அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், வீரபாண்டி

அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், வீரபாண்டி – 625 534 தேனி மாவட்டம்.
*******************************************************************************************
+91-4546-246242 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – கவுமாரியம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – வீரபாண்டி

மாவட்டம்: – தேனி

மாநிலம்: – தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் வைகை வனத்தில் அரக்கன் ஒருவன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மக்களுக்கும் மிகுந்த தொந்தரவு கொடுத்து வந்தான்.

அந்த அசுரனை அழிப்பதற்காக பராசக்தி இந்த வனத்திற்கு வந்து கண்ணீசுவரர் என்ற திருநாமத்துடன் ஒரு லிங்கத்தைப் பூசித்து தவம் இருந்தாள்.

அப்போது அசுரன் அன்னை பார்வதியை கடத்திச் செல்ல முயன்றான். இதனால் ஆத்திரம் அடைந்த பார்வதி அருகம்புல்லை எடுத்து அரக்கன் மீது வீச, அரக்கன் இரு துண்டுகளாகப் பிளந்து இறந்தான். இதனால் மகிழ்ந்த தேவர்கள் பார்வதியைக் கன்னித்தெய்வமாக்கி கவுமாரிஎனத் திருநாமம் சூட்டி வழிபட்டார்கள்.

தேனி மாவட்டம் வீரபாண்டியில் வீற்றிருக்கும் கவுமாரியம்மன் கன்னித்தெய்வமாக வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் தந்து ஆட்சிசெய்து வருகிறாள்.

கவுமாரியின் கருணை:

அன்னை பார்வதி வைகை வனத்தில் தவம் செய்த அதே காலத்தில், மதுரையை ஆண்ட வீரபாண்டிய மன்னனுக்கு ஊழ்வினையால் பார்வை பறி போனது. மன்னனும் இறைவனை மனமுருகி வேண்டினான். அவனது கனவில் தோன்றிய இறைவன்,”வைகைக்கரை ஓரத்தில் அன்னை பார்வதி கவுமாரி என்ற திருநாமத்துடன் தவம் இருக்கிறாள். அவளை வழிபட்டால், உனது விழிக்கு ஒளி கிடைக்கும்என்று கூறி மறைந்தார்.

இறைவனின் உத்தரவுப்படி வீரபாண்டியன் கவுமாரி அம்மனை உருகி வேண்டி ஒரு கண்ணின் ஒளியைப் பெற்றான். அதே போல் கவுமாரி அம்மன் வணங்கிய கண்ணீசுவரரை வணங்கி மறுகண்ணின் ஒளியையும் பெற்றான்.

கவுமாரியம்மன் கோயிலில் உள்ள கிணற்று நீரே அம்மனின் திருமுழுக்காட்டிற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நீரைத்தான் மக்கள் தீர்த்தமாக எடுத்துசெல்கிறார்கள்.

இருகண்களுக்கும் ஒளி பெற்ற வீரபாண்டியன் மன்னன் கவுமாரிக்கும், கண்ணீசுவரருக்கும் கோயில் கட்டினான்.

இதனால் இப்பகுதி வீரபாண்டி என அழைக்கப்பட்டது.

தினமும் அம்மன், சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. இது தவிர சித்திரை வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி விழா, தீபாவளி, கார்த்திகை, மார்கழி தனுர்பூசை, தைப்பொங்கல், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் மற்றும் மாதாந்திர பிரதோச காலங்களில் சிறப்பு பூசை செய்யப்படுகிறது. இந்தப் பூசையில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் பக்கத்து ஊர்களில் இருந்தும் வருகிறார்கள். ஆண்டு முழுவதும் பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றாலும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த விழாவின் போது கம்பம் நடுதல் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கவுமாரியம்மனையும், கண்ணீசுவரரையும் தரிசித்து செல்வார்கள்.

கன்னித்தெய்வமான கருமாரி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள். தூய உள்ளத்துடன் தன்னை வணங்குபவர்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளித்தந்து காத்து வருகிறாள்.கண் மற்றும் அம்மை சம்பந்தப்பட்ட நோய்களை தீர்ப்பதில் இத்தலம் மிகவும் புகழ்பெற்றதாகும்.

குழந்தை வரம் வேண்டுபவர்களும், தங்களுடைய நோய் தீர விரும்புபவர்களும் இங்குள்ள முல்லையாற்றில் நீராடி கவுமாரியம்மனையும், கண்ணீசுவரரையும் வழிபட்டு தங்கள் வேண்டுதல் நிறைவேற மனமுருகி வேண்டி பலனடைந்து செல்கிறார்கள்.இந்த கண்ணீசுவரர் சிவாயநமஎன நெஞ்சுருகி வழிபடுபவர்களுக்கு ஏற்படும் அபாயத்தைச் சடுதியில் நீக்கும் சர்வ வல்லமை பொருந்தியவர்.

தொடர்ந்து 8 நாள் நடைபெறும் இந்த விழாவில் இரவும், பகலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த திருவிழா நாட்களில் பால்குடம், காவடி, அக்னிச் சட்டி, மாவிளக்கு, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தி வழிபடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *