அருள்மிகு நல்ல மாரியம்மன் திருக்கோயில், தொழுதூர்
அருள்மிகு நல்ல மாரியம்மன் திருக்கோயில், தொழுதூர்– 612 804, திருவாரூர் மாவட்டம்.
***************************************************************************************************
+91- 94443 54461, +91- 94437 45732 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | நல்ல மாரியம்மன் | |
பழமை | 500-1000 வருடங்களுக்கு முன்பு | |
ஊர் | தொழுதூர் | |
மாவட்டம் | திருவாரூர் | |
மாநிலம் | தமிழ்நாடு |
சமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா. இவர்களது மகன் பரசுராமன். ரேணுகாதேவி தன் கற்பின் வலிமையால், ஆற்றங்கரையில் இருக்கும் ஈர மணலில் குயவர்கள் செய்வது போல் குடம் செய்து அதில் தண்ணீர் எடுத்துக் கொண்டு தங்கள் ஆசிரமத்து பூசைக்காக கொண்டு செல்வாள்.
பச்சை மணலில் குடம் செய்வதே கடினம். அது காயவேண்டும். அப்புறம் அதில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு போவதென்பது முடியாத ஒன்று. இதைச் சாதிக்கும் அளவுக்குக் கற்புத்திறமுடையவள் அவள்.
ஒருநாள் வானத்தில் அழகே வடிவான கந்தர்வன் ஒருவன் தன் தேரில் சென்று கொண்டிருந்தான். அவனது உருவம் தண்ணீரில் தெரிந்தது. ஏறிட்டுப் பார்த்த ரேணுகா,”உலகத்தில் இவ்வளவு அழகானவர்களும் இருப்பார்களா?” என சாதரணமாகத்தான் நினைத்தாள். இதனால் அவளது மனம் களங்கப்பட்டு விடவில்லை. இருப்பினும், அவள் அன்று செய்த குடம் உடைந்து விட்டது. வெறுங்கையுடன் ஆசிரமம் திரும்பிய ரேணுகாவின் நிலையை சமதக்னி முனிவர் தன் ஞானக்கண்ணால் கண்டு அறிந்து கொண்டார்.
தன் மனைவியின் கற்புத்திறன் களங்கப்பட்டு விட்டதாகக் குற்றம் சாட்டி, தன் மகன் பரசுராமனை அழைத்து அவளை வெட்டித் தள்ளும்படி உத்தரவிட்டார். தந்தை சொல்லை மதித்த அவன் அவ்வாறே செய்து விட்டுக் கதறி அழுதான்.
சமதக்னி முனிவர் மகிழ்ச்சியுடன்,”உன் சகோதரர்கள் என் சொல் கேளாமல் தாயை வெட்ட மறுத்து விட்டனர். நீ என் சொல்லைக் கேட்டாய். எனவே, ஏதாவது வரம் கேள்,” என்றார். பரசுராமர் தன் தாயின் உயிரைத் திரும்பக் கேட்டார்.
சமதக்னியும் அவளுக்கு உயிர் கொடுத்து, அவளோடு தொடர்ந்து வாழ முடியாதெனக் கூறி, அவள் தனக்கு தினமும் தண்ணீர் எடுத்து வந்து உதவியதால்,”மாரியம்மன்” என்ற பெயரில் மக்களுக்கும் நல்ல நீர் கொடுக்கும் அம்பிகையாக விளங்க அருள் பாலித்தார்.
அவள் தினமும் குடம் செய்து தண்ணீர் எடுத்து வந்தமையால் குயவர்களின் குல தெய்வமாகவும் ஆனாள். தொழுதூர் கிராம வேளார் மக்கள் அம்பிகையை தங்கள் தெய்வமாக ஏற்று வழிபட்டு வருகின்றனர்.
நல்ல மாரியம்மன் மூலவராக உள்ள இக்கோயிலில் தேவியருடன் கழுவுடையான், பெரியாச்சி, முனீசுவரர், பொம்மி, வெள்ளையம்மாளுடன் மதுரை வீரன், காத்தவராயன், கருப்பழகி, ஆரியமாலா, தொட்டியத்து சின்னான் ஆகிய காவல் தெய்வங்களும் உள்ளனர்.
சித்ரா பவுர்ணமிக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமையில் துவங்கி 18 நாட்கள் விழா நடத்தப்படும். தேரோட்டமும் உண்டு.
கண்நோய் உள்ளவர்கள், குறிப்பாகக் கண்களில் பூ விழுந்து கண்ணின் அழகு கெட்டவர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபடுகின்றனர். நந்தியாவட்டைப் பூ மூலம் இதற்காக கோயிலில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க வேண்டுகின்றனர்.
கோரிக்கை நிறைவேறியதும் மாவிளக்கு ஏற்றுதல், அலகு குத்துதல் ஆகிய நேர்த்திக்கடன் செய்கிறார்கள்.
Leave a Reply