அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில், படவேடு

அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில், படவேடு, திருவண்ணாமலை மாவட்டம்.

+04181 248 224, 248 424 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.40 பகல் 1மணி, மாலை 3 இரவு 8.30 மணி வரை வெள்ளி, ஞாயிறு மற்றும் விசேட நாட்களில் தரிசன நேரம் மாறுபடும்.

மூலவர் ரேணுகாம்பாள்
தல விருட்சம் மாமரம்
தீர்த்தம் கமண்டலநதி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் படவேடு
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

ரேணுகாதேவி இரைவத மகாராஜனின் மகளாக பிறந்து ஜமதக்னி முனிவரை மணம் முடித்து பரசுராமரைப் பெற்றெடுக்கிறாள். கற்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவள். கணவரது பூஜைக்கு தனது சக்தியை பயன்படுத்தி, தினமும் ஆற்றுமணலில் செய்த புது பானையால் கமண்டலநதியிலிருந்து தண்ணீர் கொண்டு செல்வது வழக்கம். ஒருமுறை வான்வெளியில் சென்ற கந்தர் வனின் அழகைக் கண்டு ஆச்சரியப்பட்டதால், சக்தியிழந்து ஆற்று மணலில் குடம் செய்ய முடியாமல் போனது. தன் மனைவியின் கற்புத்திறன் மீது சந்தேகம் கொண்ட, ஜமதக்னி முனிவர், தன் மகன் பரசுராமரிடம், தாயைக் கொல்லும்படி ஆணையிட்டார். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதற்கேற்ப பரசுராமரும் தாய் ரேணுகா தேவியை வெட்டினார்.

இருந்தாலும், தந்தையிடம் மன்றாடி தன் தாயை உயிர் பிழைக்க வைத்தார். ஆனால், வெட்டப்பட்ட ரேணுகாதேவியின் தலை, வேறு பெண்ணின் உடலோடு சேர்ந்துவிட்டது. இதற்கிடையில் ஜமதக்னி முனிவர் இறந்துவிட, உயிர்வாழ விருப்பமில்லாத ரேணுகாதேவி கணவருடன் தீயில் விழுந்தாள். அப்போது மழை பெய்ததால் தீ அணைந்து, உடலில் கொப் புளங்கள் ஏற்பட்டன. உடை அணிய முடியாமல் போனதால், வேப்பிலையை ஆடையாக அணிந்தாள். அத்துடன் சிவனைக்குறித்து தவமிருந்து, தனது தலை மட்டும் இந்த பூமியில் இருக்கட்டும், பாழும் உடல் வேண்டாம் என்ற வரத்தைப் பெற்றாள். அதன்படி இத்தலத்தில் சுயம்புமூர்த்தியாக தலையை மட்டும் பிரதானமாகக் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

பொதுவாக அம்மன் தலங்களில் குங்குமம் தான் பிரசாதமாக தரப்படும். ஆனால் இங்கு மட்டும் வித்தியாசமாக மண் பிரசாதமாகத் தரப்படுகிறது. இத்தலத்தில் தரப்படும் மண் விசேசமானது. தானாகத் தோன்றியாதாகும். பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும். இந்த மண் இத்தலத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள ஜமதக்னி முனிவர் (அதாவது ரேணுகாதேவியின் கணவர்)வாழ்ந்ததாக கருதப்படும் ஆசிரமத்தில், அவர் யாகம் செய்த இடத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.

வருடாவருடம்ஆனித்திருமஞ்சனம் அன்று அந்த இடத்தில் பூமியில் பூத்திருக்கும் மண்ணை வெட்டி எடுத்து வந்து பக்தர்களுக்கு தருகிறார்கள்.

கருவறைச் சிறப்பு :

அத்திமரத்தால் ஆன அம்மனின் முழு உருவமும், அதன் கீழ் சுயம்புவாக தோன்றிய அம்மனும், அம்மனின் இடப்பக்கம் ரேணுகாதேவியின் சிரசும் உள்ளது. இத்திருக்கோயிலின் கருவறையில் அன்னை ரேணுகாதேவி(சிரசு மட்டும்) சுயம்பு உருவமாகவும், பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அரூபங்களாகவும் உள்ளனர். மேலும், ஆதிசங்கரர் பிரதிட்டை செய்த பாணலிங்கமும், சிலாசிரசும், சுதையிலான அம்மனின் முழுத்திருவுருவமும் கருவறையில் அமையப் பெற்றுள்ளது.

மும்மூர்த்திகளுடன் எழுந்தருளியுள்ள அன்னை ரேணுகாதேவியை வழிபட, மும்மூர்த்திகளையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் உண்டு. பரசுராமரின் சிலையும் கருவறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞானியர் பலர் தவமிருந்து சித்திகள் பல பெற்றது இத்திருத்தலத்தில்தான். தொண்டை மண்டலத்து சக்தி தலங்களில் இத்தலம் முக்கியமான ஒன்றாகும். ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாம்பாளுக்கும் பிறந்த பரசுராமர் அவதரித்த தலம் இது. பரசுராம சேத்திரம் என்று இத்தலத்துக்கு பெயர்.

இக்கோயில் அம்மன் கோயில் என்றாலும் சுற்றுச் சுவர்களில் சிங்க வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதில் இங்கு பசு உள்ளது.

பொதுவாக அம்மன் சந்நிதிகளில் பலிபீடம் முன்பு யாழி அல்லது சிங்கம் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் எருது உள்ளது. கணபதி முனிவர் இங்கு யாகம் செய்துள்ளார். அவர்தான் அம்பாளின் சிறப்பை வெளிக்கொணர்ந்தவர். அழகிய சிற்பங்கள் உள்ள அற்புதமான கோயில் இது.

பிணி, வயிற்றுவலி ஆகியவை குணமடையவும் குழந்தைவரம் கிடைக்கவும் இந்த மண்ணை தண்ணீரில் கலந்து பக்தர்கள் அருந்துகிறார்கள். இவ்வாறு அருந்திய சிலதினங்களில் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

திருவிழா:

ஆடி மாதம் ஏழு வெள்ளிக் கிழமைகளும் இத்தலத்தில் மிகவும் விசேசமாக இருக்கும். இந்த விசேச நாட்களின் போது மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து அம்மனை வழிபடுகிறார்கள்.

புரட்டாசி மாதம் நவராத்திரி கொலு ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பின் போதும் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இருக்கும்.

மார்கழி பூசை, தைமாதம் வெள்ளிக்கிழமைகள் ஆகியவை இத்தலத்தில் சிறப்பான விழா நாட்கள் ஆகும்.

வருடத்தின் மிக முக்கிய விசேச நாட்களான தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு தினங்கள், தீபாவளி, பொங்கல் ஆகிய தினங்களிலும் கோயிலில் சுவாமிக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

அம்மை கண்டவர்கள் இத்தலத்தில் வந்து வேண்டிக் கொள்கின்றனர். விரதமிருந்து இத்தலத்துக்கு வந்து தங்கி அம்மனுக்கு சேவை செய்து வந்து அதிக பட்சம் 3 அல்லது 5 நாட்களுக்குள் அம்மை இறங்கி விடுகிறது. தலத்தில் தரும் தீர்த்தத்தை உடல் மேல் தெளித்துக் கொள்கின்றனர்.

வேப்பிலை தண்ணீரை தீர்த்தமாக வாங்கிக் குடித்துவிட்டு அம்மனை வணங்கிச் செல்கிறார்கள். மேலும் திருமண வரம், குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொள்கின்றனர்.

எந்த வகை நோயானாலும் இங்கு வந்து வழிபட்டால் அம்மனின் அருளால் உடனே குணமடைவதாக இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் பரவசத்துடன் கூறுகின்றனர்.

குறிப்பாக கண் நோய், கண்பார்வை இல்லாதவர்கள் இங்கு வந்து அம்மனை வழிபடுகின்றனர்.

பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் நேர்த்திகடன்களாக எடைக்கு எடை நாணயம் செலுத்துகிறார்கள்(துலாபாரம்); நெய்தீபம் ஏற்றுகின்றனர். சிலை கண்ணடக்கம், உருவ வகையறா, மற்றும் புடவை ஆகியவற்றையும் செலுத்துகிறார்கள். வேப்பிலையை மட்டும் உடையாக உடுத்திக் கொண்டு கோயிலை வலம் வருதல், அங்கபிரதட்சணம் செய்தல், மொட்டை அடித்தல், காதுகுத்தல், தொட்டில் கட்டுதல், ஆடு மாடு கோழி காணிக்கை செலுத்தல் ஆகியவை இத்தலத்தில் பக்தர்கள் செலுத்தும் முக்கியமான நேர்த்திகடன்களாகும். முகத்தில் உள்ள மருக்கள், பருக்கள் ஆகியன நீங்குவதற்காக வெல்லம் மிளகு ஆகியவற்றை செலுத்துகிறார்கள். குழந்தை வரம் வேண்டுவோர் பரசுராமருக்குத் தொட்டில் கட்டுகின்றனர். கோடிதீபம் ஏற்றுதல் இத்தலத்தில் மிகவும் சிறப்புடையது. தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.

வழிகாட்டி:

திருவண்ணாமலையிலிருந்து வேலூர் செல்லும் வழியில் 49வது கி.மீ.,யில் உள்ள சந்தவாசலில் இறங்கி, அங்கிருந்து மேற்கே 8 கி.மீ. தூரம் சென்றால் படவேடு செல்லலாம். வேலூரிலிருந்தும், திருவண்ணாமலையிலிருந்தும் பேருந்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *