அருள்மிகு சிங்கவரம் பெருமாள் திருக்கோயில், சிங்கவரம்

அருள்மிகு சிங்கவரம் பெருமாள் திருக்கோயில், சிங்கவரம், விழுப்புரம் மாவட்டம்.

+91- 94432 85923 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

அரங்கநாதர்

உற்சவர்

அரங்கநாதர்

தாயார்

அரங்க நாயகி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

சிங்கவரம்

மாவட்டம்

விழுப்புரம்

மாநிலம்

தமிழ்நாடு

இரணியகசிபு என்ற அசுர மன்னன் தன்னையே வணங்கவேண்டும் என்றும், பெருமாளை வணங்கக்கூடாது என்றும் நாட்டு மக்களுக்கு உத்தர விட்டான். இதை அனைவரும் பின்பற்றினர். ஆனால் அஞ்சா நெஞ்சம் படைத்த அவனது மகன் பிரகலாதன் இதற்கு மறுத்தான். பெற்ற பிள்ளை என்றும் பார்க்காமல் அவனைக் கொல்லப் பலவித வழிகளைக் கையாண்டான். இதனால் கோபம் கொண்ட பெருமாள் அசுரனை கொன்று பிரகலாதனை தன்னருகில் வைத்துக்கொண்டார். அசுர குலத்தில் பிறந்தாலும் நற்குணத்துடன் வாழலாம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இத்தலம் அமைந்துள்ளது.

குடவரைக்கு தென்புறத்தில் சற்று கீழே உள்ள பாறையை ஒட்டி தாயார் அரங்கநாயகியும், அங்குள்ள பாறையில் புடைப்பு சிற்பமாக துர்க்கையும் காட்சி தருகிறார்கள். குடவரைக் கோயிலுக்கு செல்லும் வழியில் படிக்கட்டின் ஆரம்பத்தில் நாலு கால் மண்டபம் உள்ளது. சங்கு, சக்கரம், நாமம், திருப்பாதம், மற்றும் ஐந்து அனுமனின் சிற்பங்களும் உள்ளன. மலைக்கு மேலே செல்லும் வழியில் இலட்சுமி தீர்த்தம் என்ற சுனையும் அருகில் இலட்சுமி கோயிலும் அமைந்துள்ளது.

செஞ்சியை ஆண்ட தேசிங்குராஜனின் குல தெய்வம் இந்த அரங்கநாதர். ஒரு முறை தேசிங்கு தன்னை எதிர்த்த ஆர்க்காடு நவாப்புடன் போருக்கு செல்லும் முன் இங்கு வந்து பெருமாளை வணங்கினார். ஆனால் பெருமாளுக்கோ தேசிங்கு போருக்கு செல்வது பிடிக்கவில்லை. எனவே தன் முகத்தை திருப்பிக் கொண்டார். (பெருமாள் முகம் திரும்பியிருப்பதை நாம் இப்போதும் தரிசிக்கலாம்). இருந்தாலும் தேசிங்கு போருக்கு சென்று எதிரிகளை விரட்டியடித்து விட்டு தானும் வீர மரணம் எய்தினார் என்பது வரலாறு. சைவத்தில் திருக்கடையூரில் காலனை சிவன் அழிக்கிறார். அதே போல, வைண வத்தில் பெருமாள் இத்தலத்தில் எமனை எச்சரிக்கை செய்வது போல தெற்கு நோக்கி தன் திருமுகத்தை வைத்துள்ளார். சுமார் 14 அடி நீளமுள்ள இந்த பெருமாளை தரிசனம் செய்பவர்களுக்கு எமபயம் கிடையாது. அத்துடன் 60, 70, 80ம் திருமணம் செய்பவர்கள் இங்கு வந்து செய்வது சிறந்தது என்பது ஐதீகம். செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியைத் தன்மார்பில் வைத்துக்கொண்டு தன் பாதத்தை குபேரனின் திசையான வடக்கு நோக்கி வைத்திருக்கிறார். இவரது பாதம் பார்த்து வணங்குபவர்களுக்கு வறுமை நீங்கி செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.

மலையின் மேல் உள்ள இந்த கோயில் கருவறையில் பெருமாள் சயன கோலத்திலும், முன்புறம் ஸ்ரீதேவி, பூதேவி யுடன் உற்சவராகவும் அருள் பாலிக்கிறார். பாறையை குடைந்து கட்டப்பட்டுள்ள குடவரைக் கோயிலான இத்தலம், சிற்பிகளின் திறமைக்கு எடுத்துக்காட்டாக சிற்பக் கலையில் சிறந்து விளங்குகிறது. கோயிலானது இரண்டு வரிசைத் தூண்களும், அரைத் தூண்களும் கொண்ட அர்த்த மண்டபத்தையும் நீள் சதுர கருவறையையும் கொண்டுள்ளது. முகப்பில் உள்ள இரு தூண்களும் இரண்டு அரைத்தூண்களும் கீழும் மேலும் சதுரமாகவும், நடுவில் வெண் பட்டையாகவும் உள்ளது. சதுரமான இடங்களில் தாமரை இதழ்கள் செதுக்கப்பட்டுள்ளது. கருவறையின் பின் சுவரில் கந்தர்வர்கள், பெருமாளின் நாபிக்கமலத்தில் உதித்த நான்முகன், கருடாழ்வார், மதுகைடபர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். பெருமாளின் திருவடிக்கு கீழே பூமி தேவியும், முழங்கால் அருகே பிரகலாதனும், தலைக்கு மேல் சக்கரமும் உள்ளது. சுமார் 14 அடி நீளமுள்ள இந்த பெருமாளைத் தரிசனம் செய்பவர்களுக்கு எமபயம் கிடையாது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவராகவும் அருள் பாலிக்கிறார். பாறையை குடைந்து கட்டப்பட்டுள்ள குடவரைக் கோயிலான இத் தலம், சிற்பிகளின் திறமைக்கு எடுத்துக்காட்டாக சிற்பக் கலையில் சிறந்து விளங்குகிறது.

திருவிழா:

மாசி மகத்தன்று இத்தல பெருமாள் புதுச்சேரிக்கு எழுந்தருள்கிறார். வைகுண்ட ஏகாதசியன்று சிறப்பு பூஜைகள் உண்டு.

கோரிக்கைகள்:

இவரது பாதம் பார்த்து வணங்குபவர்களுக்கு வறுமை நீங்கி செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *