அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்

அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில்,  கோயம்புத்தூர் *************************************************************************

+91-422- 2396821, 2390150 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – கோனியம்மன்

தல விருட்சம்: – வேம்பு, வில்வம், நாகலிங்கமரம், அரசமரம்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – கோயம்புத்தூர்

மாவட்டம்: – கோயம்புத்தூர்

மாநிலம்: – தமிழ்நாடு

கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் மரங்கள் அடர்ந்து நிறைந்த காடாக இருந்தது. இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான்.

ஒரு சமயம் அவன் ஆட்சி புரிந்த பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் வாழ வழியின்றி தவித்தனர். அவர்களின் நிலையைக் கண்ட கோவன், தனது ஆட்சியின் கீழ் வசிக்கும் மக்கள், வாழ்வில் நன்மைகள் பல பெற்று பஞ்சம், பிணிகள் ஏற்படாமல் சிறந்து வாழ்ந்திட வேண்டி வனப்பகுதியில் சிறு நிலத்தை சீரமைத்து அங்கு கல் ஒன்றினை வைத்து அம்மனாக எண்ணி வழிபடத் தொடங்கினான்.

அதன்பிறகு கொங்கு நாட்டு மக்கள் செழிப்புற்றுத் திகழ்ந்தனர். அதன்பின், இருளர்கள் அந்த அம்மனையே தங்களது குலதெய்வமாக எண்ணி கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர்.

இக்கோயில் கோவைக்கு வடக்கு திசையில் அமைந்தது. அம்பிகை காவல் தெய்வமாக நகரைக் காத்தாள்.

அவனது ஆட்சி முடிந்த பல்லாண்டுகளுக்குப்பின் இப்பகுதியை இளங்கோசர் என்பவர் ஆண்டு வந்தார். அப்போது சேரமன்னர் ஒருவர் படையெடுத்து வந்தார். அவரின் படையெடுப்பில் இருந்து நாட்டைக் காக்க கோவன்புத்தூரின் மையத்தில் ஓர் கோட்டையையும், மண்மேட்டையும் கட்டி, காப்புத்தெய்வமான அம்மனை அங்கு வைத்து வழிபட்டார். இவளே கோனியம்மனாக வழிபடப்படுகிறாள்.

சிவ அம்ச அம்பிகை:

கோவை நகரின் மூன்று கண்கள் போல விளங்கும் கோயில்களில் ஒன்றாக வீற்றிருந்து பராசக்தியின் ஓர் உருவாக கோனியம்மன் அருள்புரிகிறாள். கோனியம்மன் வடக்கு நோக்கி, எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், அக்னி, சக்கரம், மணி ஏந்தி காட்சியளிக்கிறாள். சிவனைப் போல, இடது காதில் தோடும், வலது காதில் குண்டலமும் அணிந்திருப்பது அபூர்வம். சிவமும், சக்தியும் வேறில்லை என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது. அம்பிகை சன்னதி எதிரே சிம்மவாகனம் உள்ளது. முன்மண்டபத்தில் சரசுவதி, இலக்குமி, துர்க்கை ஆகிய தேவியர் உள்ளனர்.

அம்மனுக்கு வலப்புறத்தில் தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் உள்ளன. பின் பகுதியில் ஆதி கோனியம்மன் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள ஆதிகோனியம்மன் சிலை மார்பளவு உள்ளது. அருகில் மாசாணியம்மன், சப்தகன்னியர் மற்றும் காவல் தெய்வங்கள் உள்ளனர். அரச மரத்தின் கீழ் பஞ்சமுக கணபதி பத்து கைகளுடன் காட்சி தருகிறார். சூரியன் ஏழு குதிரை பூட்டியரதத்தில் வீற்றிருக்கிறார். சாந்த விநாயகர், மாகாளியம்மன், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் சன்னதிகளும் உள்ளன.

இத்தலத்தில், தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் உள்ளது. கோவை நகரில் இங்கு மட்டுமே தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.

இத்தலத்தில் வேம்பு, வில்வம், நாகலிங்க மரம், அரசமரம் ஆகிய தேவமரங்கள் உள்ளன. இங்கு வேறு அம்மன் தலங்களில் இல்லாத சிறப்பாக ஆடி யில் 30 நாளும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

இன்று வரையிலும் இப் பகுதியில் வசிக்கும் மக்கள் தாங்கள் செய்யும் அனைத்து சுப காரியங் களுக்கும் முன்பு கோனியம்மனை வணங்கி உத்தரவு கேட்ட பின்பே தொடங்குகின்றனர்.

அக்னி திருமணம்:

மாசித்திருவிழாவின் போது சிவன், அம்பிகையைத் திருமணம் செய்து கொள்வார். அப்போது, கோயில் எதிரே யாககுண்டம் வளர்த்து, அக்னியை சிவனாகப் பாவித்து பூஜை செய்வர். பூஜையில் பயன்பட்ட தீர்த்த கலசத்தின் மேலே வைத்த மாங்கல்யத்தை அம்பிகைக்கு அணிவிப்பர். அக்னி வடிவ சிவன், அம்பிகையை திருமணம் செய்து கொள்வதாக ஐதீகம். மறுநாள் தேர்த்திருவிழா நடக்கும்.

திருவிழா:

ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விசேட பூசை உண்டு.

மாசியில் 14 நாள் திருவிழா நடக்கும். தமிழ்மாதப்பிறப்பு, பவுர்ணமி, ஆடி வெள்ளி, தை வெள்ளி, நவராத்திரி, திருக் கார்த்திகை, தனுர்மாத பூசை, தைப்பொங்கல், தீபாவளி ஆகிய நாட்களில் சிறப்பு பூசை உண்டு. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விசேட பூசை உண்டு. ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும்.

நோய் நீங்கவும், மாங்கல்ய பாக்கியத்திற்கும், தம்பதியர் ஒற்றுமைக்காகவும் வேண்டிக்கொள்கின்றனர்.

சனி, ராகு கேது மற்றும் குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தோட நிவர்த்திக்காகவும் இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.

இங்கு வேண்டிக் கொள்ள திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு கிட்டும், நோய்கள் நீங்கும், தொழில் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை. கோனியம்மனை வேண்டி தங்கள் வீட்டுப்பிள்ளைக்கு வரன் கிடைக்கப்பெற்றவர்கள் கோயிலிலேயே நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து, அதன் மேலே மஞ்சள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பூ வைக்கின்றனர். கோனியம்மன் சாட்சியாக திருமணத்தை உறுதி செய்கின்றனர்.

மாவிளக்கு, பொங்கல் காணிக்கை செய்கின்றனர். அம்மனுக்குப்புத்தாடை சாத்தி சிறப்பு அபிசேகம், அன்னதானம் செய்கின்றனர். துர்க்கைக்குப் பொட்டுத்தாலி செலுத்தி எலுமிச்சை தீபம் ஏற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *