அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், உடுமலைப்பேட்டை
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், உடுமலைப்பேட்டை-642 126, கோயம்புத்தூர் மாவட்டம்.
*********************************************************************************************************
+91-4252- 224 755 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்: – உடும்புமலை, கரகிரி
ஊர்: – உடுமலைப்பேட்டை
மாநிலம்: – தமிழ்நாடு
பல்லாண்டுகளுக்கு முன்பு, பக்தர் ஒருவர் தாம் எங்கே செல்கிறோம் என்ற நினைவே இல்லாமல், தானாகவே வனப்பகுதிக்குள் சென்றார். நீண்ட தூரம் சென்ற அவர் ஓரிடத்தில் நினைவு திரும்பி நின்றபோது, அங்கே சுயம்பு வடிவில் அம்மன் இருந்ததைக் கண்டார்.
ஊருக்குத் திரும்பிய அவர் வனத்தில் அம்மனைக் கண்டதை மக்களிடம் கூறினார். அதன்பின், மக்கள் ஒன்று கூடி அம்மன் இருந்ததை வனத்தைச் சீரமைத்து கோயில் எழுப்பினர்.
பிரகாரத்தில் செல்வகணபதி, செல்வமுத்துக்குமரன், தலவிருட்சத்தின் அடியில் அட்டநாக தெய்வங்கள் உள்ளன.
பெயர்க்காரணம்:
அரைச்சக்கரவடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலை அமைந்திருந்ததால் “சக்கரபுரி” என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் “உடும்புமலை” என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர் காலப்போக்கில் உடுமலைப்பேட்டை என்று மருவியது.
கோயில் மூன்று நிலை ராஜ கோபுரத்துடன் அமைந்துள்ளது. தல விநாயகரின் திருநாமம் சக்தி விநாயகர்.
இத்தல மாரியம்மன் பக்தர்களின் மனக்குறைகளை தீர்க்கும் அம்மனாக அருள்பாலிக்கிறார்.
மாங்கல்ய மாரியம்மன்:
இக்கோயிலில், வருடந்தோறும் மார்கழி திருவாதிரையில், 108 தம்பதியர்களை வைத்து “மாங்கல்ய பூசை” நடத்தப்படுகிறது. இப்பூசையில், அம்மனுக்கு மாங்கல்யம் சாத்தி சிறப்பு யாகங்கள், பூசைகள் நடத்தி, பெண்களுக்கு தாலிக்கயிறு வழங்கப்படுகிறது.
பூசை செய்த தாலியைப் பெண்கள் அணிந்து கொள்வதால், அவர்கள் வாழ்வில் பிரச்னைகள் இன்றி, சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை.
திருவிழா: பங்குனி – சித்திரையில் 19 நாள். தீபாவளி, நவராத்திரி, திருக்கார்த்திகை, ஆடிவெள்ளி மற்றும் பவுர்ணமி.
கண்நோய், அம்மை நோய் தீர, திருமணத்தடை நீங்க, புத்திரதோசம், நாகதோசம் நீங்க வேண்டலாம்.
அம்பாளுக்கு அவல், தேங்காய் பூ, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்தும், பால்குடம், அக்னிசட்டி எடுத்தும், அங்கபிரதட்சணம், அன்னதானம் செய்தும், முடிகாணிக்கை செலுத்தியும் கைம்மாறு செய்கின்றனர்.
Leave a Reply