வணங்க வேண்டும். அதன் பக்கத்திலேயே போர் வீரர்கள் தமது தலைகளை வெட்டிக் கொண்டு பலி தந்தக் காட்சியைக் காணலாம்.
மேலும் அந்த சன்னதிக்குள் அனைத்து பகுதிகளிலும் பைரவர், துர்க்கை, சண்டிகேசுவரர் போன்றவர்களும் காட்சி தருகிறார்கள்.
கல்வியில் சிறந்து விளங்க, வியாழக்கிழமைகளில் இவர்களுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்கிறார்கள். தெட்சிணாமூர்த்தியைப் பெண் வடிவில் இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.
திருவிழா:
நவராத்திரி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மகம் நட்சத்திரத்திற்கு இவள் அதிதேவதை என்பதால், அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற இவளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை ராகு காலம், பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் இவளுக்கு சிறப்பு பூசை நடக்கும்.
பக்தர்கள் இவளுக்கு நல்லெண்ணெய் அபிசேகம் செய்து, வெள்ளை ஆடை அணிவித்து, குங்கும அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.
வழிகாட்டி:
சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் வழியில் ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.
very good one
Thankx