அருள்மிகு ராமலிங்க சவுடேசுவரி அம்மன் திருக்கோயில், தாசப்பக்கவுடர் புதூர்
அருள்மிகு ராமலிங்க சவுடேசுவரி அம்மன் திருக்கோயில், தாசப்பக்கவுடர் புதூர், ஈரோடு மாவட்டம்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ராமலிங்க சவுடேசுவரி |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன்பு |
ஊர் | – | தாசப்பக்கவுடர்புதூர் |
மாவட்டம் | – | ஈரோடு |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஆதிகாலத்தில் தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் அனைவரும் ஆடையின்றி அவதிக்குள்ளாகினார்கள். எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஈசனிடம் சென்று முறையிட்டனர். அவர்களுக்கு அருளத் திருவுளம் கொண்ட சிவபெருமானும், தன் அங்கத்திலிருந்து தேவல முனிவரைத் தோற்றுவித்து,”திருமாலின் உந்தித்தாமரை நூலை வாங்கி வந்து, இவர்களுக்கு ஆடை தயார் செய்து கொடு” என்று பணித்தாராம். அதன்படியே தேவல முனிவர், திருமாலைத் தரிசித்து உந்தித்தாமரை நூல் பெற்றுத் திரும்பும் வழியில் அசுரர்கள் அவரைப் பிடித்து துன்புறுத்தினர். அவர், அம்பிகையைப் பிரார்த்தித்து அபயக்குரல் எழுப்பினார். அக்கணமே சிம்மவாகினியாகத் தோன்றிய அம்பிகை, அசுரர்களை வதம் செய்தாளாம். அப்படிப் போரிடும்போது அசுரர்களின் ரத்தத் துளிகளிலிருந்து புதிது புதிதாக அசுரர்கள் உயிர் பெற்றனர். ஆகவே அம்பிகை, சிந்தும் ரத்தத்தைப் பருகும்படி சிம்மத்துக்குக் கட்டளையிட்டாள். சிம்மமும் அப்படியே செய்தது. ஆனாலும் போரின் இறுதியில், சிம்ம வாகனத்தின் காது மடல்களில் இருந்த ரத்தத் துளிகள், அசுரகுணம் நீங்கி மனிதர்களாக உருப்பெற்றன. அவர்களை தேவல முனிவருக்கு உதவியாக இருக்கும்படி ஆணையிட்டு சென்றாளாம் அம்பிகை. தேவல முனிவரும் உந்தித்தாமரை நூலினால் அனைவருக்கும் ஆடைகள் நெய்து கொடுத்தார்.
இவரின் வழிவந்தவர்களே, ராமலிங்க சவுடேசுவரி அம்மனை வழிபடும் தேவாங்க சமூகத்தினர் (சிவபெருமானின் அங்கத்திலிருந்து உருவானவர்கள் தேவாங்கர்) எனவும், இவர்களின் நெசவுத் தொழிலுக்கு உதவியாக இருப்பவர்கள் சிங்குதாரர்கள் எனவும் இக்கோயிலின் தலவரலாறு சொல்கிறது.
தைப்பொங்கல் விழாவின் ஓர் அங்கமாக அன்று காலை கோயிலுக்கு மேற்கே இருக்கும் கிணற்றடிக்குச் சென்று அம்மனை அழைத்து வரும் வைபவம் நடைபெறும். அப்போது,”சக்தி, சாமுண்டி, ஜோதியம்மா” எனும் முழக்கத்துடன் அம்மன் ஊர்வலம் நகர, ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் வேண்டிக்கொண்ட இளைஞர்கள், தங்கள் கைகளிலும் மார்பிலுமாக கத்தியால்கிழித்தபடி, நெசவாளர்கள் உருவான கதையைப் பாடலாக பாடியபடியே அம்மனை அழைத்து வருவார்கள்.
திருவிழா: தைப்பொங்கல்
திருமணத்தடை அகலவும், குழந்தைப்பேறு கிடைக்கவும், நெசவாளர்களின் வாழ்வைக் காக்கவும் இங்குள்ள சவுடேசுவரி அம்மனை வழிபாடு செய்கின்றனர்.
அம்மனுக்கு அபிசேகம் செய்தும், புடவை சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply