அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், கீழ்கொடுங்கலூர், வந்தவாசி

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் கீழ்கொடுங்கலூர், வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம்.
**********************************************************************************************************

+91- 4183-242 406 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – முத்துமாரியம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – கீழ்கொடுங்கலூர்

ஊர்: – வந்தவாசி

மாவட்டம்: – திருவண்ணாமலை

மாநிலம்: – தமிழ்நாடு

சமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவி. இவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகள். கடைசிமகன் பரசுராமன். பரசுராமரின் அன்னை ரேணுகாதேவியின் கோயில்களில் இதுவும் ஒன்று. கற்பில் சிறந்தவளான ரேணுகாதேவி பச்சைமண்ணால் செய்யப்பட்ட குடத்தில் தண்ணீர் ஏந்தி தனது ஆசிரமத்திற்கு கொண்டு வருவாள். அவளது கற்பின் சக்தியால் இது முடிந்தது.

ஒருமுறை வானத்தில் கந்தர்வன் ஒருவன் சென்றுகொண்டிருந்தான். அவனது நிழல் ஆற்றில் தெரிந்தது. அதைப்பார்த்ததும் என்ன காரணத்தாலோ அவளது மனம் சலனப்பட்டது. ஆயினும் மனதில் விரசம் எதுவும் இல்லாமல்,”இப்படியும் ஆணழகர்கள் உலகத்தில் இருக்கிறார்களா?” என்று மட்டுமே எண்ணினாள். அந்த மாத்திரத்திலேயே அவள் கையிலிருந்த குடம் உடைந்துவிட்டது.

சமதக்னி முனிவரின் ஞானக் கண்ணில் இது தெரிந்தது. இனி தன் மனைவியின் கற்பை பிறர் குறை கூறுவார்களே என்ற அச்சத்தில் மகன்களை அழைத்து தாயை வெட்டிவிடும்படி சொன்னார். மற்ற மகன்கள் மறுக்க, பரசுராமன் தந்தை சொல் மிக்க மந்திரமில்லைஎன் எண்ணி அந்தக் காரியத்தை செய்துமுடித்தார். அவரை சமதக்னி பாராட்டினார். என்ன வரம் வேண்டுமென கேட் டார். தன் தாயின் உயிரே திரும்பவும் வேண்டுமென பரசுராமர் கேட்டார்.

உடலில் உன் தாயின் தலையை பொருத்தி, இக் கமண்டலத்திலுள்ள நீரைத் தெளித்து உன் தாயை உயிர்பெறச் செய்என சமதக்னி கூறிவிட்டார். பரசுராமர், பதட்டத்தில் வேறு ஒரு பெண்ணின் உடலில் தன் தாயின் தலையை பொருத்திவிட்டார். அப்பெண் உயிர் பெற்று எழுந்தாள்.

இதையெல்லாம் அந்த கந்தர்வன் கவனித்தான். தன்னைப் பார்த்தாள் என்ற ஒரே காரணத்துக்காக சற்றுகூட இரக்கமில்லாமல் தன் மனைவியை கொலை செய்த சமதக்னி முனிவரை அவன் கொன்றுவிட்டான். உயிர் பெற்று எழுந்த ரேணுகா கணவரின் சிதையில் விழுந்தாள்.

இரண்டு புண்ணிய ஆத்மாக்கள் நியாயமற்ற முறையில் இறந்து எரிந்ததால் தேவலோகத்திற்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலைமை உருவானது. எனவே இந்திரன் வருணனை வரவழைத்து மழைபெய்து சிதைத் தீயை அணைக்கும்படி கூறினான். வருணனும் அவ்வாறே செய்ய, பாதி எரிந்த நிலையில் அப்பெண் எழுந்தாள். அவளது உடலில் ஆடைகள் இல்லை. அனைத்தும் எரிந்துபோயிருந்தன.

பதட்டத்துடன் அங்கு நின்ற வேப்பமர இலைகளைப் பறித்து, அவற்றால் உடலை மறைத்துக் கொண்டாள். உடலைத் தீப்புண் சுட்டதால் மஞ்சள் நீரை வாரி ஊற்றிக் கொண்டாள். உடலெங்கும் முத்து முத்தாகப் பொரிந்திருந்தது. முகம் மட்டும் பொலிவாக இருந்தது.

அந்நிலையில் தன் ஆற்றலால் உயிர் பெற்று எழுந்த சமதக்னி முனிவர் அவளை மாரிஎன்ற பெயரில் மழைதரும் தெய்வமாக இவ்வுலகில் அருளும்படி சொன்னார். அதன்படியே இன்றும் வேப்பிலை கட்டுதல், மஞ்சள் நீராட்டு ஆகியவை அம்மன் கோயில்களில் நடக்கிறது. உடலில்முத்து முத்தாக அம்மை ஏற்பட்டால் வேப்பிலையை அரைத்துப் பூசுகிறோம்.

திருவிழா: ஆடிவெள்ளி, நவராத்திரி.

இத்தல முத்து மாரியம்மனை வேண்டிக் கொண்டால் வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.

அத்துடன் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், திருமணத்தில் தடை உள்ளவர்களும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால் பலன் நிச்சயம் என்கிறார்கள்.

தாங்கள் வேண்டிய கோரிக்கை நிறைவேறியவுடன் வேப்பிலை ஆடை உடுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *