அருள்மிகு லலித செல்வாம்பிகை(செல்லப்பிராட்டி) அம்மன் கோயில், செஞ்சி

அருள்மிகு லலித செல்வாம்பிகை(செல்லப்பிராட்டி) அம்மன் கோயில், செஞ்சி
************************************************************************************

+94440 67172 (மாற்றங்களுக்குட்பட்டது)

திறக்கும் நேரம்: காலை 6 – 11 மணி, மாலை 4 – 8.30 மணி.

துர்க்கை, இலட்சுமி, சரசுவதி ஆகிய முப்பெரும் தேவியரும் தனித்தனியாகவும், ஒரு சில இடங்களில் சேர்ந்தும் அருள்பாலிக்கும் கோயில்கள் சில உண்டு. ஆனால், ஒரே விக்ரகத்தில் மூன்று தேவியரின் அம்சங்களும் இணைந்திருப்பதைத் தரிசிக்க வேண்டுமானால் செஞ்சி செல்லப்பிராட்டி லலித செல்வாம்பிகை அம்மன் கோயிலுக்கு செல்ல வேண்டும். ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இந்த அம்மனை வழிபடுவது சிறப்பு.

தல வரலாறு:

தசரதர் குழந்தை பாக்கியம் வேண்டி புத்திர காமேட்டி யாகம் நடத்தினார். யாகத்தின் பலனாக ராமபிரான் அவதரித்தார். இந்த யாகத்தை நடத்தி கொடுத்தவர் ரிசியசிருங்க முனிவர். இவர் காசியப முனிவரின் மகனான விபாண்டகருக்கு பிறந்தவர். இவரிடம் ஒரு கற்பலகை இருந்தது. அதில் தேவியின் பீசமந்திரங்கள் எழுதப்பட்டிருந்தது. இந்த பலகை ரிசியசிருங்கர் மூலம் இங்கு வந்துள்ளது. அதற்கு லலித செல்வாம்பிகை“ என்ற திருநாமம் சூட்டப்பட்டது. பிற்காலத்தில் கற்பலகையை பிரதிட்டை செய்து, கீழே அம்பாள் விக்ரகம் வைக்கப்பட்டுள்ளது. ஆதிசங்கரர் காஞ்சிக்கு செல்லும் போது, அவருக்கு இத்தல அம்மன் காட்சி கொடுத்து வழி கூறியதாக கூறப்படுகிறது. ரிசியசிருங்கரின் விக்ரகமும் இங்குள்ளது.

கற்பலகையின் வடிவமைப்பு:

மூலவராக வணங்கப்படும் அம்மன் கற்பலகை வடிவில் இருக்கிறாள்.
ஒரு காலத்தில், கற்பலகைகளில் மந்திரங்களை எழுதிக் கடவுளாக வழிபட்டனர். எனவே, இத்தலம் காலத்தால் மிகவும் பழமையானதாகக் கருதப்படுகிறது. கற்பலகை, 4 அடி உயரமும், செவ்வக வடிவமும் கொண்டது. பலகையில் 12 சதுரக்கட்டங்கள் உள்ளன. இந்தக் கட்டங்களைச் சுற்றி, உலக நாயகியான ஆதிபராசக்தியின் பீசாட்சர மந்திரத்தின் சூட்சும எழுத்துக்கள் உள்ளன. நடுவில் திரிசூலம் உள்ளது. வலது மேல் பக்கத்தில் சூரியனும், இடது மேல் பக்கத்தில், சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளன. நடுநாயகமாக முப்பெரும் தேவியரின் அம்சங்களையும் ஒருங்கிணைத்து, அம்மனின் திருவுருவம் ஓவிய வடிவில் உள்ளது. ஆயினும், உருவ வழிபாடு கருதி, கற்பலகைக்கு கீழே 3 அடி உயரத்தில் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அம்பாளின் வடிவம்:

எட்டுக்கரங்கள், நெற்றியில் பிறைச்சந்திரன், ஐந்துதலை நாகம், சூலம் ஆகியவற்றுடன், இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டு தாமரை பீடத்தில் சாந்த சொரூபிணியாக அமர்ந்துள்ளாள். வலது திருக்கரம் பக்தர்களை காக்கும்படியும், இடது திருக்கரம் பாதத்தை நோக்கியபடியும் அமைந்துள்ளது. பின்கரங்களில்

சரசுவதிக்குரிய அட்சரமாலை மற்றும் கமண்டலம், இலட்சுமிக்குரிய சங்கு, சக்கரம், பார்வதிக்குரிய பாசம், அங்குசம் ஆகியவை உள்ளன. இந்த அம்மனை வழிபட்டால் துர்க்கை, இலட்சுமி, சரசுவதி ஆகிய முப்பெரும் தேவியரையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். மிகவும் பழமையான இத்தலத்தில் தியானம் செய்தால் ஓம்“ எனும் மந்திரம் நம் காதில் ஒலிப்பது போன்ற உணர்வு உண்டாகிறது.

சக்தி பீடங்கள்:

இக்கோயிலை சுற்றி எட்டு திசையிலும் எட்டு அம்மன் கோயில்கள் உள்ளன. வடக்கே காஞ்சிபுரம் காமாட்சி, வட கிழக்கே மயிலாப்பூர் கோலவிழி அம்மன், கிழக்கில் கடும்பாடி அம்மன், தென்கிழக்கே திருவக்கரை வக்கிரகாளி, தெற்கே சமயபுரம் மாரியம்மன், தென்மேற்கே செஞ்சி கமலக்கன்னி, மேற்கே மேல்மலையனூர் அங்காள பரமேசுவரி, வடமேற்கே படவேடு ரேணுகா பரமேசுவரி அருள்பாலிக்க, நடுநாயகமாக செல்வ லலிதாம்பிகை வீற்றிருக்கிறாள்.

கோயில் அமைப்பு:

ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தான விமானம் ஆகியவை சோழர் கால கட்டட அமைப்பை ஒத்துள்ளது. பிரகாரத்தில் சிவ சக்தி, விட்டுணு சக்தி, பிரம்ம சக்தி உள்ளனர். உள் மண்டபத்தில் மகா கணபதி, சுப்ரமணியர் சன்னதிகள் உள்ளன.

வழிகாட்டி:

விழுப்புரத்திலிருந்து 38 கி.மீ. தூரத்தில்உள்ள செஞ்சி சென்று, அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள செல்லப்பிராட்டி கூட்ரோட்டிற்கு ஆரணி பஸ்சில் செல்ல வேண்டும். கூட்ரோடு நிறுத்தத்தில் இருந்து அரை கி.மீ. நடந்தால் கோயிலை அடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *