அருள்மிகு கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில், தாரமங்கலம்
அருள்மிகு கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில், தாரமங்கலம்– சேலம் மாவட்டம்.
***********************************************************************************************
+91- 4290 – 252 100 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர்: – மாரியம்மன், காளியம்மன்
தல விருட்சம்: – வேம்பு
தீர்த்தம்: – சஞ்சீவி தீர்த்தம்
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
ஊர்: – கண்ணனூர்
மாநிலம்: – தமிழ்நாடு
பல்லாண்டுகளுக்கு முன்பு, கேரளாவிலுள்ள கண்ணனூர் மாரியம்மனை, சில பக்தர்கள் ஒரு குதிரையில் வைத்து இவ்வழியே கொண்டு சென்றனர். அவர்கள் இத்தலத்திற்கு வந்தபோது இருட்டிவிடவே, ஓய்வெடுப்பதற்காக தங்கினர். அன்றிரவில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய மாரியம்மன், தன்னை அமர்த்தியிருக்கும் இடத்தின் அடியில் சுயம்பு வடிவில் இருப்பதாகவும், அந்த இடத்திலேயே கோயில் கட்டும்படியும் கூறினாள். அந்த பக்தர் கனவில் கண்டதை மக்களிடம் கூறினார்.
அதன்படி, அம்பாள் சிலை இருந்த இடத்தின் அடியில் தோண்டிப் பார்த்தனர். அவ்விடத்தில் அம்பாள் சிலை இருந்தது. அவளை, அங்கேயே வைத்து கோயில் கட்டினர்.
கண்ணனூரில் இருந்து அம்பாளை கொண்டு வந்தபோது கிடைக்கப்பெற்ற அம்மன் என்பதால் இவள், “கண்ணனூர் மாரியம்மன்” என்று அழைக்கப்பட்டாள். கண்ணனூரில் இருக்கும் மாரியம்மனின் அம்சத்தை இக்கோயிலில் காணலாம்.
தாரமங்கலத்தை சுற்றியிருக்கும் 18 பட்டிக்கும் இந்த அம்பாள் குலதெய்வமாக இருக்கிறாள்.
பிரகாரத்தில் விநாயகர் மற்றும் நாகர் சன்னதிகள் உள்ளன. இக் கோயில் கேரள கோயிலின் அமைப்பில் இருப்பது சிறப்பு. இங்கு அம்மனுக்கு நைவேத்யமாக சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.
இரட்டை அம்பாள்:
ஒரே பீடத்தில் வலது புறத்தில் மாரியம்மனும், இடது புறத்தில் காளியம்மனும் இருக்கின்றனர். ஒருசமயம் மாரியம்மனைத் தரிசிக்க வந்த பக்தர் ஒருவர், கோயிலிலேயே கண்ணயர்ந்தார்.
அப்போது, காளியம்மன் அவரது கனவில் தோன்றி, தன்னை மாரியம்மனுக்கு அருகில் பிரதிட்டை செய்ய வேண்டும் என்றாள். அதன்படி, காளியம்பாள் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளாள். இவர்களை அக்கா, தங்கை என இப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.
திருவிழா: ஆடித்திருவிழா, நவராத்திரி.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், அம்பாள் முன்னிலையில் தொட்டில் கட்டி, கோயில் முன்புள்ள சஞ்சீவி தீர்த்தத்தை தெளித்து, அருகிலிருக்கும் ஊஞ்சலை ஆட்டினால் குழந்தைச் செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பேச்சு குறையுள்ளவர்கள் அம்பாளுக்கு மணிகட்டி, மாவிளக்கு எடுத்தால் குணமாகும் என்கிறார்கள்.
குழந்தையில்லாத பெண்கள் அம்பாளிடம் வேண்டி குழந்தை பாக்கியம் பெற்றால், பூக்குழி இறங்குவதாக வேண்டிக் கொள்கிறார்கள். குழந்தை பிறந்ததும், ஆடித்திருவிழாவின் போது இந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். குழந்தையுடன் பூக்குழியில் இறங்கி, அதன் மத்தியில் நின்றுகொண்டே அம்பாளுக்குப் பூசை செய்த பாலைக் குழந்தைக்கு கொடுத்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இது பார்க்கப் பரவசமாக இருக்கும். இவ்வாறு, செய்வதால் அக் குழந்தை நீண்ட ஆயுளுடன், அம்பாளின் பாதுகாப்புடன் சிறப்பாக வாழும் என நம்புகின்றனர்.
Leave a Reply