அருள்மிகு மலையாள பகவதி அம்மன் திருக்கோயில், கணக்கன்பாளையம்

அருள்மிகு மலையாள பகவதி அம்மன் திருக்கோயில், கணக்கன்பாளையம் – 638452,(கோபிசெட்டிபாளையம்), ஈரோடு மாவட்டம்.
********************************************************************************************

+91-4285-318 271, 94430 08679 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

 

மூலவர்: – மலையாள பகவதி

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – கணக்கன்பாளையம்

மாவட்டம்: – ஈரோடு

மாநிலம்: – தமிழ்நாடு

நூறு ஆண்டுகளுக்கு முன், கர்நாடக மாநிலத்தில் விளையும் மஞ்சளை விற்பதற்க்காக, ஒரு வியாபாரி மஞ்சள் மூட்டைகளை மாட்டு வண்டியில் ஏற்றி மலைப்பாதை வழியாக ஓட்டி வந்தார். அப்போது சமநிலையான பாரம் இல்லாததால் மாடு தடுமாறிச் சென்றது. இதனால் அதற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் ஏதேனும் பாறாங்கற்களை ஏற்றலாம் என நினைத்து மலைக்காட்டிற்குள் சென்றார் அந்த வியாபாரி.

அங்கு ஒரு கல் மினுமினுப்புடன் தென்பட்டது. அதனை எடுத்து மாட்டு வண்டியின் பொதியினுள் வைக்கப் பாரம் சரியானது. பின்னர் வியாபாரி வண்டியை சிரமமில்லாமல் ஓட்டி வந்தார். கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் மலையடிவாரப் பகுதிக்கு வந்ததும் மாட்டுவண்டி பொதியினுள் இருந்த மினுமினுப்பான கல் கீழே விழுந்துவிட்டது. ஆனால் வண்டியின் பாரத்தில் மாற்றம் எதுவும் தெரியாததால், வியாபாரி கல் கீழே விழுந்ததைக் கவனிக்கவில்லை.

கல் கீழே விழுந்த இடத்தில் சிறிது நாட்களிலேயே அதனை சுற்றி புற்று வளர்ந்துவிட்டது. மழைக்காலத்தில் ஈசல்கள் புற்றில் தோன்றியது. அதனை சாப்பிடுவதற்காக மலையடிவாரத்தில் வசிக்கும் வளையவன் என்பவன், அந்த புற்றை மண்வெட்டியால் வெட்ட, புற்றிலிருந்து ரத்தம் வடிந்தது.

அதை பார்த்த வளையவன் திடுக்கிட்டு அங்குள்ளவர்களிடம் விவரித்தான். பின்னர் அங்குள்ளவர்கள் ஒன்று திரண்டு அங்கு வந்தனர். வளையவன் காட்டிய புற்றில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அங்கே வந்தவர்களில் ஒருவருக்கு அருள் வந்து,”நான்தான் மலையாள பகவதி. இதே இடத்தில் வைத்துப் பூசை செய்யுங்கள். எல்லோருக்கும் பாதுகாவலாக இருப்பேன்என சொல்லிவிட்டு அருள் நின்றுவிட்டது.

உடனே ஊர் பெரியவர்கள் ஒன்றுகூடி அங்கு பச்சை பந்தல் அமைத்து அந்த தாய்க்குப் பூசை செய்ய ஆரம்பித்தனர்.

1915ல் கோயில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

ஈரோடு மாவட்டம் கணக்கன்பாளையத்தில் அருள்பாலிக்கும் மலையாள பகவதி அம்மன், நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் தெய்வமாக இருந்து, தீராத துன்பங்களைத் தீர்த்து வைக்கிறாள். பக்தர்களுக்கு வேண்டிய வரம் எல்லாம் கொடுத்து வருகிறாள். பக்திப் பரவசத்தோடும், பயபக்தியோடும் கும்பிடுவோருக்கும் பாசத்தோடு அருள்புரிந்து வருகிறாள்.

பூசைகள்:

காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி என தினமும் மூன்று முறை பூசைகள் செய்யப்படுகின்றன.

மாதம்தோறும் அமாவாசை அன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஆடி வெள்ளிகளில் அம்மனுக்கு சிறப்பு பூசையும், அலங்காரம், அபிசேக, ஆராதனைகளும், இரவில் கோயிலை சுற்றி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. பெண்கள் 108 திருவிளக்கு பூசையில் கலந்து கொண்டு பூஜித்து வருகின்றனர்

சரசுவதி பூஜையும், கார்த்திகை தீபத் திருவிழாவும், மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் சிறப்பு வழிபாடும் நடத்தப்படுகிறது. தை மாதம் பொங்கல் திருவிழாவும், அதனை முன்னிட்டு அம்பாள் திருவீதி உலாவும் நடக்கிறது. ஒவ்வொரு பங்குனி மாதம் முதல் வியாழன் அன்று கோயில் திருவிழா துவங்கப்படுகிறது. அன்றைய தினம் பூச்சாட்டுதலும், அதற்கு முன்பாக தீர்த்தக்குட உற்சவமும், பச்சை பூசை விழாவும், வியாழன் அன்று காலை அம்மை அழைத்தலும், பத்து மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குதல்(தீ மிதித்தல்) நிகழ்ச்சியும் விமரிசையாக நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து அம்பாள் கோயிலில் இருந்து மலர்ப் பல்லக்கில் எழுந்தருளி மஞ்சள் நீர் உற்வமும் நடப்பது வழக்கம்.

பக்தர்கள் தங்கள் நோயினை போக்க இக்கோயிலில் தொடர்ந்து 12 நாட்கள் தங்கி நந்தா தீபம் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

எந்த நோயாக இருந்தாலும் இந்த அம்பாளை மனதில் நினைத்து கோயிலை சுற்றியுள்ள இலைதழைகளை பறித்துத் தன் உடம்பில் பூசிக்கொண்டால் அந்த நோய் வெப்பத்தை கண்ட பனிபோல நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

அம்மனுக்கு முழுக்காட்டு செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

One Response to அருள்மிகு மலையாள பகவதி அம்மன் திருக்கோயில், கணக்கன்பாளையம்

  1. P.Karthikeyan says:

    My native place kanakkampalayam pudur. I am working in CRI PUMPS coimbatore. My contact number : 9865657373

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *